(இ-ள்.) வெளிப்படை. அங்கு அதனைக் கேட்டலும், கொடிய அமணர்களது சார்பினாற் கெடுகின்ற மன்னவனும், மிகும் பெரிய மயக்கத்தினாலே, ‘நஞ்சினை ஊட்டுங்கள்' என்று சொல்லப், பகைமை பூண்டார்களாகிய அமணர்கள் திருநாவுக்கரசரை அந்தப்படியே தீய நஞ்சு கலந்தமைத்த பாற்சோற்றை உண்ணும்படி செய்தனர். (வி-ரை.) கொடிய அமண் சார்பாற்கெடும் மன்னன் - இவ்வரசன் தன்னியல்பினாற் கெடுமதியுடையவனன்று; தீய சார்பினால் கேடுற்றனன் என்பதாம். பின்னர் இவன் தனது பழவினை ஒழியச், சமணர்மொழி பொய்யென்றுகண்டு, மெய்யுணர்ந்து சைவத்திறத்தை யடைந்து பணிசெய்தமை 1410 - 1411-ல் உரைக்கப்படுவது காண்க. அக்குறிப்புப்படச் சார்பாற்கெடும் என்றார். கெடும் என்றது மேலும் இருமுறையும் கேடு உறுபவன் என்று குறித்தற்கு. ஓங்கு பெரும் மையல் - ஓங்குதல் - மேலும் பெருகுதல். இதன் பின்னரும் இருமுறை அந்த மயக்கம் கடத்தற்கரியதாய் மன்னவனைப் பிணித்துக் கேடுசெய்விக்க வல்லதாயின்மை குறித்தது. பெரு மையலாயினமையால் வஞ்சனை - பொய் - கொள்கை முரண் - நீதித்தவறு முதலியவற்றை யுட்கொண்ட சூழ்ச்சிகளைக் காண முடியாதபடி ஆக்கிற்று என்க. மையல் - உண்மை தோன்றாதபடி மயக்கம் செய்வது. பெரும் பித்தநோய் - வல்விடம் முதலியவை தலைக்கேறியபோது அறிவை மறைப்பதுபோல் இங்குச் சமணரிடம் வைத்த மிதமிஞ்சிய நம்பிக்கை அரசனது உண்மை உணரும் சத்தியைக் கவர்ந்து மயக்கிற்று. "நஞ்சு ஊட்டும்" என உரைப்ப - இங்குச் சமணர் அரசனைத் தம்வயமாக்கி மயக்கி, அம்மயக்கம் காரணமாக அவன் வாக்கினின்றும் ஆணை பெறுவதும், தம்மிச்சையே செய்யினும் அரசாணையின்படி புரிவதாகக் காட்டுவதும் குறிக்கத் தக்கன. கொலை செய்தாரைத் தண்டிப்பது வேந்தனுடைய கடனாயிருப்பவும் இங்கு அவன் வாக்கினாலே ஒருவரை நஞ்சூட்டிக் கொலை செய்யும்படி சொல்லச் செய்தலினால் அது பெரு மையலின் செயல் என்க. இவ்வாறே கூன்பாண்டியனைத் தம்வயப்படுத்திய அமணர்கள் திருவாலவாயில் பிள்ளையாரிருந்த திருமடத்தில் தீயைக் கொளுவும் செயல்புரிய அரசனாணை பெறுவதும் கருதுக. (திருஞான - புரா - 689) பார்க்க. தேங்காதார் - பகைவர். தேங்குதல் - கூடுதல் - அணைதல். "தேங்கார் திரிபுரம்" (திருநெய்த்தானம் - திருவிருத்தம்). தேங்குதல் - ஏங்குதல் எனக்கொண்டு அச்சமில்லாதார் - தீயனசெய்யத் தியங்காதார் என்றலுமாம். திருநாவுக்கரசரை - அமுதவாக்குடையவரை அத்திருவாயினுள் அமுத மூட்டுதல் தகுதியாக இருப்பவும், அதற்கு மாறாக விடமூட்டினர் என்பது குறிக்க இப்பெயராற் கூறினார். அத்தீய விடப்பாங்குடைய பால் அடிசில் - அகரச் சுட்டு, முன்பாட்டிற் "கொடிய வல்விடம்" என்றதனைக் குறித்த முன்னறி சுட்டு. பாங்குடைய என்றது கலந்து அமைத்த என்ற பொருளில் வந்தது. பால் அடிசில் - பால் கலந்து சமைத்த சோறு. இது பாயசம் என வழங்கப்படும். பாற்சோறு என்பது தமிழின் பழவழக்கு. "பாற்சோ றாக்கி" (நனிபள்ளி - நேரிசை) என்ற நாயனார் திருவாக்குக் காண்க. திருநாவுக்கரசினை - என்பதும் பாடம். 103 1369. | "நஞ்சுமமு தாமெங்க ணாதரடி யார்க்" கென்று வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே செஞ்சடையார் சீர்விளக்குந் திறலுடையார் தீவிடத்தால் வெஞ்சமண ரிடுவித்த பாலடிசின் மிசைந்திருந்தார். |
104 |