பக்கம் எண் :


138திருத்தொண்டர் புராணம்

 

(வி-ரை.) பொடி ஆர்க்கும் திருமேனி - பொடி - திருநீறு. "காடுடைய சுடலைப் பொடிபூசி" (பிள்ளையார் - நட்டபாடை. பிரமபுரம் - 1), "பொடிநுகரும் சிறுத்தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாக" (பிள்ளையார் - பழந்தகக்கராகம். செங்காட்டங்குடி - 10). ஆர்த்தல் - விளங்குதல். ஊழிக்காலத்தில் உலகம் எல்லாம் அட்ட சாம்பல் அப்போது அழியாது எஞ்சிநின்ற இறைவன் றிருமேனியில் விளங்குவதா மென்பர்.

புவனங்கள் முடிவார்க்கு துயர் - தேவர்களு மசுரர்களும் பாற்கடல் கடைந்தபோது எழுந்த சூலால நஞ்சம் உலகங்களை எல்லாம் அழிக்கவல்லதாய்ப் பரந்துவந்த துன்பம். முன்னைவிடம் - பெருநஞ்சு. முன்னை - முன்னாள் என்றலுமாம். ஆனால் - ஆயிற்று என்பது உண்மையேயாகில்.

யார்க்கும் படி அறிவாய என்க. யார்க்கும் - அவனருள் காட்டக்காணத பிறர் எவர்க்கும். படி - தன்மை. இன்னபடி என்ற இயல்பு. "இப்படிய னிந்நிறத்தனிவ்வண்ணத்த னிவனிறைவ னென்றெழுதிக் காட்டொ ணாதே" என்ற நாயனாரது திருவாக்குக் கருதுக.

பசுபதியார் - பசுக்களாகிய உயிர்களுக் கெல்லாம் தலைவர். முன்பு புனிதர் என்ற. அந்த என முன்னறிசுட்டுத் தொக்கது.

பசுபதியார் தம்முடைய அடியார் என்றதனால் முழுமுதலாகிய சிவனது காவலின்கீழ் அடிமைபூண்டு உள்ளவர்களாதலின் அத்தலைவனாற் காக்கப்படுவர் என்பது.

அற்புதமோ? ஓகாரவினா எதிர்மறை குறித்தது. அற்புதமன்று; இயல்பேயாம் என்றபடி. தலைவனது தன்மையே அடியவரும் பெறுவர் என்பது குறிப்பு. அற்புதமோ? என்றது ஈண்டு ஆச்சரியப்படத்தக்க அசாத்தியமான செயலோ? என்ற பொருளில் வந்தது.

அறிவரிதாம் - என்பதும் பாடம்.

105

1371.

 அவ்விடத்தை யாண்டவர சமுதுசெய்து முன்னிருப்ப
"வெவ்விடமு மமுதாயிற்" றெனவமணார் வெருக்கொண்டே
 யிவ்விடத்தி லிவன்பிழைக்கி லெமக்கெல்லா மிறுதியெனத்
 தெவ்விடத்துச் செயல்புரியுங் காவலர்க்குச் செப்புவார்,

106

1372.

நஞ்சுகலந் தூட்டிடவு நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தாற் சாதியா வகைதடுத்தான்;
எஞ்சும்வகை யவற்கிலதே லெம்முயிரு நின்முறையுந்
துஞ்சுவது திட" மென்றார் சூழ்வினையின் றுறைவின்றார்.

107

1371. (இ-ள்.) வெளிப்படை. ஆண்ட அரசுகள் அந்த விடத்தினை அமுது செய்தும் அவர்கள் முன்னே ஊறின்றியிருக்கவே, "கொடிய விடமும் அமுதமாயிற்றே" என்று அமணர்கள் வெருக்கொண்டவர்களாகி "இங்கு இவன் சாதலின்றிப் பிழைப்பானேயாகில் எமக்கெல்லா மிறுதி நேர்ந்தேவிடும்" என்று துணிந்து, பகைவர்களிடத்துச் செய்தொழிலை இங்குச் செய்யும் காவலனுக்குச் சொல்லுவார்களாய்,

106

1372. (இ-ள்.) வெளிப்படை. நஞ்சினைக் கலந்த பாற்சோற்றை ஊட்டியிடவும், நமது சமயத்திற் கண்ட விடந்தீர்க்கும் பற்றுக்கோடுள்ள மந்திரத்தினால், அதன் பயன் விளையாதபடி தடுத்துவிட்டான்; அவனுக்கு எஞ்சும்வகையில்லாவிடில், எங்களுயிரும் உனது அரசாட்சி முறையும் அழிவது திண்ணம்" என்று தீமையை யறியும் வங்சகத்தொழிலின் வழியில் நின்ற அமணர்கள் சொன்னார்கள்.

107