பக்கம் எண் :


128திருத்தொண்டர் புராணம்

 

"தண் கழுநீர்த் தடம்" என்றார் ஆசிரியர். மூசுதல் - மொய்த்தல். அறைதல் - பொருளுள்ள பண்பாடுதல். "சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு, வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலை" என்றது காண்க. ஈசன் எந்தை - உலகுக்கெல்லாம் இறைவன்; எமக்குச் சிறப்பா யருள்பவன். எந்தை - தம்மையும் தம்மை வழிப்படுத்திய தமக்கையாரையும், சிவன்வழி நிற்கும் அடியாரையும் உளப்படுத்தியது. நீழலே - ஏகாரம் தேற்றம். "சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர் துன்னு நிழலாவன...ஐயாற னடித்தலமே" என்ற கருத்தினை ஈண்டுச் சிந்திக்க - (2) நமச்சிவாயவே - ஏகாரம் பிரிநிலை. தேற்றமுமாம். சிவன்றிருநாமமே. "ஆலைப்படு கரும்பின் சாறுபோல வண்ணிக்கு மஞ்செழுந்தி னாமத்தான் காண்" என்றபடி நாயனார் அன்று திலகவதியார் தமக்கு ஓதியருளி வழிப்படுத்திய திருவைந்தெழுத்தினில் அழுந்தி நின்றனர் என்பது. நானறி விச்சையும் என்றது காண்க. அறி - அறிவிக்க, அறிந்த. விச்சை - விஞ்சை - வித்தை - மந்திரம். நாநவின்றேத்தும் - அறிவிக்க அறிந்து கொண்டமையால் அதனையே எனது நாவானது பயின்று கொண்டுள்ளது. "படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்செ னாவிற் கொண்டேன்" என்றதும் காண்க. ஏத்தும் - இடைவிடாது - எப்போதும். "நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" (நம்பிகள்). நன்னெறி - ஞானம். 1306 பார்க்க. விச்சை அறிந்தேன்; நா பயின்றது; அது நன்னெறி காட்டும்; அதுவே கல்வியும் ஞானமுமாம் என்று தொடர்பு செய்க. காட்டும் இன்று இனியும். கல்வியும் ஞானமும் - கல்வி வேறு; ஞானம் வேறு. கல்வி ஞானத்துக்கு ஏது. ஞானம் - சிவனை அறிந்து அடையச் சாதனமாவது. "சீரார் நமச்சிவாயஞ் சொல்ல வல்லோம்", "முன்னமவனுடைய நாமங் கேட்டாள்....அவனுக்கே பிச்சியானாள் ... தலைப்பட்டா ணங்கை தலைவன் றாளே" என்ற கருத்துக்கள் காண்க. தாளினில் தலைப்பட்டமையால் அடி நீழல் அருளாகிக் குளிர்ந்திருந்தது என்பது - (3) ஆளாகார் - இது முதல் ஐந்து திருப்பாட்டுக்கள் உலகத் துயிர்களை நோக்கி இரங்கிக் கூறியருளிய அருளுபதேசம். ஆளாதல் - அடிமைப்படுதல். ஆள் - அடிமையாள். ஆளாகார்......உய்யார் - சிவனுக்காளாகாமலும் அவனடியார்க் காளாகாமலும் கழியும் உலகர். "அடியார்க்கு மடியேன்" (நம்பிகள்). "அடி, யுளங்கொள் வார்தமை யுளங்கொள் வார்வினை யொல்லை யாசறுமே" (மிழலை - ஈரடி - 2) என்ற கருத்து. அடைந்துய்யார் - சிவனுக்காளாயின வழியும் அதன் பயனாய் உய்திபெறுதல் அவனடியாரை யடைந்து அவர்க்கு ஆட்செய்தவழியே கூடுவதாம் என்பது. அடியாரை அடைந்துய்ந்த சரிதங்கள் பலவும் புராணத்தினுட் காண்க. மீளா......நிற்கிலார் - சிவனுக்கும் அடியார்க்கும் ஆட்செய்யும் வகை. மெய்ம்மை - சத்தாகிய இறைவனது தன்மை. நிற்றல் - பிறழாமை. தோளாத......செவி - சுரை - செவிப்பொறிக்கு மெய்பற்றி வந்த உவமம். தோளாத - சிவனது கேள்வியாற்றுளைக்கப்படாத - கேள்வி - புகாத செவி. "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி" (குறள்). தொழும்பர் - பெத்த நிலையினும் முத்தி நிலையினும் என்றும் பதிக்கு அடிமையேயாயிருக்கும உயிர். வாளா.....கழிவர் - இரக்கக்கூற்று. பெற்ற வாழ்நாளையும் உடம்பையும் வீணே போக்கி. மண்ணாகி - மண் முதலிய ஐம்பூதங்களுடன் சேர்ந்து. - (4) நடலை - வஞ்சனை. சுடலை - சுடுகாடு. சுடலை சேர்தல் - இறத்தல் குறித்தது. சொற்பிரமாணமே - ஏகாரம் எதர்மறை சத்தப்பிரமாணத்தாற் பெறற்பாலதன்று; காட்சிப் பிரமாணத்தால் அனுபவமாகக் காணற்பாலதே. கைவிட்டால் - கை - உபசர்க்கம் என்பர். கைவிடுதல் காத்தோம்புதலை நீங்குதல். "என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்து புக், கென்னு ளேநிற்கு மின்னம்ப ரீசனே" என்றபடி நிற்கும் உயிர்ப்பு நீங்குதல்.