பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்169

 

என்ற அடைமொழிதந்து கூறினார். "இந்தக் கருணை கண்டால், மிண்டாய செய்கை யமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டா யினவண்ண மெவ்வண்ணம்" என்பதுங் காண்க. பின்னர்ப் பழையாறை வடதளிக் கோயிலை அமணர் மறைத்துப் பாழியாக்கிய கொடுஞ்செயல் கண்டபோது சிறிதும் வெகுளா திருந்தமையும் அவரது கருணையினைக் காட்டுவதாம்.

திரைக்கரங்களால் - தாங்கிட - என்று கூட்டுக. கரங்களால் சிரத்திற்றாங்குதலாவது சிரத்தில் வைத்துக் கைகளாற் றாங்கி ஏந்துதல். திரைக்கரம் - உருவகம். சிரம் - குறிப்புருவகம். தெருள்நெறி நீர்மையில் - பெருமையை அறிந்து கொண்ட தன்மையில். தெருள்நெறியாவது அடியாரைச் சிரமேற்றாங்கி வழிப்படுதல் வேண்டு மென்பதும், அப்புண்ணியப் பேறு பெருதற்குப் பெருந்தவம் செய்தல் வேண்டுமென்பதும் அறிந்து ஒழுகும் முறை.

வருணனும் செய்தனன் முன்பு மாதவம் - வருணன் தேவர்களுள் ஒருவன்; தேவர்கள் சிவனடியார்களை வழிபட்டு அவர்களது அருளைப்பெற்று உய்திபெற வேண்டிய பசுக்கூட்டத்தார்களே யாவர். அவர்கள் அடியார்களைத் தாங்கிவரும் பேறும் அடியார்கட்குப் பணிசெய்யும் பேறும் பெறுதல்வேண்டின் அது முன்பு செய்த மாதவத்தின் பயனாகக் கிடைக்கப் பெறுவதன்றி எளிதில் அவர்களுக்குக் கிட்டுவதன்று என்பதாம். வருணனும் - உம்மை இழிவு சிறப்பு. முன்பு - முன் காலத்தில் - முன்பிறவியில். மாதவம் - சாமானியமாகிய சிறுதவங்களால் ஆவதன்று என்பது. "இந்திரன் மால்பிரம னெழிலார்மிகு தேவரெல்லாம், வந்தெதிர் கொள்ள வென்னை மத்த யானை யருள்புரிந்து" (பஞ்சமம் - நொடித்தான்மலை - 9) என்ற நம்பிகளது தேவாரத்தாலும், புராணத்தாலும் அறியப்படுகின்றபடி தேவர்கள் யானையுடன் போந்து நம்பிகளை எதிர்கொண்டு கயிலைக்கு அழைத்துச் சென்றார்கள். கயிலைக்குச் செல்லும் வழியில் "ஏழிசை யின்றமிழா லிசைந்தேத்திய பத்தினையும், ஆழி கடலரையா வஞ்சை யப்பர்க் கறிவிப்பதே" என்று நம்பிகள் ஆணையிட்டபடியே "வருணனு மருள்சூடி, யூழி யிற்றனி யொருவர்தந் திருவஞ்சைக் களத்தினுய்த் துணர்வித்தான்" என்பது மறியப்படும். திருவாதவூரடிகள் சரிதத்தில் அவரோடு மாறுபட்டு வாதிட்ட புத்தர்களின் நாவிலிருந்து பேசுவித்த கலைவாணி, வாதவூரடிகளது அருளிப்பாட்டின்படியே அஞ்சிப், புத்தர்களது நாவினின்றும் நீங்கினளாக, அவர்களனைவரும் உடனே மூங்கைகளாயினர் என்பதும் காண்கின்றோம். திருவாரூரில் தேவாசிரிய மண்டபத்தின் கடையில் நின்று அடியார்களின் அருள்பெறும் காலநோக்கிப் "பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை, மாவா ழகலத்து மான்முதல் வானவர்" நீங்காது காத்திருக்கின்றனர் என்பதும் அறிகின்றோம். இவற்றா லெல்லாம் தேவர்கள் அடியார்களை வழிபட்டு அருள்பெறவுள்ளவர்கள் என்பது விளங்குவதனைக் கண்டு கொள்க.

நேர்மையின் - தாங்கிடல் - என்பனவும் பாடங்கள்.

130

1396.

வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை யாயிட
வேந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கினில்.

131

(இ-ள்.) வெளிப்படை. சீர்வாய்ந்த வருணனே, திருநாவுக்கரசு நாயனாரைச் சேர்ந்து அடைந்த கருங்கல்லே சிவிகையென ஆகியிட, ஏந்தியபடியே கொண்டுவந்து மலர்கள் நிறைந்த திருப்பாதிரியினைத் தலமரமாக வுடைய புலியூர் என்ற தலத்தின் பக்கத்தில் எழுந்தருளச் செய்தனன்.