அவ்வூரினின்றும் திருவாரூரை யடைந்து புற்றிடங் கொண்டாரையும் தியாகராசப்பெருமானையும் வணங்குதலே எல்லா வூதியங்களினும் சிறந்தது என்றதுகொண்டு அவ்வாறே பலநாளும் சென்று அவர் வணங்கிச் வந்தனர். ஒருநாள் புற்றிடங்கொண்ட பெருமானைப் பணிந்து வாழந்து போந்து திரு முன்றிலை யணைந்து அப்பாங்கு திருவரநெறிக் கோயிலினுட் புகுந்து வணங்கி அடுத்த நிலைமைக் குறிப்பினால் அங்குத் திருப்பணிகள் பலவற்றையும் செய்து இருப்பார் எண்ணில் தீபமேற்றுவது கருத்துட் கொண்டனர். அப்பொழுது பகற்பொழுதில் இறங்குமாலை யாயிடலால், தமது ஊருக்குச் சென்று வருவதாயின் பொழுது சென்றுவிடுமாதலின், அடுத்ததொரு மனையில் விளக்கு நெய் வேண்டி உட்புகுந்தனர்; அது அழிந்த நிலைமை யமணர் மனையா யிருந்தமையால் அவர்கள் "உமது இறைவர் தம்கையில் நெருப்பை யுடையவராதலின் அவருக்கு விளக்கு மிகையேயாம்; இங்கு விளக்கு நெய் இல்லை; விளக்கு எரிக்க வேண்டினீராகில் நீரை முகந்து எரிப்பீராக" என்று இகழ்ந்து கூறினர். அவ்வாறு மதியாதுரைத்த உரை கேட்டு நமிநந்தியார் மனமிக வருந்தி அப்பொழுதே அங்கு நின்றும் நீங்கிப் போந்து திருக்கோயிலின் முன் சேர்ந்து திருமுன்பு பணிந்து வீழ்ந்தனர். உடனே ஆகாயத்தில் ஒரு வாக்கு எழுந்து "வந்த கவலையை இனி மாற்றும்; மாறாத திருவிளக்குப் பணி செய்வதற்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குளத்தின் நீரை முகந்து கொண்டுவந்து விளக்கேற்றுவீராக" என்று அருளிற்று. அது கேட்டுச் சிந்தை மகிழ்ந்தனர் நமிநந்தியார்; செய்வ தொன்று மறிந்திலர்; சிவனருளினையே சிந்தித் தெழுந்தனர்; பொய்கை நடுவுட் புகுந்து சிவன் றிருநாமத்தை ஏத்தி அந்நீர் முகந்து கொண்டுஏறிக் கோயிலை யடைந்து ஒரு விளக்கில் முறுக்குந் திரியின்மேல் நீர் வார்த்து ஏற்றினர். உலகம் அதிசயிக்கும்படி அது சுடர்விட்டெழுந்தது. அது கண்டு அரனெறியார் திருக்கோயில் முழுதும் விளக்கேற்றிக், குற்றம் சொல்லிய அமணர் எதிரே நாடறிய நமிநந்தியார் நீரால் விளக்கெரித்தனர். குறையும் தகளிகளுக்கெல்லாம் அவை விடியுமளவும் நின்றெரியும்படி நிறைய நீர் வார்த்தபின், மனையின் நியதி தவறாமல் சிவனை அருச்சனை செய்யும் பொருட்டுப் பணிந்து அவ்விரவே திருவாரூரினின்றும் புறப்பட்டுத் தம் பதியில் வந்து என்றும்போல் நியமப்படி இரவு சிவபூசை செய்து அமுத செய்து பள்ளிகொண்டனர். புலர் காலையில் நியதியான தமது பூசனையை முடித்துக்கொண்டு திருவாரூரில் மீண்டணைந்தனர். அரனெறியார் கோயிலை வலங்கொண்டு பணிந்து எழுந்து, புறத்தும் உள்ளும் பணிகள் பலவும் செய்து, அந்தியில் முன்னை நாட் போலவே அரிய விளக்கை ஏற்றினர். இவ்வாறு பல நாளும் பணி செய்து அவர் ஒழுக, அந்நாளில், தண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்து, சார்பில்லாத அமணர்கள் எல்லாம் திருவாரூரினின்றும் துரத்தப்பட்டழிந்தொழியவே, ஏழுலகும் போற்றும் பெருமை திருவாரூரின்கண் விளங்கிற்று. சோழவரசன் நமிநந்தியடிகளாரின் நற்றொண்டாகப் புற்றிடங்கொண்ட பெருமானுக்கு வேண்டும் அமுதுபடி முதலாக நித்தநிபந்தம் பலவும் ஆராய்ந்து, சிங்காசனத்தில் வீற்றிருந்து, வேதாகம நூல் விதி விளங்கும்படி அமைத்தனன் அதுவன்றி வீதிவிடங்கப் பெருமானுக்குப் பங்குனி உத்தரமாகிய உயர்ந்த திருநாட் சிறப்பும் விண்ணப்பம் செய்தபடி இறைவர் திருவிளையாட்டுக் கொண்டருளும் செயலும் நேர்பெற்றனராகி நாமுய்ய நமிநந்தியடிகள் எந்நாளும் நன்மை பெருகத் தொழுதனர். |