மூர்த்தம். "நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்" என்பது திருவாசகம். முப்பத்து மூவர் தேவர்கள் - முப்பத்து முக்கோடி தேவர். 33 என்பது வகை குறித்தது. கோடி என்பது தொக்கு நின்றது. மிக்கோர் - தேவரினும் சிறந்த முனிவர் முதலினோர். என்னும் நாவுடையார் - என்று துதிக்கும் அடியவர். ஆள உடையார் - ஆதலின் - கடவமலோம் என்க. காவலரே - ஏகாரம் தேற்றம். விடுத்தாரேனும் - இவ்வரசனே யன்றி அவனும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. கடுமையொடு களவற்றோம் - பிறர்பாற் கடுமையும் பிறர் உடைமையின்பாற் களவும் என்ற இரண்டும் தான் ஒருவனை அரசாணைக் குட்படுத்துவது என்பது நம்முன்னோர் கண்ட முறை. உடலைப் பொறுத்த குற்றம் - சொத்தைப் பொறுத்த குற்றம் என்று குற்றங்களை வகைப்படுத்துவதும் பார்க்க. நீதிமுறையானன்றிக் குடிகளை வருத்துதல் கொடுங்கோன்மை என்ப. இந்நாள் நாகரிக மாக்கள் என்பாரின் போர்முறை அநீதிகளை நோக்குக. -(7) நிற்பன - நடப்பன - சரம் - அசரம் என்ப. நிலன்...வான் - ஐம்பூதங்கள். ஓடு உருபு உருவத்தினின்று அருவத்தைப் பிரித்தது. நெடுவான் - நெடுமை - ஏனைய நான்கிற்கும் நிரந்தரமாய் இடங்கொடுத்து நிறைந்து நிமிர்ந்தமை குறித்தது - அற்பம் - பெருமை - சிறியதினும் சிறியதாயும் பெரியதனிற் பெரியதாயும் உள்ள தன்மை. "அணோரணீயாந்மகதோர் மகீயாந்" என்பது வேதம். "நிகரிலா மேருவரை யணுவாக நீண்டானை....நொய்யானை" (திருஞான - புரா - 402) முதலியவை காண்க. அருமை - எளிமை - பிறர் யாவர்க்குமருமையும் அடியார்க்கு எளிமையும் குறித்தன. தற்பரம் - தான் - உயிர். உயிர்களுக்கு முதல்வன். தானும்...தன்மை - உயிர்களுடன் இறைவன் காணமுடியாதபடியும் பிரிக்கமுடியாதபடியும் கலந்த நிற்கின்ற அத்துவிதக் கலப்பு. அறிவிக்கும் சித்தாதலின் தானும் என முன்வைத்தார். நன்மையோடும் பொற்புடைய - உடைய மொழிகள். நன்மை - பயன். பொற்பு - மொழியினிமை. பேயர் பேசுவன - அவ்வாறு பயனும் சுவையுமில்லாதன. பிழை அற்றோமே - பேசுதற்கும் பேசாமைக்கும் காரணம் கூறியபடி. முன்னர் இகழ்ந்துரைத்துப் பிழை செய்தமை குறிப்பு. "ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே" (ஏழைத் திருத்தாண்டகம்).- (8) இப்பாட்டில் இறைவனது தடத்த சொரூப இலக்கணங்களும் அருளியல்பும் போற்றப்பட்டன. நின்றுண்பார் - சமணர். நினையச் சொன்ன வாசகம் - அவர்கள் சொன்ன உபதேசமொழிகள். மன்னவன் - நீவிர் எம்மை அழைத்து எமைவிடுத்தான் என்ற அம்மன்னவன்.- (9) உம்மோடு....படை - மந்திரிகள் சேனையுடன் வந்தனர் என்பது, "முரசதிருந்தானையொடு" (1356), "சேனை வீரரும் சூழ்ந்து" (1357) என்ற புராணம் இதுபற்றி எழுந்தது. பாசமற வீசும் படியோம் - பணியோ மல்லோம் என்ற துணிவுக்குக் காரணம் கூறியபடி. மேற்சரித விளைவு வீசும்படியினை விளக்குவது காண்க. படி - பண்பு.- (10) நாவாரப் பாடுதலாவது - நாவின் ஆர்வம் நிரம்பும் வரையில் துதித்தல். "தோளினொடு கைகுளிரவே தொழுமவர்" (சாதாரி - பிள்ளையார் - வைகா - 7), "கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும், எண்ணார வெண்ணத்தா லெண்ணியும்" (அம்மையார் - அற் - அந் - 85). நாணற்றார் - சமணர். நள்ளாமே - இனி உறவாகாமல். இனி "உறவாவார் உருத்திர பல்கணத்தோர்" (4) என்றது காண்க. விள்ள. - நீங்க. ஆ! ஆ! என்பது இறைவனருளின் விரைவும் பரிவும் குறித்தது. அடுக்கு மிகுதிப்பொருளது. அமரர்நாதன்....சிவன் - சிவனது பெருமையும் ஏனைத் தெய்வங்களது சிறுமையும் குறிக்கப்பட்டன. "சிறு தெய்வம்" (5) என்றது காண்க. தென்திசைக் கோன் - இயமன். தானே - இவ்வரசனேயன்றி அவனே என்று தேற்றம்படக் கூறியது. இயமன். |