இராமேச்சுரம் செல்வதற்குக் கடற்கரை ஓரமாக ஒரு பெருவழி இருந்தது. அதில் அங்கங்கும் யாத்திரிகர்கள் தங்குதற்கு விடுதிகளும் சத்திரங்களும் கட்டப்பட்டிருந்தன. அதற்குச் சத்திரச்சாலை என்று பெயர். அச்சாலை வழியில் இவ்வூர் உள்ளது. திருஞான சம்பந்த நாயனார் இவ்வழியே தான் இராமேச்சுவரத்திலிருந்து சோழ நாட்டுக்கு எழுந்தருளினார் என்று தெரிகிறது. தொன்மை - திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன் இருந்தே இவ்வூர் சிறப்பாக விளக்கம் பெற்றிருந்தது. குலச்சிறை நாயனார் அவதரித்த பெருமை பெற்றது. மங்கையர்க்கரசி யம்மையாரும், நின்றசீர் நெடுமாற நாயனாரும், குலச்சிறை நாயனாரும், திருஞானசம்பந்த நாயனாருடன் கூடி நான்கு நாயன்மார் ஒரு காலத்தில் எழுந்தருளியிருந்த தனிச் சிறப்புப் பெற்ற தலம் இங்கு பழையசிவாலயங்கள் இரண்டு உண்டு. அவற்றுள் குலச்சிறையார் வழிபட்ட தலம் இப்போது அணிமையில் பழுது பார்க்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர்களுக்குள் நிகழ்ந்த போர்களில் இலங்கை மன்னனான பராக்கிரமபாகுவின் உதவிகொண்டு பாராக்கிரம பாண்டியன் தன் பகைவன் குலசேகரனது படைகள் தங்கிய வடமண மேற்குடி மக்குடி முதலிய ஊர்களை எரித்து வேலன் குடி சென்றான் என்ற வரலாறு இலங்கைச் சரித்திரமாகிய மகா வமிசத்திலும் பாண்டிய நாட்டுக் கல்வெட்டுக்களிலும் காணப்படும். அப்போது வடக்கும் தெற்குமாக இவ்வூர் இரண்டு பிரிவுகளாக இருந்தது. ஃ ஃ ஃ ஃ பெருமிழலைக் குறும்ப நாயனார் :- ஊர் - இவர் அவதரித்த ஊர் பெருமிழலை; அது பாண்டிய நாட்டைச் சார்ந்த ஓர் ஊர். ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகள் "மிழலை நாட்டுப் பெருமிழலை" என்று கூறுவதனால் மிழலை நாடு பாண்டிய நாட்டின் ஓர் உள்நாடு ஆகும்; அதன் தலைநகர் பெருமிழலை. மிழலை என்ற பெயருள்ள ஊர் வேறு நாடுகளிலும் உண்டு; மிழலை நாட்டு மிழலை; வெண்ணி நாட்டு மிழலை; சோழ நாட்டு வீழி மிழலை.1 தொன்மை - முன்னை நாளில் நாட்டுப் பிரிவுகளைக் கூற்றம் என வழங்கினார்கள். மிழலை நாட்டை மிழலைக் கூற்றம் என்றனர். புறம் - 24; அகம் 266 பார்க்க. இது முட்டூற்றுக் கூற்றத்தோடு இணைத்துக் கூறப்பட்டது ஆராய்ச்சிக்குரியது. புறம் 24-ல் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப்பாடிய மாங்குடிகிழார் "மிழ லையொடு....முத்தூறு தந்த கொற்றம்" என மிழலை முத்தூறு எனும் இரண்டு கூற்றங்களையும் நெடுஞ்செழியன் வென்ற செய்தியைக் குறிக்கிறார். இப்பாட்டினால் மிழலைக் கூற்றம் கடற் கரையைச் சார்ந்ததென்று கருத இடமுண்டு; அதனை வேள் எவ்வி யிடமிருந்து நெடுஞ்செழியன் வென்று கைப்பற்றினதாகத் தெரிகிறது. அகம் - 266-ல் இச்செய்தி தெரிகின்றது. - இனி, 7-ஆம் நூற்றாண்டில் இந்திய நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்த யுவான்சங்கு என்ற சீன யாத்திரிசன் மலகூடம் என்றதொரு நாட்டைப்பற்றி எழுதியுள்ளான்; அதுவே பாண்டிய நாட்டு மிழலைக் கூற்றமாக இருக்கக் கூடுமென்று சரித ஆராய்ச்சியாளர் திரு. K.V. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கருதுகின்றார்கள்; அது காஞ்சியினின்றும் 3000-ம் லீ என்ற அளவில் இருந்ததாக அவன் கூறுவதால் அது மதுரைக்கு அருகில் இருக்கலா மென்றும் அதனால் அதுவே பாண்டிய ___________ 1. | தலவிசேடம் III-815 பார்க்க. மிழலைநாடு புதுக்கோட்டைச் சீமையில் உள்ளதென்பதே ஆராய்ச்சியிற் கண்டது - (ப-ர்). |
|