பக்கம் எண் :


134திருத்தொண்டர் புராணம்

 

ஊனம் - கேடு. கெடுதி. தான் - ஒரு சிறிது தானும் என்ற பொருளில் வந்தது. முற்றும்மை தொக்கது. உவந்திருந்தார் - அமணர்கள் தாம் எண்ணியிருந்தபடி இறந்தார் எனப்படாது இருந்தார் என்றதனோடமையாது, மேலும், உவந்தும் இருந்ததனைக் கண்டார்.

ஈனம் - கேடு. அதிசயம் - "அதிசயங் கண்டாமே" என்றபடி அமணர் அதிசயம் கண்டு, இஃது ஒரு பேரதிசயம் என வியப்படைந்தனர். என்ன அதிசயம்! - ஆச்சரியக் குறிப்பு. பயனிலை தொக்கது.

தம்மைக்கண்டு - தங்கியதிலதால் - என்பனவும் பாடங்கள்.

101

1367.

"அதிசயமன் றிது; முன்னை யமண்சமயச் சாதகத்தால்
 இதுசெய்து பிழைத்திருந்தா" னெனவேந்தற் குரைசெய்து ,
"மதிசெய்வ தினிக்கொடிய வல்விடமூட் டுவ" தென்று
 முதிரவரும் பாதகத்தோர் முடைவாயான் மொழிந்தார்கள்.

102

(இ-ள்.) வெளிப்படை. "இஃது அதிசயமன்று; முன்பு சமண சமயச் சார்பினாற் பெற்ற சாதகத்தால் இதனைச் செய்து சாவாது பிழைத்திருந்தான்" என்று அரசனுக்குச் சொல்லி, "இனி, மதியாற் செய்யக் கடவது, கொடிய வலிய நஞ்சினை இவனுக்கு ஊட்டுவித்தலே யாகும்" என்று, மேன் மேலும் முதிர்ச்சியடையவுள்ள பாதகத்தவர்கள் நாற்றமுடைய தமது வாயால் எடுத்துச் சொன்னார்கள்

(வி-ரை.) இது அதிசயம் அன்று என்க. முன்னர் "என்ன அதிசயம்" என்று அமணர் கூறியது அரசன் ஏவல்வழி நீற்றறையைத் திறந்தபோது அவ்விடத்தில் அது கண்டவுடன் தமக்குத் தாமே கூறியது; இங்கு அதிசயம் அன்று என்று அதற்கு மாறுபடக்கூறியது அரசன் முன்பு அவர்கள் தமது உண்மைக் கருத்தை மறைத்து வஞ்சனையாற் கூறியது. உண்டு - இல்லை என்னும் தமது மந்திரத்துக் கேற்ப இவ்வாறு மாறுபடக் கூறுதலும் நிகழ்ந்தது
காண்க.

சாதகம் - மந்திரசாதகம். இதுசெய்து - நீற்றறையினுள் வேவாதிருத்தலைச் செய்து. இரண்டனுருபு தொக்கது.

மதிசெய்வது - மதியால் நினைந்து செய்யப்படும் செயல். படு விகுதிதொக்கது.

கொடிய வல் விடம் - அடைமொழிகள் எவ்வாற்றானும் விலக்க முடியாத வலிமை குறித்தன. இயற்கையாலே கொல்லுந்தன்மையுடைய நஞ்சினுக்கு மேலும் செய்கையானும் கொடுமையையேற்றி வலுப்படுத்தினார்.

செய்வது - ஊட்டுவது என்று முடிக்க. பெயர்ப்பயனிலை

முதிரவரும் பாதகத்தோர் - சிவாபராதமாகிய பெரும்பாதகத்தை மேன்மேலும் செய்ய உள்ளவர் மல்வரும் நிகழ்ச்சிகளையும் குறித்தது.

முடைவாயால் - வாயாற் சொல்லத்தகாததனைச் சொன்னதனால் முடைவாய் என்றார். பல் துலக்கினால் புழுக்கள் சாம் என்றுகொண்டு பல்லும் துலக்காமல் நாற்றமுடைய வாயினையுடையார் என்றதுமாம். பழுவையும் கொல்வோ மல்லேம் என்ற கொள்கை புறத்துக் காட்டுவோர், அந்த வாக்கினாலே பாதகமாகிய கொலையினைச் சொன்னார்கள் என்ற குறிப்பும் காண்க. வாயாற் சொல்லவுந் தகாதது என்றதாம்.

கடிய வல்விடம் - என்பதும் பாடம்.

102

1368.

ஆங்கதுகேட் டலுங்கொடிய வமண்சார்பாற் கெடுமன்னன்
ஒங்குபெரு மையலினா "னஞ்சூட்டு" மெனவுரைப்பத்
தேங்காதார் திருநாவுக் கரசரையத் தீயவிடப்
பாங்குடைய பாலடிசி லமுதுசெயப் பண்ணினார்.

103