பக்கம் எண் :


112திருத்தொண்டர் புராணம்

 

 அலைபுரிவா" யெனப்பாவி வாயலாஞ் சாதுரைத்தார்
 கொலைபுரியா நிலைகொண்டு பொய்யொழுகு மமண்குண்டர்.

89

(இ-ள்.) வெளிப்படை. மேலாம் நெறியாகிய சமண சமயத்தையும் அழித்து, அதனால், உன்னுடைய நிலைமையின் நின்ற பழைய ஒழுக்கத்தின் நெறியினையும் அழித்த அறிவில்லாத அவரை, வருத்தக் கடவாய்" என்று வாயினால் ஒரு சிறிதும் அச்சமின்றி உரைத்தனர், கொலைசெய்யா நிலையை மேற்கொண்டு அதனின்றும் பொய்த்து ஒழுகும் பாவிகளாம் அமணர்களாகிய கீழ்மக்கள்.

(வி-ரை.) சமயந்தன்னை அழித்து - நெறி - அழித்த - சமயத்தையும் அழித்து நெறியினையும் அழித்த. எண்ணும்மைகள் தொக்கன. ஒரு செயலாலே சமயத்தின் பால் அபசாரமும் அரசன்பா லபசாரமும் என்ற இரண்டு குற்றமும் செய்யப்பட்டன என்றபடி. "சமயலங்கனமும் தெய்வநிந்தையும்" (1348) என்றதுகாண்க.

உன்னுடைய......நெறியழித்த - "நின் சமயம்" 1352 பார்க்க. அரசனுக்குக் கோபமூட்டும்படி அவ்வாறு கூறினார்கள்.

பொறியிலி - பொறி - அறிவு - அரசன் அறிந்தாற்றண்டிப்பன் என்ற அறிவு இல்லாதவர் என்பது குறிப்பு. "பொறியிலாய்" (திருநீலநக்கர் புராணம் 13).

அலை புரிதலாவது - அலைத்தல் - வருந்துதல். இங்கு கொல்லுதல் என்ற பொருளில் வந்தது. அலை - பிறவினைப்பொருளில் வந்த முதனிலைத் தொழிற் பெயர். பின்னர் அவர்கள் சொல்லும் நான்கு தண்டனைகளும் கொலையினையே குறித்தல் காண்க. அதுபற்றியே கொலைபுரியா நிலைகொண்டு பொய் யொழுகும் என்றார். முன்னர்க் "கொல்லாமை மறைந்துறையும்" (1302), "கொலையும் பொய்ம்மையு மிலமென்று கொடுந்தொழில் புரிவோர்" (1346) என்றதும் காண்க.

வாயால் அஞ்சாது உரைத்தார் - வாயினாற் சொல்லவுந் தகாது என்பது குறிப்பு. அஞ்சாது - தாம்கூறும் அறிவுரைக்கு மாறாவதும் கருதாது என்பதாம்.

பொய் ஒழுகுதலாவது - தாம் சொல்வதற்கு மாறாகத் தாமே ஒழுகுதல், "பொய்துவாழ் வார்மனம் பாழ்படுக்கும்" (செவ்வழி - கடனாகை -7) என்றது காண்க.

பாவி - அமண் குண்டர் என்க. குற்றமற்றவரைக் குற்றஞ் சொன்னதுடன் கொலைத் தண்டனையும் செய்யச் சொன்னமையால் பாவி என்றார். பாவி வாய் - பாவஞ்சொல்லும் வாய் என்றுரைப்பினுமமையும்.

குண்டர் உரைத்தார் - என்று கூட்டுக. முதலில் நிற்கவேண்டிய குண்டர் என்ற எழுவாய் கடையில் நின்றது. குண்டர் முன்னிற்கலாகார்; கடையே நிற்கத்தக்கார் என்பது போதரக் "கொலை"யிற் றொடங்கும் கடையடியிற் கடையில் வைக்கப்பட்டார். கொலைஞராதலிற் கடையரிற் கடையர் என்பது - இது போலவே "பொய் தவ வேடங்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்" (473), "மாபாவிக் கடையமணர்" (1374) என்றவை
காண்க.

அலைபுரிவாய் - அரசனெறியினை அழிப்பவர்க்கு இந்நாட் சட்டத்தினும் கொலைத் தண்டனை விதித்தமையும், சமணர்களுள் சமய அழிவுக்குக் கொலையே பரிகாரமாகக் கொள்ளும் மரபும் ஈண்டுக் கருதுக. கொலை - பொய் - முன்னரும் "கொலையும் பொய்ம்மையும்" (1346) என இரண்டனையும் சேர்த்துரைத்தமை காண்க. இவை யிரண்டும் ஒன்றுபோன்ற மாபாதகங்களாம். இவை இரண்டினையும் விலக்குதலே தரும மென்பது வேதம்.

அலைபுரிவோம் - பரவி - என்பனவும் பாடங்கள்.

89