பக்கம் எண் :


124திருத்தொண்டர் புராணம்

 

(இ-ள்.) வெளிப்படை. மிகுந்த வெப்பமுடைய அந்த நீற்றறையே மிக்க இளவேனிற் பருவத்தில் தடவி வருகின்ற தண்ணிய தென்றல் அணைகிள்ற குளிர்ந்த கழுநீர்கள் நிறைந்த தடம்போன்று ஒளி மொய்த்துக்கூடிய வெள்ளியமுழுமதியின் கதிர் விரிந்து முரல்கின்ற யாழின் ஒலியுடன் கூடியதாகி, ஐயருடைய திருவடியின் நீழலினது அருள்மயமேயாகிக் குளிர்ந்ததே.

(வி-ரை.) நீற்றறையினுள் எழுந்தருளியிருந்தபோது நாயனார் இறைவனருளையே நோக்கித் துதித்த "மாசில் வீணையும்" என்ற தொடங்கும் திருப்பதிகத்தின் முதற் பாட்டினுக்கு விரிவுரை செய்து காட்டும் வகையாற் சரிதத்தைக் கூறுகின்றது இத் திருப்பாட்டு.

வெய்ய நீற்றறை தான் - தடம்போன்று - குளிர்ந்ததே - என்று முடிக்க.

இளவேனில் - தென்றல் - தடம் - நிலவு - யாழ் - இவற்றின் இயல்புகள் பொருந்தக் குளிர்ந்தது என்றபடி.

வெய்ய நீற்றறை - அருள் ஆகிக் குளிர்ந்ததே - வெம்மை தட்பமாயிற்று. நீற்றறையினுள் ஐம்பொறிகட்கும் நுகர்வாகிய ஐந்தும் வெப்பமும் கேடும் பயப்பன. அதன் வெய்ய ஓசை காதினையும், வெள்ளிய ஒளி கண்ணினையும், நஞ்சுக்காற்று மூக்கினையும், சுண்ணாம்புச்சுவை நாவினையும், வெப்பம் மெய்யினையும் ஊறுசெய்து உடலுக்குக் கேடுவிளைவித்து உயிர் போக்கும். ஆயின் இங்கு நாயனார் மனத்தால், இறைவனது இணையடி நீழலினையே நோக்கி நின்றாராதலின் அவையே இறைவனது குளிர்ந்த அருளாகி முறையே யாழின் ஒலியும், முழுமதி அலர்ந்த நிலவொளியும், வீசு தென்றலின் மணமும், இனிய தடத்தின் நீரின் சுவையும், இளவேனிலின் ஊற்றுமாகக் குளிர்ந்த நுகர்ச்சியினைத் தந்தன.

அறை அதுதான் - அதுவே. தேற்றேகாரம் தொக்கது.

வீங்கு இளவேனில் - வீங்குதல் - மிகுதல். மிக்க இளமையாகிய என்றது இளவேனிலின் தொடக்கம். வீங்கு - இனி மிக நிற்கும் என்றலுமாம்.

தைவருதல் - மெல்லத் தடவுதல். தென்றலின் மெல்லிய அசைவு குறித்தது. "நாயகன் சேவடி தைவரு சிந்தையும்" (1405) என்ற புராணமும், "தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே" என்ற பிள்ளையாரது (மேகரா - குறிஞ்சி) திருவாக்கும் காண்க.

தென்றல் - சந்தனப் பொதியினின்றும் தோன்றி வருதலானும், சோலைகளின் நுழைந்தது பல மலர்களின் தாதும் மணமும் கவர்ந்து வருதலானும், தென்றல் இங்கு நறுநாற்றப் புலனுக்குப் பொருளாக உரைக்கப்பட்டது. "துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து, தென்றல்வந்துலவிய திருநெல்வே லியுறை செல்வர் தாமே" (சாதாரி - 2) என்ற பிள்ளையார் தேவாரம் இங்குச் சிந்திக்கத்தக்கது. பொதியிலிற் பிறந்து வடக்குநோக்கித் தொண்டை நாட்டுக்குச் சென்று சேர்ந்த தென்றலைப் "பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின், கொங்கணைந்து குளிர்சார லிடை வளர்ந்த கொழுந்தென்றல், அங்கணைய" (ஏயர்கோன் - புரா - 270) என்று ஆசிரியர் பாராட்டுதலும் காண்க.

காற்றுப் பரிச உணர்ச்சிக்குச் சிறப்பா யுரியதாயினும் இங்கு மேற் கூறியவாற்றால் நாற்ற உணர்ச்சிக் கெடுத்துரைக்கப்பட்டது. இதனைப் பரிசப்புலனுக்குப் பொருளாகவும் கொண்டுவரைப்பினு மமையும்.

தடம் - அதன் நீரைக் குறித்து நின்றது. "நிழறிகழ் - நீரி லின்சுவை நிகழ்ந்தோன்" (திருவண்டப்பகுதி - 25) என்பது திருவாசகம்.