| தோமாலைச் செந்தமிழின் செழுந்திருந்தாண் டகம்பாடி "யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார். |
93 1357. (இ-ள்.) வெளிப்படை. போய்ச் சேர்ந்த மந்திரிகளும், சேனைவீரர்களும் மின்போன்ற ஒளி விளங்கும் புரிசடையினையுடைய வேதியராகிய சிவபெருமானது அடியவரைச் சூழ்ந்துகொண்டு, "இன்று அரசன் நும்மைத் தன்பால் வரும்படி கூவி எம்மை ஏவி விடுத்தனன்; போதுமின்" என்று சொல்ல, நின்ற அவர்களை நேர்நோக்கி, நிறை தவத்தோராகிய திருநாவுக்கரசர் சொல்வாராகி, 92 1358. (இ-ள்.) வெளிப்படை. "நாமார்க்கும் குடியல்லோம்" என்று தொடங்கி, நான்மறையின் றலைவரும், க்ங்கை நதியுடன் குளிர்மதிவாழும் சடையுடையவருமாகிய சிவபெருமானை இனிய செந்தமிழின் மாலையாகிய செழிய திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப், "பொருந்தும்படி நீவிர் அழைக்கும் தன்மையில் நாம் இல்லோம்" என்று அருளிச் செய்தனர். 93 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1357. (வி-ரை.) அமைச்சருடன் சேனை வீரரும் - அமைச்சர்களும் தானையொடு சென்றார் என முன்பாட்டிற் கூறியபடி சென்ற சேனைவீரர். சேனைவீரர் சிறைப்படுத்திக் (arrest) கொண்டு வருவதற்காக உடன் சென்றவர். அடியவரைச் சூழ்ந்து - என்க. சூழ்ந்து கொள்ளுதல் அவர் தப்பி ஓடிவிடக் கூடாதபடி செய்யும் உபாயம். ஒருவரது மனையைச் சூழ்ந்து கொள்ளுதல் முதலியனவாக நவீனர் செய்யும் உபாயங்களையும் காண்க. மின்தயங்கு....அடியவரை - "சடையானுக்கு ஆளாய்" (1352) என்று முன்னர்க்கூறிய கருத்தைத தொடர்ந்து இங்கு வேணி என்றார். மின்தயங்கு புரிவேணி - சிறையிடும் பொருட்டுக் காரமண் குழுவாற் சூழப்படினும் அதனை வெளியாக்கி, அதனடுவிலும் விளக்கமுறுவர் என்பது குறிப்பு. முன்பாட்டில் முகில் சூழ்ந்து - என்ற குறிப்பும் காண்க. வேதியனார் - வேதங்களை அருளியவர். வேதங்களின் பொருளாவார் என்பதாம். வேதியனார் - பரிசவேதிபோலத் தம்மை அடைந்தாரது பசுத்தன்மையை வேதித்து வேறுபடுத்துபவர் என்ற குறிப்பும்பட நின்றது. சமண சமயப் பற்றினின்றும் வேதிக்கப்பட்டவர் என்றும் குறிப்பும்பட இங்கு இப்பெயராற் கூறினார். பற்றறுத்த என முன்பாட்டிற் கூறியதும் காண்க. இன்று....போதும் - இன்று அழைத்து எனவும், இன்று விடுத்தான் எனவும் இருபாலும்கூட்டி உறைக்க நின்றது. இன்று இப்பொழுதே எங்களுடன் வருதல் வேண்டும் என்றது அவசரமான அரச கட்டளை என்பதுபட உரைத்தனர். அரசன் நுமை அழைத்து எனற்பாலது துமை அரசன் எனக்கூறியது சினமும் விரைவும் குறித்தது. அழைத்து எமை - கூவி, அதனை நிறைவேற்றும் பொருட்டு எங்களை. அழைக்கெமை - என்பது பாடமாயின் அழைக்க எங்களை என்க. அழைக்க - ஈற்றகரம் கெட்டது. நின்றவரை - காரியம் நிறைவேற்றும் பொருட்டால் நின்றபடியே இருந்தவர். நேர்நோக்கி - ஒரு சிறிதும் கலக்கமின்றி அவர் முகநோக்கி. நேர்நோக்கிட விதியிலாரையும் நோக்கி என்ற குறிப்புமாம். நிறை தவத்தோர் - "பண்டுபுரி நற்றவத்துப் பழுதின் அளவு இறைவழு" வினாராதலின் அக்குறையை நீக்கிச் சூலைதந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அடைந்து விட்டமையின் முன்னைக் குறைவுடைய தவம் நிறைவாக்கப்பெற்றவர். |