பக்கம் எண் :


118திருத்தொண்டர் புராணம்

 

இனி....தீர்ந்தோம் - இதுவரை குறையிருந்தது. இனி இதுவும் இது போன்றவையும் ஆகிய எந்த குறையும் இல்லோம். இப்போது வந்த இடர்களாகிய சமணத் தொடக்கும் நோயும் முதலியன தீர்ந்தோம். துகிலுடுத்து...திரிவார் - இது பூ அரசர்களை நாவரசர் மதித்த மதிப்பு. "பாராண்டு பகடேறி வருவார்" என்றதும் காண்க. சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே - சொற் கேளாமைக்குக் காரணம் துரிசற்றோமாயினமை என்றபடி. துரிசு - அரசாணைக் குட்படுத்தும் குற்றம். அரசனது குடியாதலினின்றும் நீங்கி இறைவனுக்கே யாளாயினமையால் அக்குறைபாடு நீங்கினோம் என்பதாம். ஓகாரம் எதிர்மறை. -(3) வாரண்ட....சேரோம் - இது நாயனாரது துறவுநிலை குறித்தது. புரோதாயம் - நீராடலின் ஒரு விசேடம். "முந்திர்வந்து புரோதாய மூழ்கி" (செவ்வழி - கேதாரம் - 3 பிள்ளையார்). தீர்த்த விசேடம் என்பாருமுண்டு. நீறணியும்.......பெற்றோம் - "மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட", "உருவார அணிந்து" (1332) "வடிவிற் பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசு" (திருஞான - புரா - 270), "துய வெண்ணீறு துதைந்த பொன்மேனி" (1405) என்பனவாதி புராணத் திருவாக்குக்கள் இந்த ஆதரவுபற்றி எழுந்தன. "காராண்ட....பெற்றோம்" கண்ணீர் மழை போல வார்தலும் மனங்கரைதலும் அன்பினிலக்கணம். "மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும்", "வந்திழி கண்ணீர் மழையும்", நாயகன் சேவடி தைவரு சிந்தையும்" முதலியனவாகப் புராணங் கூறியவை இதுபற்றி எழுந்தன. கன்மனமே - கரைய - முன்னர்க் கல்போன்றிருந்த அதுவே என்று ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது. இழிவு சிறப்பும்மைப் பொருளில் வந்ததெனினு மமையும். சோர்தல் - தம்மை யறியாது பெருகுதல். கரைதல் - வாழ்த்தல். சொல்லுதல் எனினுமாம். கடவோமோ பற்றற்றோமே - பற்றற்றோ மாதலின் கடவோமல்லோம். -(4) உறவாவார் உருத்திரபல் கணத்தினோர் - இதனை "சுற்றம் மாசிலா வீச னன்பர்" என்றது திருவிளையாடற் புராணம். உடுப்பன சீளொடு கோவணம் - "கந்தை மிகையாங் கருத்தும், என்பது காண்க. மாட்டார் - வலியிலா ராவார் என்பது குறித்தது செறுவார் - செறுதல் கருதிய சமணர். "பேயர்" (7), "நின்றுண்பார்" (8), நாணற்றார்" (10) என்பன காண்க. தீமை தானு நன்மையாய்ச் சிறப்பதே - பிற்சரித விளைவின் குறிப்பு. சிறப்பது - சிறக்கவுள்ளது. பிறப்பிற் செல்லோம் - சிவனை அடையாத ஏனையோர் பிறந்திறந் துழல்வர் என்பது. நறவார்....தொடர்வுற்றோமே - பிறப்பிற் செல்லாமைக்குக் காரணம் கூறியபடி. சீரார் நமச்சிவாயஞ் சொல்ல வல்லோம் - நமச்சிவாயத் திருப்பதிம் அருளிச் செய்து கடலினுட் கண்மிதப்பித்த பிற்சரிதங் காண்க. சுறவாரும்...சோதியையே - அழிக்க வந்த காமனை விழித்தெரித்த கடவுளை அடைந்தமையால் எம்மை அழிக்க வருவனவும் எரித்தழிக்கப்படும் என்பது குறிப்பு. ஏகாரம் - தேற்றும்; பிரிநிலையுமாம் -(5) என்றும் - யாவர்க்கும் - முற்றும்மைகள். இன்றுமட்டு மன்றிப் பின் என்றைக்கும் - உமக்கே யன்றிப் பின் எவர்க்கும். இடைதல் - பின்னடைதல். கீழ்ப்படுதல். எதிராவார் - பகைவர். சேர்வோமல்லோம் - சேரப் பெற்றோம் - புண்ணியத்துளோம் - காரணங் கூறியபடி. சிறுதெய்வம் - செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள். அருகன் முதலிய புறச் சமயத் தெய்வங்களையு முள்ளிட்டு நின்றது. சேரப் பெற்றோம் - இப்போது வந்தடையும் பேறு பெற்றோம். நண்ணிய - என்றதுமது. ஒன்றினால் - முற்றும்மை தொக்கது. உறுபிணியார் - ஆர் பன்மை திருவருளால் வந்த சூலையின் உயர்வு குறித்தது. இகழ்ச்சி குறித்ததெனினுமாம். ஓடிப்போதல் - சேய்மையாக அகன்றவிட்டமை குறித்தது -(6) முவுரு - பிரமன் - விட்டுணு - உருத்திரன். முதலுரு - காரணமாயினஉரு. இருநான்கான மூர்த்தி - எட்டு