பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்137

 

வேண்டு பவர்" என்பது குறள். இங்கு நாயனார் நஞ்சுண்டது அதுபோன்றதன்று. நாதரடியார்க்கு நஞ்சு அமுதமேயாகும் என்ற துணிபும் திருத்தொண்டின் உறைப்புமே இங்கு முன்னின்றதும், ஏனையோர்க்கு அஃதில்லாமையும் அறிக. கிரேக்க நாட்டு அறிஞன் அவ்வாறு நஞ்சுண்டு இறந்தொழிந்தமையும் காண்க. இறவாதொழியினும் அடிமைத் திறம்பற்றிய இத்திருவருட் செயலோடு ஒப்பிடுந்திறத்தன பிற இல்லை. தெய்வத் திருவருள் கைவரப்பெறாது செத்துப் போன வேற்று மக்களைச் சிவானந்தப் பெருவாழ்வுடைய சீவன் முத்தரோடு செயலால் ஒப்புக் கூறுதல் வேண்டாதசெயல் என்க.

நஞ்சமுதமாமெங்கள் - சீர்விளங்கும் - என்பனவும் பாடங்கள்.

104

பதிகக் குறிப்பு :- செல்லரித்து மறைந்த பதிகங்களுட்பட்டு அஞ்ஞான்று நாயனார் பாடியருளிய பதிகம் மறைந்தது. அதன் உட்குறிப்பு ஆசிரியரால் "நாதனடி யார்க்கு நஞ்சும் அமுதாம்" என்பதாம் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறே "ஈண்டுவருந் துயருளவோ வீசனடி யார்க்கென்று ...... தாணிழலைத் தலைக்கொண்டே" (1362) என, "இணையடி நீழலே" என்ற பதிகக் குறிப்பினையும், "வீரட்டர்தம்மடி யோநாம் அஞ்சுவ தில்லையென் றென்றே" (1381) என "உடையார் உருவர் தமர்நா, மஞ்சுவதியா தொன்று மில்லை யஞ்வ வருவது மில்லை" என்ற பதிகக் குறிப்பினையும், "எப்பரி சாயினு மாக வேத்துவ னெந்தையை யென்று ..... அஞ்செழுத்துந் துதிப்பார்" என "நற்றுணை யாவது நமச்சி வாயவே" என்ற பதிகக் குறிப்பினையும் ஆசிரியர் எடுத்துக்காட்டி உணர்த்தியவை காண்க. இத்திருப்பதிகம் மறைந்துபட்ட தாயினும் "துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே, யஞ்செழுத் தோதினாளு மரனடிக்கன்ப தாகும, வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த, நஞ்சமுதாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே" (திருநேரிசை - 5) என்ற நாயனாரது திருவாக்கு, இப்பதிகத்துக்கு அகச்சான்றாகவும், பதிகக்குறிப்பினை எடுத்துக்காட்டுவதாகவும் விளங்குகின்றது. வஞ்சனைப் பாற்சோறு - என்ற இக்குறிப்பை ஆசிரியர் "வஞ்சமிகு செஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே" என்றருளினர். வழக்கிலா அமணர் - கொல்லாமை என்ற அறமாகிய தமது சமயக் கொள்கையின் வழக்கிலும், அதுவன்றி உலகியல் அறத்தின் கொள்கை வழக்கிலும் நில்லாதவமணர்.

துஞ்சிருள் - காலை - மாலை - மூன்று சந்திகள் - "தெரிகாலே மூன்று சந்திதியானித்து வணங்கநின்று, திரிகாலங் கண்ட வெந்தை திருச்செம் பொன்பள்ளியாரே" (நேரிசை - 7), "சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச்சகளிசெய் திறைஞ்சு" (நம்பிகள் - தக்கேசி - திருநின்றியூர் - 5), "முட்டாத முச்சந்தி" முதலியவை காண்க. தொடர்ச்சி - முன்னைத் தொடர்பு. அஞ்செழுத்தோதுதல் - திருநீற்றையஞ்செழுத்தோதி அம்மையார் கொடுத்தாராதலின் அதனையே கடைப்பிடித்தமை குறிப்பு. கல்லிற்பிணித்துக் கடலிடையிட்டபோது அருளிய பதிகமும் காண்க.

1370.

பொடியார்க்குந் திருமேனிப் புனிதற்குப் புவனங்கண்
முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிட மமுதானாற்
படியார்க்கு மறிவரிய பசுபதியார் தம்முடைய
வடியார்க்கு நஞ்சமுத மாவதுதா னற்புதமோ?

105

(இ-ள்.) வெளிப்படை. திருநீறு விளங்கும் திருமேனியினையுடைய புனிதராகிய இறைவருக்கு, உலகங்களை யெல்லாம் அழிக்கவல்ல துன்ப நீங்கும்படி முன்னை விடமானது அமுதமாகுமாகில், யாவர்க்கும் அறிவரிய தன்மையராகிய பசுபதியாருடைய அடியார்க்கு, நஞ்சு அமுதமாவதும் ஒரு அற்புதமாகுமோ? (ஆகாது.)