பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்121

 

காக்கவும், அரசன் வழிநிற்கும் உலகநீதி காக்கவும், சைவப் பெருமை காட்டவும் இசைந்தனர் என்க. இருந்தார் - உடன் பட்டனர்.

மூண்டசினம் - மூளுதல் அடக்கவும் அவிக்கவும் இயலாதபடி நெருப்புப்போல மூண்டு எழுந்து நின்ற சினம். சினம் மூண்ட என்று மாற்றிக் கொள்ளுதலும் பொருந்தும்.

முன் அறிவித்தார் - அரசனது அரண்மனை வாயிலின் முன்பு. தாம் வந்த செய்தியையும் பிறவரலாறுகளையும் சொல்லி விடுத்தனர் என்க.

94

1360.

பல்லவனு மதுகேட்டுப் பாங்கிருந்த பாயுடுக்கை
வல்லமணர் தமைநோக்கி, "மற்றவனைச் செய்வதினிச்
சொல்லு"மென, வறந்துறந்து தமக்குறுதி யறியாத
புல்லறிவோ ரஞ்சாது நீற்றறையி லிடப்புகன்றார்.

95

(இ-ள்.) வெளிப்படை. பல்லவ அரசனும் அதனைக்கேட்டுப் பக்கத்திலிருந்த பாயுடுக்கையுடய வலிய அமணர்களைப் பார்த்து "மற்றவனை இனிச் செய்வது இன்னதெனச் சொல்லும்" என்று கூற அறத்தையுநீத்துத் தமக்குறுதியு மறியாத புல்லிய அறிவுடைய அந்த அமணர்கள் சிறிதும் அஞ்சாமல் நீற்றறையில் இடும்படி சொன்னார்கள்.

(வி-ரை.) பல்லவன் - சோழ அரசர்களுள் பல்லவ மரபு ஒன்று. அந்நாளில் அரசியற்றியவன் மகேந்திரவர்மன் என்பவன். இவனுக்குக் குணபரன் என்ற பேரும் சிறப்பாக வழங்கியது. இவனது திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு, நாயனாரது காலத்தை நிச்சயிக்கவும், ஆளுடைய பிள்ளையாரது காலம் சிறுத்தொண்டர் வாதாவிப் போர்பற்றி நிச்சயிக்கப்பட்ட முடிபை உறுதிப்படுத்தவும் உதவி புரிவதாம். 1349, 1410, 1411 பாட்டுக்கள் பார்க்க. இவனது காலம் கி.பி. 640 ஆண்டின் பக்கமென்பது சரித ஆராய்ச்சியாளரின் இற்றைநாட் டுணிபு.

பாயுடுக்கை - பாயுடுத்தல் அமண்குருமார் மரபு. வல் அமணர் - திண்மை - வலிமை. நேர்மைக்கஞ்சாத துன்மதியின் திண்மை குறித்து நின்றொழிந்தது.

மற்றவனை இனிச்செய்வது சொல்லும் - என்க. மற்று - குருமார் சொல்லையே நம்பி "இவர் சொன்ன தீயோன்" (1355) என்று முன்னரே அரசன் துணிந்து விட்டானாதலின் மற்று என வேறுபடுத்திக் கூறினான். அவனை என்ற ஒருமைச் சுட்டும் அக்கருத்துப்பற்றியது.

செய்வது - செய்ய வேண்டுவதனை. இரண்டனுருபு தொக்கது.

அறம் துறந்து...புல்லறிவோர் - அறம் - தமது சமயத்தில் முதன்மையாக எடுத்துக் கூறப்படும் கொல்லாமையாகிய அறம். "அறவினை யாதெனிற் கொல்லாமை" (குறள்). அந்த அறத்தையும் எனச் சிறப்பும்மை தொக்கது. நீற்றறையிலிடப்புகன்று கொலை செய்யும்படி கூறியதனால் அறந் துறந்தனர். தமக்குறுதியறியாத - தமக்கு விருத்திதரும் இம்மைப் பயனும், நன்மைதரும் அம்மைப்பயனும் ஆகிய இரண்டு உறுதிகளையும் அறியாத. உறுதி - முடிந்த நன்மை. அறந்துறந்தமையால் உயிர்க் குறுதியாகிய நன்மையறியாராயினர். சூலைநோய் தீர்ந்த திருவருளின் துணையால் தமது சூழ்ச்சியையும் அவர் கடப்பார்; அவ்வாறு கடப்பரேல் அரசனாற் றுறக்கப்பட்டுத் தமது சமயம் அழியும்; தம் விருத்தியும் கெடும்; என்றறியாமையால் உறுதியறியாராயினர். பிறர்க்குறுதி யறியாராயினும் தமக்குறுதியும் அறியாராயினர் என்பதுமாம். புல்லறிவோர் - இவ்வாறு இரண்டுமறியாது பொய்மையைமேற்கொண்டமையால் புல்லறிவோராயினர் என்றார். உறுதியும்