குறிப்பு :- திருவெண்ணெய் நல்லூரினின்றும் வடக்கில் இரண்டு நாழிகையளவில் மட்சாலை வழி மலட்டாற்றின் தென்கரையில் உள்ள ஏமப்பூர் என்பதனோடு இது மயங்கி யறிதற்பாலதன்று. அது நடு நாட்டில் உள்ளதன்றியும், சரிதத் தொடர்பொன்றுமில்லை. (2) திருமணலி :- திருவாரூருக்குத் தென்மேற்கில் நான்கு நாழிகையளவில் உள்ள வூர் என்பதும், இவ்வூருக்கு முன்னாளில் திருவாரூரினின்றும் இறைவர் எழுச்சி பெற்று எழுந்தருளும் வழக்கு நிகழ்ந்திருந்ததென்பதும் அறியப்படுகின்றன. இப்போது அது நீண்ட நாளாக நிகழ்கின்றதில்லை என்பதும் தெரிகின்றது. (3) (நாயனார் விளக்குக்கு நீர் முகந்த) திருக்குளம் : - தேவதீர்த்தம் என்னும் கமலாலயம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாயனார், திருக்கோயிலின் முன்புறம் திருமுன்பு வீழ்ந்து வருந்தி முறையிட்டபோது "இந்த மருங்கிற் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும்" என்று திருவாக்கு எழுந்ததாக, உடனே நீர் முகந்து கொண்டு வந்தனர் என்றும் அறியப்படுதலால் இது, தேவாசிரியனுக்கு அடுத்த மேல்புறம் உள்ள சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளமாம் என்பது அறிஞர் பலரின் கருத்து; விளக்கு நெய் வேண்டிப் புகுந்த அமணர்மனை திருக்கோயிலுக்கு மேல்பால் கமலாலயக் குளக்கரையில் இருந்ததென்பது தண்டியடிகள் புராணத்தாலும் அறியக்கிடக்கின்றது. _________ கற்பனை :- (1) பெரியோர் வாழும் தலங்களின் தாவர முதலிய இயற்கையமைப்புக்களும் அப்பெரியோர்களது சீலவொழுக்கத்தின் காட்சி பெற விளங்குந் தன்மையுடையன. (1868) (2) திருவாரூர்ப் பெருமானை வணங்குவது உயிர்களுக்கு எவ்வூதியமுமாகும் பெருஞ் சிறப்புடையது. (1871) (3) சிவ புண்ணியங்களின் பொருட்டுப் பிறர்பாற் பொருள்கள் வேண்டுதல் இரப்பு என்னும் இழிவின்பாற் படாது. (1874) (4) அவ்வக் காலங்களிற் செய்ய எண்ணிய சிவபுண்ணியங்களைத் தமது பொருள் உதவாவிடினும், பிறர்பாற் பொருள் பெற்றேனும் காலம் தவறாது செய்தலும் தகுதியுடையது. (1874) (5) சிவ புண்ணியங்களுக்காகப் பொருள் வேண்டப்பட்டோர் இயன்ற அளவு ஏற்ற பொருள்களை உதவுதலால் தாமே அச்சிவ புண்ணியம் செய்த பலனைப்பெறுவர். அவ்வாறு உதவமாட்டாதோர் வரளா விருத்தலன்றி, அப்புண்ணியங்களையும் அவற்றில் முயல்வோரையும் அவமதித்துக் கூறுதல் கொடும்பாவம். அவர்கள் அரசனாலும் இறைவராலும் தண்டிக்கப்படுவர். (1875, 1876, 1879, 1883). இவ்வாறுள்ள பாவத்திற் பங்குபற்றிக் கொடிய பாதகத்துக்காளாவோர் பலப் பலரை இந்நாளுலகிற் காணவுள்ளது வருந்தத்தக்கது. (6) சிவபெருமான் றிருக்கோயிலில் விளக்கிடுதல் ஞானத்துக் கேதுவாகிய பெருஞ் சிவபுண்ணியமாம். (7) சிவனருள் விளக்கத்திற்குக் காரணர்களான பெரியோர்கள் பெயரால் இறைவருக்கு நித்திய பூசைக்கும் நைமீத்திகச் சிறப்புக்களுக்கும் அரசாங்க நியமப்படி நிபந்தங்கள் அமைத்தல் முந்தை நாளில் மனுநீதிச்சோழர் முதலிய அரசர்களின் வழக்கு (1884 - 1885). இது பின்பற்றத்தக்க நல்வழக்கு. (8) இறைவரின் சிறப்புக்களைப் (திருவிழா) பெரியோர்கள் கண்டு வழிபட்டுச் சேவிப்பது உலகமுய்தற் பொருட்டாகும். (1886) |