ஒருநாள் தியாகேசர் எழுச்சி திருமணலிக்கு எழுந்தருள, யாவர் என்னாது எல்லாக் குலத்தினுள்ளோரும் மேவ, நமிநந்தியாரும் உடன் சேவித்து இறைவரது திருவோலக்கத்தை அங்கே கண்டுகளித்தனர். மாலையில் இறைவர் திருக்கோயிலுக்கு மீண்டும் எழுந்தருளத், தொழுது, தம்மூர் அணைந்து, மனையினுள் புகுதாதே இருள் சூழும் இரவில் மனைப்புறங்கடையிற் றுயில, மனைவியார் வந்து "சிவபூசனை முடித்துத் தீவேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீராக" என்றனர். அதற்கு நமிநந்தியார் "இறைவரது திருமணலிக் கெழுச்சி சேவிக்க உடன் எங்கும் எல்லோரும் போத எனை இழிவு தொடக்கிற்று; ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே மனையினுட் புகுந்து பூசை தொடங்கவேண்டும்; அதற்கு நீ சீத நன்னீர் முதலாயினவற்றைக் கொண்டு இங்கு அணைவாய்" என்றனர். அவரும் அவ்வாறே கொணரக் கடிதணைந்தனர். அப்பொழுது - பெருமானுடைய திருவருளாலேயோ? திருமேனி யசைவின் அயர்வாலோ? நாம் அறியோம் - சிறிதும் தாழாமல் நாயனாருக்கு உறக்கம் வந்தது. இறைவரது கழலை நினைந்தபடியே தூய அன்பர் துயில் கொண்டனர். அப்பொழுது அவர் கனவில், தியாகேசர் அவரது பூசைக்கு வருவார்போல வந்து தோன்றித் "திருவாரூர்ப் பிறந்தார்களெல்லாம் நமது கணங்களேயான பரிசு காண்பாயாக" என்றருள்செய்து மறைந்தனர். நமிநந்தியார் உணர்ந்து "இரவு அருச்சனை செய்யாது குற்ற நினைந்தேன்" என்று அஞ்சி எழுந்த அப்படியே வழிபட்டு, மனைவியாருக்கும் சொல்லி, விடியற்காலையில் விரைவோடு திருவாரூர் புகுந்தனர். அந்நகரை எதிர் காண்பவர், அங்குப் பிறந்து வாழ்வாரெல்லாரும் சிவபெருமானது திருவடிவே யுடையார்களாகிச் சிவவொளி பெற்ற மேனியாராகி விளங்குதல் கண்டு தலைமேற் கூப்பிய கையுடன் அஞ்சி நிலமிசை வீழ்ந்து வணங்கிக் களித்தனர். அவ்வடிவம் மாற்றிப் பழம்படியே நிகழ்வும் கண்டு, இறைவனிடம் அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டுமென்று பணிந்தனர். திருவருளால் தம்மூரை யகன்று திருவாரூரிற் குடியும் புகுந்து வாழ்ந்து நெடிதுகாலம் திருத்தொண்டுகளைச் செய்து வந்தனர்; சிவனடியார்களுக்கு நெடுநாள் நியதியாக வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் "தொண்டர்க்கு ஆணி" என்று திருநாவுக்கரசர் பாராட்டும் பேறும் பெற்றனர். இவ்வாறு அவர் திருப்பணிகள் பலவும் செய்து பல காலம் வாழ்ந்து, தியாகேசரது திருவடி நீழலை யடைந்தனர். _____ தலவிசேடம் :- (1) ஏமப்பேறூர் - இஃது இப்போது திருமப்பற்று என்றும், நெய்ப்பேறு என்றும் வழங்குகின்றது. நெய்ப்பேறு என்பது மருவி (திரு)மப்பற்று என வந்தது போலும். நெய்ப்பேறு என்பது நெய் வேண்டி நீரை விளக்கு நெய்யாகப் பெற்றவரது ஊர் என்ற காரணக் குறியாகப் போந்த பெயர் என்று கருதப்படும். இங்குப் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. நமிநந்தியாருக்குத் தனியாலயமும் உண்டு. அவரது திருமனையினையே அவர் கோயிலாக ஆக்கிப் பிற்காலத்தார் வழிபட்டு வருகின்றனர் என அஃது அறியப்படுகின்றது. அவரது திருவுருவம் பூணூலும் முன் குடுமியும் கொண்டு, தோளில் விளக்கு நெய்க் குப்பியுடன் விளங்குகின்றது. சிவாலயம் இந்நாயனார் வழிபட்ட பெருமையுடையது. இதனைத் திருப்பணிசெய்து நன்கமைத்தல் பெருஞ் சிவபுண்ணியமாகும். இத்தலம் திருவாரூருக்குத் தெற்கில் திருத்துறைப்பூண்டி போகும் கற்சாலையில் ஆறு நாழிகை யளவில் உள்ளது. |