பக்கம் எண் :


122திருத்தொண்டர் புராணம்

 

என இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. அஞ்சாது - பழிக்கும் பாவத்துக்கும் சிறிதும் அஞ்சாது.

நீற்றறையில் இட - சுண்ணாம்பு நீற்றப்படும் - சுடும் - அறையினுள் வைக்க. வைத்தது மேல்வரும் பாட்டில் கூறுவார். இட - இடும்படி. நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய் என்பது வழக்கு.

பாங்கு இருந்த - பாங்கு - பக்கம். அவமே புரிவோராயினும் தவஞ்செய்வோர் என்ற பாங்கினில் - பண்பினில் என்றலுமாம்.

95

1361.

அருகணைந்தார் தமைநோக்கி "யவ்வண்ணஞ் செய்க" வெனப்
பெருகுசினக் கொடுங்கோலான் மொழிந்திடலும், பெருந்தகையை
உருகுபெருந் தழல்வெம்மை நீற்றறையி னுள்ளிருத்தித்
திருகுகருந் தாட்கொளுவிச் சேமங்கள் செய்தமைத்தார்.

96

(இ-ள்.) வெளிப்படை. பக்கத்தில் அணைந்தவர்களைப் பார்த்து "அவ்வண்ணமே செய்க!" என்று மிக்க சினமுடைய அக்கொடுங்கோலரசன் சொன்ன அளவில், உருகச் செய்யும் பெருந்தீயின் வெப்பத்தையுடைய நீற்றறையினுள்ளே பெருந்தகையாரை இருக்கச்செய்து திருகு கருந்தாளைக்கோத்துக் காவல்செய்து அமைத்தனர்.

(வி-ரை.) அருகணைந்தார் - பக்கத்திருந்த அமணர். மன்னவன் குறிப்பறிந்து ஏவல் செய்வதற்காக வந்து அணைந்தவர் எனினுமாம்.

பெருகுசினம் - கொடுங்கோன்மை - என்ற இரண்டினாலும் மீதூரப்பட்டானாதலின் அவ்வாறு கூற நேர்ந்ததென்பது. சினம் - உள்ளங்கவர்ந்தெழுந் தோங்குவதாகலின் நன்மை தீமைகளை நாடி யறியவொட்டாது. கொடுங்கோன்மை - ஒருப்பக்கஞ் சாய்ந்து கொடுமைபுரியச் செய்வது.

பெருந்தகை - கீழோர்செய்த அப்பெருங் கொடும் பாதகத்தையும், இவ்வாறே இனியும் செய்யநின்ற மூன்று கொடுஞ்செயல்களையும் பொறுத்துத் தாம் அவர்களுக்குத் தீமை ஒன்றும்செய்யாது ஈசனருளையே. நாடி நின்றாராதலின் பெருந்தகை என்றார். சிவத்தன்மை வாய்ந்தவர் என்றலுமாம். "பெருந்தகைமை" என்று சிவனைத் துதிக்கின்றது நாயனாரது தேவாரம்.

உருகு பெருந்தழல் - உருக்கும் என்றது உருகு என நின்றது. தன்னுளகப்பட்ட கல் முதலிய எவ்வகை வலிய பொருளையும் உருக்கும் தன்மை குறித்தது. பெருந்தழல் - அணுகுதற்குமரிய பெருநெருப்பு. தழலின் வெம்மை என்க.

திருகுகருந் தாள் கொளுவி - எளிதிற்றிறக்க இயலாதபடி பலமுறையும் திருகி இருப்புத்தாளினைக் கோக்கச்செய்து. கருந்தாள் - இரும்பினாற் செய்த தாள்.

சேமஞ் செய்தல் - தப்பி வெளிவர முடியாதபடி காவல் அமைத்தல். அவர்கள் எண்ணியது கொலையேயாயினும் உண்மையில் அவ்வாறல்லாது அது நாயனார்க்கு சேமமேயாகித் திருவடிக்கீழ் இன்பமார்ந்திருக்கச் செய்தல் என்பது குறிப்பு.

நீற்றறை - இஃது இலகுவில் தப்பக் கூடியதாயன்றி கதவும் தாளும்கொண்ட வலிய நிலையினதாம் என்க.

96

1362.

 ஆண்டவர சதனகத்து ளணைந்தபொழு தம்பலத்துத்
 தாண்டவமுன் புரிந்தருளுந் தாணிழலைத் தலைக்கொண்டே,
"ஈண்டுவருந் துயருளவோ வீசனடி யார்க்" கென்று
 மூண்டமன நேர்நோக்கி முதல்வனையே தொழுதிருந்தார்.

97