(9) மக்கள் பலரும் கூடும் இடங்களில் யாவர் என்னாது எங்குமெல்லாக் குலத்திலுள்ளோரும் ஒன்றாய் விரவி உடன் நண்ண நிகழ்வது இழிவு தொடக்குதற் கேதுவாகும். அதனைப் போக்கித் தூய்மை செய்துகொள்ளுதல் வேண்டுமென்பது நூல்களுள் விதித்தது. (1889 - 1890). ஆனால் அப்பொதுவிதி திருவாரூர்ப் பிறந்தார்களிடத்துச் செல்லாது. (1892) (10) குளித்தற்குச் சீத நன்னீரே தகுதியுடையது. (1890) (11) விழிப்பு நீங்கி உறக்கம் வந்தபோதும் இறைவன் திருவடிகளை மறவாது நினைந்த வண்ணமாகத் துயில்வது பெரியோர் தன்மை. (1891) (12) உயிர்கள், தாமே காணமாட்டாமல் இறைவனருள் காட்டக் காணும் இயல்புடையன. (1892, 1894, 1895) (13) திருநாவுக்கரசர் முதலிய பரமாசாரியர்களது திருவாக்கிற் பாராட்டிப் பேசப்படுவது கிடைத்தற்கரிய பெரும்பேறு. (1896) (14) முன்னைத் தவத்தினால் ஞானம் பெற்று முத்தியடைதற்குத் தகுதி யுடையவர்களே திருவாரூர்ப் பிறக்கும் பேறு பெறுவர். (1892) நமிநந்தியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று. திருநின்ற சருக்கம் முடிந்தது திருத்தொண்டர் புராணம் முதற் காண்டம் திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் உரையுடன் நிறைவாயிற்று திருச்சிற்றம்பலம் சேக்கிழார் பெருமான் சேவடி வாழ்க. |