குறை நீக்கி நிறைவாக்கிய தவத்தினையுடையோர். "நிறைதவத்தை யடியேற்கு நிறைவித் தென்றும் செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை" (திருச்செங்காட்டங்குடி - தாண்டகம்) என்ற திருவாக்கும் ஈண்டுக் கருதத்தக்கது. 92 1358.(வி-ரை.) "நாமார்க்கும் குடியல்லோம்" - இது நாயனார் அப்போது மந்திரிகள் அழைத்ததற்கு விடையாக அருளிச்செய்த திருத்தாண்டகப் பதிகத்தின் தொடக்கச் சொற்றொடர். நாம் - என்ற பன்மை, சிவனிடத்தும் அடியாரிடத்துமன்றி, மற்றெல்லாவிடத்தும் சிவனடியோம் என்று நிமிர்ந்து தலைவணங்காமையாகிய இறுமாப்பும் வீரமும் குறித்தது. "இறுமாந் திருப்பன் கொலோ", "வீரமென்னால் விளம்புந் தகையதோ" முதலிய திருவாக்குக்களும், இத்திருப்பதிக முழுமையும் வரும் கருத்துக்களும் காண்க. யார்க்கும் - சிவபெருமானாகிய கோமானையும் அவனடியாரையு மொழிய ஏனை யாவரையும் உள் அடக்கிய முற்றும்மை. "யார்க்கும் குடியல்லோம்....ஆனால் கோமாற்கே நாமென்று மீளாவாளாய்" எனப் பின்னர்த் தொடர்ந்து கூறுதல் காண்க. குடி அல்லோம் - "அரசன் நுமை அழைத்து" என்றதனால் தனக்குக் கீழ் உள்ள குடிகளையே அரசனாவான் தன்பால் அழைக்க உரிமையுடையவன். நாம் அவ்வாறு குடியல்லோமாதலின் அவன் எம்மை அழைக்கும் உரிமையிலன் என்பது குறிப்பு. "நீரழைக்கும் அடைவிலம்" என்பது இதனாற் போந்த கருத்தாலும் காண்க. நான்மறையில் கோமானை - வேதம் முதலிய எல்லா நூல்களாலும் காட்டப்படும் முழுமுதல்வன். கோமான் - "கோமாற்கே" என்ற பதிகக் குறிப்பு. அவனே அரசர்க்கரசனாவான் என்பதாம். நதியினுடன் குளிர்மதி வாழ் சடையானை - தம்மை யடைந்தார்க் கருள்செய்து வாழ்விக்குந் தன்மை குறிப்பிட்டபடி. "சடையானுக்கு ஆளாய்" (1352) என்று சமணர்கள் இலேசினாற் கூறிய தன்மையாவது நதியையும் மதியையும் வாழ வைத்து அவரது பேரருளைப் புலப்படுத்தி நிற்பதாம் என்றார். அதுபோலவே வந்து அடைந்த நாயனாருக்கும் அருளி அழியா வாழ்வினைத் தந்தவர் என்பதும் குறிப்பு. வாழ் என்ற கருத்தும் காண்க. அச்சமணர்கள் தம்முடன் கொண்டு போய் அலைபுரிந்து தாழவைக்க முயன்றாலும் அவர் அடைவது பெருவாழ்வேயாகும் என்பது கருத்து. தேமாலைச் செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம் - திருத்தாண்டகப் பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த இடம் இதுவே முதலாதலின் அதன் தன்மையை இவ்வாறு விரித்தனர். தேம் - சொல்லினிமையும் ஓசையினிமையும், மாலை - ஒரு பாட்டினுள்ளே பல பெயரும் தொடர்ந்துவந்து ஓரிடத்து முடிபுறும் தன்மையும், செந்தமிழ் - நிரம்பிய தமிழினிமையும், இன் - பொருளினிமையும், செழுமை - பயனினிமையும், திரு - இறைவனது தன்மை பற்றிய நிலையும், தாண்டகம் - யாப்பும் பண் வகையும் உணர்த்தின. இங்குக் கூறிய அடைமொழிகள் தாண்டகங்கட்குப் பொதுவாகவும், இப்பதிகத்துக்குச் சிறப்பாகவும் உரியன. தேவாரத்தினைத் தாண்டகச் செய்யுளால் திருநாவுக்கரசர் ஒருவரே யருளியிருத்தலால் அவர்க்குத் தாண்டகவேந்தர் என்று பெயராயிற்று. ஆமாறு - உமது ஏவல் பொருந்தும்படி அழைத்து விடுத்தவனிடம் அரசனாந் தன்மையும், அழைக்கப்படும் எம்மிடம் குடியாந்தன்மையும் பொருந்தும்படி என்க. அடைவு - தன்மை. அடைவு இலம் - சேரும் தன்மையாகிய அதனில் நாம் இல்லோம். அழைக்கும் ஆறு ஆம் அடைவு இலம் என்று கூட்டி அழைத்தற்கேற்ற தான முறையிலம் என்றுரைத்தலுமாம். |