கொளுவிச் சேமஞ் செய்யப்பட்ட நீற்றறையினுள்ளே நாயனார் இருந்தமையால் ஞாயிற்றினைச் சுற்றும் உலகந் தன்னைச் சுற்றும் வேகத்தாற் பகுக்கப்படும் நாட்கூறுகளை உணரவாய்ப்பிலர் என்று கூறலாம். ஆனால் வெளியே சரிக்கின்ற காலத்திலும் ஞாயிற்றின் செலவு பற்றிய சிற்தனையில் ஞானிகள் சரிப்பாரல்லர். "வெம்ப வருகிற்பதன்று கூற்ற நம்மேல் வெய்ய வினைப்பகையும் பையநையும், எம்பரிவு தீர்ந்தோ மிடுக்க ணில்லோ மெங்கெழிலென் ஞாயிறெளியோமல்லோம்" என்பது (தனித் திருத்தாண்டகம் - 2) நாயனார் திருவாக்கு. "எங்கெழிலேன் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்" (19) என்ற திருவாசகமும் காண்க. ஆனால் யோகிகள் ஞாயிற்றி னுதவியின்றியே நாட்கிழமைகளை யறியவல்லவர் என்பது "செவ்வாய் வியாழஞ் சன் ஞாயிறே யென்னு, மிவ்வா றறிகின்ற யோகி யிறைவனே" (3. 2. 44) என்ற திருமந்திரத்தால் விளங்கும். "கரவிலுள்ளமாம் விசும்பிடைக் காசற விளங்கும், பரசி வச்சுடர்க் குதயமீ றின்மையிற் பகலு. மிரவ நேர்படக் கண்டிலர்" (வாதவூ - உப - பட - 39) என்ற திருவிளையாடலிற் கண்ட நிலையே, நாயனார் நிற்றரையினுள் அமர்ந்து அடிவணங்கி யினிதிருந்த நிலை என்க. "சிதாதித்யோ ஹ்ருதாகாசே ப்ரதிபாதி நிரந்தரம், நாஸ்தமேதி நசோதேதிகதம் சந்தியா முபாஸ்மஹே! என்ற சுலோகத்தின் கருத்து என்ப. இனிதிருத்தல் - சிவானந்தந் திளைத்திருத்தல். எவ்வுலகுந் தருவானை - என்பதும் பாடம். 99 1365. | ஓரெழுநாள் கழிந்ததற்பி னுணர்விலம ணரையழைத்துப் "பாருமினி நீற்றறையை" யெனவுரைத்தான் பல்லவனுங்; காரிருண்ட குழாம்போலு முருவுடைய காரமணர் தேருநிலை யில்லாதார் நீற்றறையைத் திறந்தார்கள். |
100 (இ-ள்.) வெளிப்படை. ஒரேழு நாட்கள் கழிந்தபின் நல்ல உணர்வில்லாத அவ்வமணர்களைப் பல்லவ அரசனும் அழைத்து, இனி, நீற்றறையினைப் பாருங்கள் என்று சொன்னான்; கருமையானது செறிந்து இருண்டு கூடிய குழாம்போல உருவினையுடைய காரமணர், தேரும் நிலையில்லாதவர்களாகி, நீற்றறையைத் திறந்தார்கள். (வி-ரை.) ஒரெழுநாள் - ஓர் - வெறும் பெயரளவில் நின்றது. ஒன்றாகிய எழு என்றும், நினைப்பிற்குரிய ஏழு என்றும் உரைத்தலுமாம். ஒர்தல் - நினைத்தல். முன் பாட்டிற் கூறியபடி நாயனார் சிவபெருமானை அடிவணங்கி நினைந்திருந்த நாள் என்பதும், அந்த ஏழு நாட்களின் பெருமையை மக்கள் எண்ணி உய்வதற்குரிய நாள் என்பதும் குறிப்பு. உணர்வில் அமணரை அழைத்து - அவர்கள் உணர்வற்றவர்கள் என்பது அவர்களின் செயலினால் அறியப்பட்டதென்க. பாருமினி நிற்றறையை - இனி - நெருப்பினாலன்றி ஏழுநாட் பட்டினியிலேனும் இறந்துபடுதல் நிச்சயமென்றுகொண்டு இனி என்றான். கார் இருண்ட குழாம் - கார் - இங்குக் கருமைப்பண்பு குறித்து நின்றது. கார் இருண்ட என்பது கருமை செறிந்து இருளினை மேற்கொண்ட என்றதாம். குழாம் - அவ்வாறு செறிந்த காரிருட் பிண்டங்களின் கூட்டம். குழாம்போலும் என்பது உருவம் பற்றிவந்த உவமமென்பார் உருவுடைய என்று குறிப்பித்தார். "இழுதுமையிருட் கிருளென" (திருஞான - புரா - 678) என்றதும், 1349-ல் உரைத்துவையும் பார்க்க. |