மொய்ஒளி வெண் நிலவு அலர்ந்து - ஒளி மொய்த்த என்க. நிலவு - கதிர். அலர்தல் - விரிதல். எத்தனை நேரம் கூர்ந்து எதிர்நோக்கினும் கண்ணுக்கு ஊறு செய்யாது தன் அமிர்த கலையினால் நன்மை செய்வது நிலாக்கதிர். முரன்றயாழ் ஒலி - யாழ் முரலும் என்பது மரபு. முரலுதல் மெலிந்தவோசை பரப்புதலைக் குறிக்கும். "மூக்கே நீமுரலாய்" என்பது காண்க. சுரங்களின் நல்லமைதியினால் இனிய சொற்போலப் பேசும் திறமுடையது யாழ் ஆதலின் இயங்களிற் சிறந்ததென்ப. திருவடி நீழல் - திருவருள் நிறைவு. வெய்ய நீற்றரை - அருள் ஆகிக் குளிர்ந்ததே - தூல உடம்பினால் அனுபவிக்கப்படும் இன்பத் துன்ப மோக மயமான இந்த உலக அனுபவங்கள் முதல்வனையே தொழுதிருத்தலினால் இவ்வாறு ஒன்று வேறொன்றாக மாறுதலுங் கூடுமோ? எனின், கூடும். என்னை? பருவுடம்புக்கு நுண்ணுடம்பு முதலியன முதற்காகரணங்களாம். உலகிற்கு முதற்காரணமாகியது மாயை. உயிர் ஆணவமலத்தோடு நிற்குங்காலத்து அதற்கு இருவினைக்கீடாகத் தநு - கரணம் - போகங்களை அந்த மாயை தன்னிடத்திலிருந்து தோற்றுவித்து நல்கும். உயிர் அம்மலத்தினின்று நீங்கிச் சிவனருளொடு கலந்து நிற்குங் காலத்துக், கண்ணொளிக்குப் பொருள்களைக் காட்டிநின்ற விளக்கொளி, ஞாயிற்றினொளியிற் கண்ணொளி கலந்து நின்றபோது, தானும் அந்த ஞாயிற்றினொளியினுள் அடங்கி அவ்வொளியேயாய் நிற்றல்போல, அம்மாயை மாயேயங்களும் சிவனருளில் அடங்கி அவ்வருண்மயமேயாகி நிற்கும். உயிர் திருவருள் மயமாக நிற்பின் அவ்வுயிர்க்கு இடமாகிய தநு கரணங்களும் அவைபற்றி வருவனவும் அருண்மயமாகுமென்பது "மாயை மாமாயை மாயா வருமிரு வினையின் வாய்மை, யாய வாருயி ரின்மேவு மருளினி லொளியாய் நிற்கும்" என்பதனாற் பெறப்படுதல் காண்க. ஆன்மா பசுவென்னும் பெயர் நீங்கி முத்தனாய் அருளொடுங் கூடிநின்ற வழி, அவ்வான்மாவின் வியாப்பியமான மாயை முதலியனவும், திரோதான சத்திபோலப், பாசமென்னும் பெயர் நீங்கி அருளேயாய் நிற்கும் என (சிவஞானபோதம் - 2-ம் சூத் - 2 அதி) மாபாடியத்துள் மாதவச் சிவஞான முனிவர் விரித்துரைத்ததும் காண்க. 8-ம் சூத்திரம் 2-ம் அதிகரணத்துள் "முதல்வனுக்குத் திருமேனியாகிய சைதன்னியம் முதல்வனைச் சார்ந்து அவ்வண்ணமாய வழி அவ்வுடம்பும் அவ்வா றருண்மயமே யாகலின்" என்றதும் அறிக. "துரியத்தைச், சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும், ஆக்கியிடு மன்பர்க் கவன்" (களிறு - 69), "கொல்கரியி னீற்றறையினஞ்சிற் கொலைதவிர்த்தல், கல்லே மிதப்பாய்க் கடனீந்தல் - நல்ல, மருவார் மறைக்காட்டில் வாச றிறப்பித்தல், திருவாமூ ராளி செயல்" (71) என்று இதனைத் திருக்களிற்றுப்படியாருள் விளக்கியதும் இங்குவைத்துக் கருதுக. "ஈண்டுவரும் துயருளவோ வீசனடியார்க்கென்று, மூண்ட மன நேர்நோக்கி முதல்வனையே தொழுதிருந்த நாயனாருக்கு, முன்னை வினை யாவும் முடிந்து தூயராக்கப்பட்டமையால், நீற்றறையகிய மாயாகாரியம் இறைவனதருளேயாக நின்றதன்றி அதன் காரியமாகிய ஐம்புலன்கட்படும் ஐம்பூத விடயமாகிய இன்பத்துன்ப உணர்ச்சி புலப்பட்டிலது. ஆதலின் அவை யாவும் அருண்மயமாகிய குளிர்ச்சியினையே காட்டின. ஆதலின் அருள் ஆகிக் குளிர்ந்ததே என்றார். மனநோயும் உடல்நோயம் உடையார்க்குப் பொருள்களினியல்புமாறுபட்டுக் காணும். "வெண்மதி போன்றிலை தண்மதி" (311), "சந்தின் றழலைப் பனிநீ ரளவித்தடவும் கொடியீர்" (321) என்றவை காண்க. அவ்விடத்து நம்பிகளும் இவ்வாறே "எந்தை யாரருள் இவ்வண்ணமோ?" (310) என்றதனையும் உன்னுக. பித்த |