பக்கம் எண் :


126திருத்தொண்டர் புராணம்

 

நோய் கொண்டார்க்கு யாவுங் கைப்பாகும் தன்மையும் காண்க. நோய்பொறாது சாவதனை வேண்டி நஞ்சுண்டார் சாவாது அதனால் நோய் நீங்கிப் பிழைத்தலும், வாழ்வதற்காக அமுதமுண்டார் அதுவே பயனாகச் சாதலும் உலகிற் காண்பேம். இவற்றால் புத்தியின்கண் நிகழும் அறிவு, பொருளியல்பு திரியாமலே, நுகர்வோரதியல்பு திரிந்தமையால் மாறுபடும் என்பது விளங்கும். அங்கித்தம்பனை வல்லார்க்கு அங்கி சுடாதிருத்தலையும் காண்கின்றோம். மனவசீகர நூல்வல்ல ஆசிரியனால் தன்வயப்படுத்தப்பட்ட ஒருவனுக்கு ஆசிரியன் வகுத்தவழித் தீச்சுடாமையும், தீயல்லாதவை தீப்போலச் சுடும் உணர்வுண்டாக்குதலையும் காண்கின்றோம். காளிகட்ட நகரில் (Calcutta) அங்கித்தம்பனம் வல்ல ஒருவன் தன்மேல் முழுதும் அனல் மூட்டப்பட்டு அரைநாழிகை அளவு அதன்கீழ்த் தங்கியிருந்து பின் ஊறின்றி எழுந்த செய்தியும் காண்போம். "கனன் மேலிருக்கலாம், தன்னிகரில் சித்திபெறலாம்" என்று இதனைச் சித்தர்கணம் என்ற பகுதியில் வைத்துப் பேசினார் தாயுமானார். இவையெல்லாம் எண்வகைச் சித்தின்பாற்படும். "திண்டிறற் சித்தர்களே கடைக்கூழைச் சென்மின்கள்" என்று படையெழுச்சியிற் சித்தர்களுக்குக் கடையிடம் வகுத்தனர் வாதவூரடிகள். இங்கு நாயனார் பாற்பட்டது இந்தந் தாழ்ந்த தரமான சித்துவகையன்று. பின் என்னையோ? எனின், "கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய சொல்" என்ற சொல்லினாற்றலால் ஆளுடைய பிள்ளையார் பாண்டியனது சபைமுன்பு எரியினில் இட்ட ஏடு வேவாமல் நின்றது மட்டுமன்றிப் பசுமையும் புதுமையும் பயந்து நின்றது. அதன் காரணத்தை "இளமுலை யிணையவை குலவலின் - நாமமே - எரியிடிலிவை பழுதிலை" என்று பிள்ளையார் திருவாக்கு விளக்குகின்றது. அந்தப் பதிகம் ‘போகமார்த்த பூண்முலையா' ளாகிய மலைமகள் பாகத் தட்டமூர்த்தியைப் பொருளென வுடைமையாலும், அது இடப்பட்ட தீ, இறைவனது அட்டமூர்த்தங்களுள் ஒன்றாகி நிலவுதலாலும் வேவாதாயிற்ற என்று அக்கருத்தை விளக்கினர் ஆசிரியர். அவ்வாறு இங்குக் கூடியதென்றுணர்க.

இக்கருத்துப் பற்றியே திருவள்ளுவரும் "சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின், வகைதெரிவான் கட்டே யுலகு" என்று நீத்தார் பெருமையினை உலகம் அவர் கண்ணதாய் நடக்கும் என்று விரித்தனர். "இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட், டுன்ப முறுத லிலன்" என்ற உண்மை உலகத்து ஏனை மக்களிடையினும் பொருந்துவதாயின், உலகத்தை விட்டு இறைவன்பாற் பதிந்த நெஞ்சுடையார்பால் மிகப் பொருந்துமன்றோ?

ஐயர் திருஅருள் ஆகி - என்ற கருத்தும் இது. இங்கு நாயனார் நீற்றறையினையும் அதன் தன்மைகளையும் கண்டார்; ஆயின், அடிநிழலை நேர்நோக்கினார்; அது அவர்க்கு அத்தன்மைத்தே யாகியது என்க; "பிணையுங் கலையும்வன் போய்த்தேரினைப்பெரு நீர்நசையா, லணையு முரம்பு நிரம்பிய வத்தமு மையமெய்யே, யிணையு மளவுமில் லாவிறை, யோனுறை தில்லைத் தண்பூம், பனையுந் தடமுமன்றேநின்னொ டேகினென்பைந்தொடிக்கே" (202), "... எங்கோன், றண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே" (220) என்ற திருக்கோவையார்க் கருத்துக்கள் இங்குச் சிந்திக்கத்தக்கன.

திருவருளின் வழிநின்றமைந்து இத்தகைய அருள் வெளிப்பாடுகளின் நுட்பங்களை இவ்வாறு கண்டுணரமாட்டாதார் தமது பருப்பொருளாராய்ச்சியின் துணையே கொண்டு இடர்ப்பட்டொழிவர்.

மேல்வரும் நஞ்சூட்டுதல், யானையினை இடறவிடுதல், கல்லிற்பூட்டிக் கடலில்விடுதல் என்றவற்றிலும், அவற்றின் மேல்வரும் சரித அற்புதவிளைவுகளிலும் இவ்வாறே