பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்153

 

வீசி - துதிக்கையினாற்பற்றி எறிந்து. ஈண்டு அவர் தங்களையே அவ்வாறு அரசைக் கொல் என்று ஏவிநெருங்கிய அவர் தம்மையே. ஏகாரம் தேற்றம். "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற முதுமொழிப்படி அவர்களே பட்டனர் என்பது.

அமணர் மேல் எதிர்ந்து ஓடிற்று - என்க. ஏவச் செய்தவர் அவரென் றறிந்து அவரையும் அழிக்க அவர்மேல் எதிர்ந்து ஓடிற்று என்க.

அஞ்சிய வேழம் - எதிர்த்தே - என்பனவும் பாடங்கள்.

118

1384.

ஓடி யருகர்க டம்மை யுழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையுங் கொன்று நகரங் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கு நெடுமந் தரகிரி போல
ஆடியல் யானையம் மன்னற் காகுல மாக்கிய தன்றே.

119

(இ-ள்.) வெளிப்படை. ஓடி அமணர்களை உழறியும் மிதித்தும் பிளந்தும் தேடிச் சென்று பலரையும் கொன்றும், அந்த நகரம் கலக்கமுற்று வருந்த அழிக்கும் தன்மை பூண்ட அந்த யானை அந்த மன்னவனுக்குத் துன்பத்தை அப்பொழுதே விளைத்து விட்டது.

(வி-ரை.) உழறி...கொன்று - இவை அந்த யானை அமணர்களை அழித்தவகை. நாடி - ஓடியவர்களையும் தேடிக்கண்டு. அங்கிருந்த கூட்டத்தினுள் வஞ்சித்துப் பொல்லாங்கு புரிந்த அவர்களையே நாடி என்றலுமாம்.

நகரங் கலங்கி மறுக - நகரத்திலுள்ள பிறரை அது ஒன்றும் கேடு செய்திலதெனினும் அமணர்க்குச் செய்த அழிவைக்கண்டு நகரத்திலுள்ள மக்கள் பிறரும் தாம் கலங்கினர் என்பது.

மறுகுதல் - பயமுறுதல் - வருந்துதல்.

வேலை கலக்கும் நெடுமந்தரகிரிபோல - வேலை - நகரமாந்தர்க்கும் மந்தரகிரி யானைக்கும், யானை ஓடி உழற்றுதல் - மந்தரகிரி மத்தாகக் கடலைக் கடைதலுக்கும் உவமையாயின. மெய்யும் வினையும்பற்றி எழுந்தவுவமம். மந்தரகிரியை மத்தாக வைத்துப் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கூடிக் கடைந்தனர் என்றும், அதனுள் அவர்கள் வேண்டிய அமுதம் வராது விடம் எழுந்தபோது இருதிறத்தாரும் வருந்தினர் என்றும் வரும் வரலாறு குறித்தெழுந்தது இவ்வுவமம். அக்காலை நல்லாரும் பொல்லாரும் பட்டதுபோல இக்காலை நகரமும் அமணரும் வருந்தினர் என்றதும் குறிப்பு.

மந்தரகிரி - மாமேரு. மந்தரகிரிபோல - ஆகுலம் ஆக்கியது என்க. ஆடியல் ஆடு - அடுந்தன்மை. வெற்றிமிக்க - இலக்கணமமைந்த என்பாருமுண்டு. ஆகுலம் - துன்பம் - பெருங்கவலை.

கிரியென்ன - ஆடியவ்வியானை - ஆடிய யானை - என்பனவும் பாடங்கள்

119

1385.

யானையின் கையிற் பிழைத்த வினையமண் கையர்க ளெல்லாம்
மான மழிந்து மயங்கி வருந்திய சிந்தைய ராகித்
தானை நிலமன்னன் றாளிற் றனித்தனி வீழ்ந்துபுலம்ப
மேன்மை நெறிவிட்ட வேந்தன் வெகுண்டினிச்"செய்வதென்"னென்றான்

(இ-ள்.) வெளிப்படை. யானையின் கையினின்றும் தப்பிய தீவினையாளராகிய அமணக்கீழ்களெல்லாரும், மானமழிந்து மயங்கி வருத்தமுற்ற மனமுடையவராகிச், சேனையின் வலிமையுடைய உலகங்காக்கும் மன்னவனது காலில் தனித்தனி விழுந்து புலம்பினாராக, அவர்களது சொற்கேட்டு மேலாகிய நெறியினைக் கைவிட்ட அரசன், சினந்து "இனிச் செய்யக் கடவதென்ன" என்று கேட்டான்,