பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்113

 

1355.

 அருள்கொண்ட வுணர்வின்றி நெறிகோடி யறிவென்று
 மருள்கொண்ட மன்னவனு மந்திரிக டமைநோக்கித்
"தெருள்கொண்டோ ரிவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
 பொருள்கொண்டுவிடாதென்பாற்கொடுவாரு" மெனப்புகன்றான்.

90

(இ-ள்.) வெளிப்படை. அருளுடை உணர்ச்சியில்லாமல், அறிவு என்று எண்ணி மயக்கத்தினை மேற்கொண்ட அரசனும் மந்திரிகளைப் பார்த்து "அறிவுடையோர்களாகிய இவர்கள் சொன்ன தீயவனைப் பொருள் பெற்றுக்கொண்டு விட்டுவிடாதபடி பிடித்துத் தண்டிப்பதற்காக என்னிடத்துக்குக் கொண்டு வாருங்கள்" என்று சொன்னான்.

(வி-ரை.) அருள்கொண்ட உணர்வு இன்றி - முறை செய்யும்போது அரசனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது அருள் என்பதனை வற்புறுத்தி முதற்கண் வைத்தது காண்க. அருளினால் நீதி அமைவுபடுத்தப்படுகின்றது (Justice tempered with mercy) என்பர் அரக்கர்குண மிகுந்த நவீனரும்.

நெறி கோடி - தனது நாட்டில் உள்ள எல்லாச் சமயத்தையும் புரத்தல் அரசனது கடனாயிருப்பவும் சமய மாறுதல்பற்றித் தண்டிக்கத் துணிந்தமையால் அரசின் நன்னெறி கோடிற்று என்பதாம்.

அறிவென்று மருள் கொண்ட - மயக்கத்தினையே அறிவு என்று மேற்கொண்ட என்க. இதுவே உலகர்நிலை. இது ஆவணமலத்தின் செயல். மருள் - மயக்கம் - பிறழ உணர்தல் குறித்தது. அறிவும் சீலமும் இல்லாத அமணரை அவையுடையாராகக் கருதி அவர் சொன்ன சொன்ன அவ்வாறே அமைந்து ஒழுகியதே ஈண்டு மருள் எனப்பட்டது. நூல்களில் விதித்தபடி தனது நல்ல அறிவொளியை உயரத்தூண்டி அதன்வழி நில்லாது, தன்னை மயக்கிய பிறர் வசப்பட்டான் என்பார் அறிவென்று என்றார். இது தெருள் கொண்டார் என்று சமணரை அரசன் கூறுகின்றதனாலும், "தமக்குறுதி யறியாத புல்லறிவோர்" என்று ஆசிரியர் பின் கூறுவதனாலும் இனிது விளங்கும்.

தெருள் கொண்டோர் இவர் - தெளிந்த அறிவுடையோர்களாதலின் இவர் சொன்னபடி செய்தல்வேண்டுமென்பது கருத்து. சொன்ன - கொன்னதனால் அந்த என்பது குறிப்பு. சொன்ன - கூறிய. குறிக்கப்பட்ட.

பொருள் கொண்டு விடாது - அரச காரியஞ் செய்வோர் கைக்கூலி (இலஞ்சம் என்பர்) பெற்றுக்கொண்டு தமது கடமையிற் சோர்வுபடுதல் அந்நாளிலும் அரசனறிந்த வழக்குப்போலும். அவனை அறவோனாக் கருதிப் பொருட்படுத்தி விட்டுவிடாது என்றுரைத்தலுமாம் என்பர் ஆறுமுகத் தம்பிரானார். அபராதம் முதலியவற்றோடு விடாமல் என்றுரைப்பினுமாம். அரசாணையின்பாலும் நீதிமுறையின் பாலும் அஞ்சி ஒழுகுதல் மக்கட்கூட்ட நல்வாழ்வுக்கும் இறைவனது முறைக்கும் ஏற்றதென்பது நமது முந்தையோர் கொண்ட கொள்கை முறையிட்ட அந்தணர் பின் தாமே சென்று திருநீலகண்டர் தில்லைவாழந்தணர்கள்பால். முறைப்படுகின்றமையும், ஆளுடைய நம்பிகளும் சுற்றத்தாரும் மணவினையை விட்டுக் கிழவேதியன்பின் திருவெண்ணெய்நல்லூர்ச் சபையோரிடம் தாமாகச் சென்று முறைப்படுகின்ற அமைதியும், பழியஞ்சிய திருவிளையாடலில் காட்டில் நின்ற வேடுவன் அந்தணன் பின் சென்று அரசனிடம் முறைப்படுகின்ற ஒழுங்கும் இங்கு நினைவு கூர்தற்பாலன. அவ்வாறன்றி முறைப்பட்டாரைப் பொருள் கொண்டு விடுதலும், அவரும் வலிந்தும் பொருள் தந்தும் பிறவாறும் அரசாணைக்