தூதுவரன்றி இயமனே என்ற குறிப்பும் காண்க. கோவாடி - அரசனாந் தன்மையினை மேற்கொண்டு. எண் குணத்துளோமே - குணமாகக் கொள்ளாமைக்குக் காரணம். எண்குணமாவன. சிவபெருமானது இறைமைக் குணங்களெட்டு. அவை தன்வயத்தனாதல் முதலாயின. "எண் குணத்தான்" (குறள்) பரிமேலழகர் உரை பார்க்க. எண்ணத்தானாகிய சிவனுக்கு ஆட்பட்டதனால் அவன்றன்மையடைந்தோம். ஆதலின் அவனால் உதைத் துருட்டப்பட்ட இயமனுக்கு உட்படோம் என்பது. "நமனை யஞ்சோம்" (1) என்று தொடக்கத்துக் கூறியது காண்க. 93 1359. | ஆண்டவர சருள்செய்யக் கேட்டவரு மடிவணங்கி, வேண்டி, யவர்க் கொண்டேக, விடையுயர்த்தார் திருத்தொண்டர் "ஈண்டுவரும் வினைகளுக்கெம் பிரானுள"னென் றிசைந்திருந்தார்; மூண்டசினப் போர்மன்னன் முன்னணைந்தங் கறிவித்தார். |
94 (இ-ள்.) வெளிப்படை. ஆண்ட அரசுகள் இவ்வாறு அருளிச் செய்யக்கேட்டு, அந்த அமைச்சர்களும் அவரது அடிகளில் வணங்கி, வேண்டிக்கொண்டு, அவரை உடன்கொண்டு செல்ல, இடபக்கொடியை உயர்த்த சிவபெருமானது திருத்தொண்டராகிய அவர், "இங்கு வரும் வினைகளுக்கு எமது பெருமான் துணையுள்ளார்" என்று அதனுக்கு இசைவுடனிருந்தனர்; அவர்களும் கொண்டு சென்று மூண்ட சினத்தினையுடைய போர்வல்ல அரசன் முன்பு அங்குச் சென்று அறிவித்தனர். (வி-ரை.) ஆண்ட - சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட. செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. அடிவணங்கி வேண்டி - அவர் மறுத்தமையால், வலிமை செய்து கொண்டு செல்ல அஞ்சியவர்களாய், அரசன் தம்மை ஒறுத்துத் தமது பிழைப்பினைப் போக்குவான்; தம்மைக் காக்கும் பொருட்டேனும் உடன் வந்தருளவேண்டும் என்பனவாதி சொற்களைச் சொல்லிப் பிரார்த்தித்து. அவர்க்கொண்டேக - கருணையினால் அவர் அவர்களுடன் செல்ல ஒருப்பட்டமையால் அவரைத் தம் உடன்கொண்டு சென்றனர் என்க. விடையுகைத்தார் - "சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி யேர்காட்டுங், கோதிலா வேறாங் கொடி" (தசாங்கம் - 10) என்பது திருவாசகம். இத்தன்மையாற் கூறியது இத்திருத்தொண்டரது செய்கையினாலே சமணர் அஞ்சி அகல நேர்ந்ததென்ற பின் சரிதங் குறிப்பதற்காம். அவரது கொற்றக் கொடியே வெல்வது. கொடியுகைத்தல் - போர்த் தொடக்கக்குறி. வெற்றிக்குறியாதலும் காண்க. ஈண்டுவரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் - ஈண்டு - இங்கு. இவ்விடத்து என்றது இவ்வாறு தாம் அவர்களுடன் செல்லும் இடத்து என்பதாம். ஈண்டுதல் - நெருங்குதல் - மிகுதல் என்று கொண்டும், ஈண்டு வினை எனக் கூட்டியும், வினைத் தொகையாக்கிப் பின்னர் வெந்தபொடி, விடம், வேழம், வேலை என்ற ஒன்றின்மேலோன்றாய் நெருங்கிவரும் எனப் பிற்சரித நிகழ்ச்சிக் குறிப்பாகக் கூறுதலுமாம். வினைகளுக்கு உளன் - வினைகள் - துன்பங்கள் - மிறைகள். வினைகளுக்கு - வினைகளைப்போக்க என, நோய்க்கு மருந்து என்புழிப்போல, நான்காம் வேற்றுமை பகைமைப் பொருளில் வந்தது. இசைந்து - அவர்கள் தம்மை உடன்கொண்டு செல்வதற்கு ஒருப்பட்டு. இசையாது மறுத்திருப்பரேல் அவர்களால் கொண்டு ஏகுதற்குக் கூடாமலிருந்திருக்கும் என்ற துணிபு குறித்தது. அவர்க்கு மன்னவனால் தண்டம் நிகழாமற் |