(இ-ள்.) "செஞ்சடையார்......திறலுடையார் - சிவந்த சடையினையுடைய சிவபெருமானது சீர்களை உலகில் விளங்கச்செய்யும் வன்மையுடைய நாயனார்; வஞ்சமிகு ... அறிந்தே - வஞ்சனையே மிகுந்த மனமுடைய அமணர்களது செயலால் வஞ்சனையாலமைக்கப்பட்ட தென்றறிந்தே; நஞ்சும் ... என்று - "எமது நாதருடைய அடியார்களுக்கு நஞ்சும் அமுதமே யாகும்" என்ற உறுதிப்பாடுடையவராய்; வெஞ்சமணர் ...... மிசைந்திருந்தார் - கொடிய சமணர்கள் இடச்செய்த பாற்சோற்றை உண்டு ஊனமின்றியிருந்தனர். (வி-ரை.) நஞ்சும்......என்று - இது அப்போது நாயனார் மனத்துக்கொண்ட உறுதிப்பாடு. அப்போது அவர் பாடியருளிய தேவாரப் பதிகத்தின் உட்குறிப்பு என்றலுமாம். அத் திருப்பதிகம் சிதலறித்துப்போனவற்றுள் மறைந்தது தமிழுலகும் சைவச உலகும் செய்த தவக்குறை போலும்! "நஞ்சு மமுதா மங்கலம் புகினே" என்று பிறிதோர் பொருள்பற்றிப் பாட்டியனூலார் உரைத்ததுவும் கருதுக. வஞ்சம் மிகு நெஞ்சுடையார் - அமணர். "வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்" (1347) என்று தொடங்கிய அவர்களது வஞ்சனை பின்னரும் அதிகரித்து மேற்செல்ல நின்றமையால் மிகும் என்றார். இஃது புதிதாய் உண்டாயினதன்று; அவர்களது மனத்தினுட் டங்கிக்கிடப்பதாயும் அவர்களது சமய இயல்பாயும் உள்ளது என்பது. "நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுத மாகும் - அல்லதே லமுது நஞ்சாம்" (சீவக) என்னும் அவர்தம் சமயக் கோட்பாட்டினையும் அவ்வமணர் உணராமற் செய்தது வஞ்சமிக்க மதவெறி என்க. நெஞ்சுடையார் வஞ்சனை ஆம்படி அறிந்தே - நெஞ்சுடையார்களுடைய வஞ்சத்தினால் செய்யப்பட்ட படியினை அறிந்தேயும் என்று ஆறனுருபும் இரண்டனுருபும் விரித்துரைத்துக்கொள்க. அறிந்தே - அறிந்தேயும் என உயர்வு சிறப்பும்மைதொக்கது. அறிந்தும் - மிசைந்து என்று கூட்டி முடிக்க. அறிந்தது திருவருளினாற் கூடிற்று. அதனால், "நாத னடியார்க்கு நஞ்சும் அமுதமாம்" என்று துணிந்தனர். செஞ்சடையார் - சிவபெருமான். சீர்விளக்கும திறலுடையார் - (ஆதலின்) - மிசைந்து - இருந்தார் என்று காரணப் பொருளில் வந்த பெயர். சடையாரின் சீராவது - தீமைதானு நன்மையாப் பயப்பதுவும், அடியார்க்கெளியராங் கருணைப் பெருக்குமாம். சீர்விளக்குதல் - நஞ்சுண்டும் ஊனமின்றி இருத்தலால் உலகறியச் செய்தல். "நாணிலமண் பதகருடன், ஒன்றியமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி னுறைப்பாலே, வென்றவர்" (அப்பூதி - புரா - 13) என்று அப்பூதியடிகள் கொண்டு வணங்கி உய்ந்ததும், மற்றும் உலகர் அறியநின்றதும் காண்க. திறல் - பிறர்க்கு அரிதாகிய வல்லமை. விடத்தால் இடுவித்த - விடங்கலந்து அமைத்து உண்ணுமாறு இடும்படி செய்த. அமணரின் அறிவு மயக்கம்போல் உருபுமயங்கக் கூறினார். வெஞ்சமணர் - கொலைக்குற்றம் செய்யத் துணிந்த கொடியயோர். மிசைந்து இருந்தார் - மிசைந்தும் இறவாது இருந்தனர். சிறப்பும்மை தொக்கது. மிசைதல் - விரும்பி உண்ணுதல். இருத்தல் - உயிர்வாழ்ந் திருத்தலேயன்றி மேன்மைபொருந்த இருத்தலும் குறித்தது. கிரேக்க நாட்டில் சாக்கிரடீசு என்ற ஒரு பெரிய அறிவாளிக்கு அவரது பகைவர் நஞ்சு ஊட்ட, அவர் அமைதியாக உண்டார்; அதுபோல நமது அரசுகளும் மன அமைதியுடன் உண்டனர் என்று இங்கு ஒப்புமுறை ஆராய்ச்சி செய்வாரு முண்டு. "பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் |