கழிவரே", "வாழ்த்த வாயும்...தந்த தலைவனைத் ... துதியாதே, வீழ்த்த வாவினையேனெடுங் காலமே", "தொழுது போற்றி நின்றேனை" என்றமுன்னர்த் திருப்பதிகத்துட் பேசினாராதலின் அந்த இனியானைப் பெற்று வணங்கி யினிதிருந்தார் என்பது. உலகு ஆளுடைய பிஞ்ஞகனை - உயிர்களை எல்லாம் ஆளாக உடைய என்க. ஆளாக உள்ளவர்களைக் காக்கும் கடமைப்பாடும் கருணையும் உள்ளவன் என்பது குறிப்பு. ஈசன் - இறைமையுடையோன். காரண இடுகுறியாகிச் சிவபிரானையே குறிப்பது. எம்பெருமான் - எல்லா வுயிர்களையும் ஆளுடையவனாய் எல்லாருக்கும் ஈசனேயாயினும் எமக்குச் சிறப்பாயுரியவனான தலைவன் என்றபடி. எவ்வுயிருந் தருவான் - தருதல் - தோற்றுவித்தல். காத்தல் என்றலுமாம். எவ்வுயிர் எத்தன்மைத்தாய் எங்கிருப்பினும் அவ்வவற்றுக்குள்ளும் உயிராய் அங்கங்கும் நின்று அளிப்பவன். "யோனிபேதம். நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்" என்பது பிள்ளையார் திருவாக்கு. "கருப்பைக்குண்முட்டைக்குங் கல்லினுட்டேரைக்கும், விருப்புற் றமுதளிக்கு மெய்யன்" என்றபடி இங்கு நீற்றறையினுள்ளிருக்கும் உயிரையும் அளிப்பவன் என்பதாம். ஆசையில் ஆரா அமுது - ஆசையில் வந்த உண்ணத் தெவிட்டாத அமுது போன்றவர். ஆசை - இங்கு அன்பு குறித்தது. "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்பது திருவாசகம். அமுது போன்றவரை அமுதென்றார். உவம ஆகுபெயர். அமுது மரணம் வராமற் செய்வது என்ற குறிப்பு. ஆரா என்பதை ஆசைக்கு அடைமொழியாக்கி ஆராஆசை - என்றும் நிறைவாகாத ஆசையாய் உண்ணப்படும் என்றுரையினும்மையும். அடி வணங்கி - "அடிநீழலே" என்ற திருப்பதிகக் குறிப்பு. "மாசின்மதி" முதற் குறிப்பாதல் போல இஃது ஈற்றுக் குறிப்பாதல் காண்க. இனிதிருந்தார் - நீற்றறையி னுள்ளிருந்தார்க்கு அவ்வெப்பமில்லா திருந்ததுமன்றி, மிக்க இன்பமும் கூடிற்று என்பதாம். அடியடைந்தார்க்குப் பாச நீக்கமும், சிவப்பேறும் என இரண்டும் வருதலைச் சாத்திரங்கள் கூறுவன காண்க இங்கே நாயனார் அடிநீழலிற்போல அமர்ந்தாராதலின் இங்கும் அவ்வாறே கூடிற்று என்க. அடிவணங்கி இனிதிருந்தார் - முன்னர் "முதல்வனையே தொழுதிருந்தார்" (1362) என்றார். அது ஞானத்தில் நிகழும் சரியையினையும் கிரியையினையும் குறித்தன; தத்துவசுத்தி ஆன்ம தரிசனம் விளைத்துச், சிவதரிசனம் வரை உள்ள எட்டுக் காரியங்களையும் செய்தது; இங்குக் கூறியது யோகம், ஞானம் என்ற நெறிகளைக் குறித்தன; இஃது சிவயோகம் சிவபோகம் என்ற காரியங்களைச் செய்தது. சிவயோகம் சுகப்பிரபை மாத்திரம் தருவது; சிவபோகம் பேரின்ப மாகடல். சிவயோகம் - துரியம் என்றும் சிவபோகம் துரியாதீதம் என்றும் கூறுவர். இனிதிருந்தார் என்ற கருத்துமிது. "ஈண்டு வரும் துயர் உளரே ஈசனடி ஈசனடியார்க்கு" என்ற முன்னைய நிலை துருயம், அடியாரும் ஈசனும் என்ற மூவகையுணர்வும் கொண்டு அறிந்து தொழுது வழிபட்டிருந்தநிலை; இங்கு இனிதிருந்தநிலை, அவ்வகை உணர்வுகள் ஒன்றுமின்றி உலகையும் தன்னையும் மறந்து அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி யிறைபணி நின்ற சிவயோகநிலை; இதனைச் சாக்கிரத்தில் துரியம்புரிதல் என்பர். துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளி" இவை சாதனமும் பயனுமாவன. இங்குக்கூறிய ஏழு ஏழு கோடி மகாமந்திரங்களாய் ஏழுவகைப் பிறவிகளிலும் உயிர்களை ஈடேற்றுவன என்க. இவ்வாறுள்ள ஏழுநாட்கள் சென்றதனை நாயனார் உணர்ந்தனரோ? எனின், அதுபற்றிய அறிவியல் அவரது உணர்வு சென்றதன்று என்க. திருகு கருந்தாட் |