அஞ்செழுத்தையும் - போற்றிட - அஞ்செழுத்தருணிலையை யெண்ணித் துதித்தமையால் அதன்வடிவேயாயின ராதலின். "விளங்கித்தோன்றினார்." (1393) என மேல் வரும் பாட்டிற் கூறுதல்காண்க. கடலினுள் கல் மிதந்தே - ஏகாரம் தேற்றம். நீரினுள் ஆழும் நியமமுடைய கல் மிதக்குமோ? எனின், ஒருகால் மிதக்கும் என்க. "நிலத்தில் வழாஅக் கல்லே போல" மேலே போகட்டதொரு பொருள் கீழே வீழ்தல் நியமமாயிருப்பினும், "அந்தரத் தகிலகோடி தாழாம னிலைநிற்கக்" காண்கின்றோம். "வெளிப்பட, மண்ணிற் றிண்மை வைத்தோன்" (திருவா - அண்டப்பகுதி - 26) என்றபடி மண்ணைக் கடினமாக்கினது இறைவன் செய்கை. சிருட்டிக் கிரமத்தில் நீரினின்றும் மண் கடினமாய்த் தரித்துக் கீழ் இறங்கி நிலைக்கு. சங்காரக் கிரமத்தில் நிலம் நீரில் கலந்து மேனோக்கும். இவையும் நியமம். (மண்ணின் திணிந்த நிலையே கல் என்ப). சிருட்டியும் சங்காரமும் நித்தியமாய் அங்கங்கும் நிகழ்வன என்பது திருமந்திரம் முதலிய ஞானநூல்களால் உணரப்படும். இங்கு ஆழ்த்தித் கொல்வதற்காக அமணரிட்ட கல்லே மிதந்து தெப்பமாக உதவியது, படைப்பாதி ஐந்தொழிற்கும் முதல்வராகிய இறைவரது நியதி என்க. நியதியாவது அவரவரா லீட்டப்படும் வினையின் பயனை அவரவரே நுகருமாறு அரசராணைபோல நியமித்து நிறுத்துவது என்பர். ஒருவன் ஒருவனைக் கொல்லும் நோக்கத்துடன், கொல்லுந் தன்மையுடைய ஒரு நச்சுப் பொருளைக் கொடுத்தபோது, அதற்குமாறாக அது அவனுடலில் முன்னிருந்ததொரு கொடு நோய்க்கு மருந்தாகி அவனைச் சாவாமற்செய்வதோடு நோயினைப் போக்குவதும் உலகிற் காண்கின்றோம். அதுபோல இங்கு ஆழவும் ஆழ்த்தவும் வேண்டிய கல் மிதந்தது என்க. கொல்ல முயன்ற பாவப்பயன் அவர்க்கும், தமது தொடக்கு நீங்க உய்ந்த பயன் இவர்க்குமாக ஒரு செயலே விளைக்குமென்க. சிவனருளால் அட்டமாசித்திகள் கைவரப்பெற்ற வித்தகச் சித்தர்களே இலகுமா - மகிமா - கரிமா - முதலிய சித்திகளால் இத்தகைய செயல்கள் செய்ய உள்ளவர் என்பதும் உலகிற் காண்கின்றோம். அத்தகைய சித்தர்களைப்பற்றி ஈசத்துவம் என்ற சித்தியினால்" தானே படைத்திட வல்லவ னாயிடும்; தானே யளித்திட வல்லவ னாயிடும்; தானே சங்காரத் தலைவனு மாயிடும்; தானே யிவனெனுந் தன்மைய னாகுமே" என்றருளினர் திருமூலர். இவையெல்லாம் அடியாரது நிலைக்குக் கீழ்ப்பட்டவை. நமது சைவ சமய பரமாசாரியர்கள் இவ்வகைய தாழ்ந்த சித்தியினா லன்றித், தமது கரணங்கள் சிவகரணங்களாகப் பெற்றமையால் பிறரெவராலும் செய்யலாகாத பெருஞ் செயல்களும் செய்ய வல்லவராயினர். "பாலை நெய்தல் பாடியதும் ...... நந்தங் கரணம்போ லல்லாமை காண்" என்ற திருக்களிற்றுப் படியார் (12) காண்க. இங்கு "நடுக்கத்தைக் கெடுப்பது", "நலமிகக் கொடுப்பது" எனவும், "எத்தவல் லார்தமக்கிடுக்க ணில்லையே" எனவும் பற்றிய வுணர்வினில் தியானித்தபோது அஞ்செழுத்தே புணையாகத் தாங்கியுய்த்தது என்க. நீற்றறையினுள்ளே நின்று நெருப்பைக் குளிர்வித்தார்க்குக் கடலினுள்ளே கல் மிதப்பதும் அருமையாகுமோ? இதனை ஆசிரியர் 1394ல் விரிப்பதுவும் காண்க. வருமலரோன் - என்பதும் பாடம். 127 1393. | அப்பெருங் கல்லுமங் கரசு மேல்கொளத் தெப்பமாய் மிதத்தலிற் செறிந்த பாசமுந் தப்பிய ததன்மிசை யிருந்த தாவில்சீர் மெய்ப்பெருந் தொண்டனார் விளங்கித் தோன்றினார். |
128 |