பக்கம் எண் :


170திருத்தொண்டர் புராணம்

 

(வி-ரை.) வருணனே - எழுந்தருளிவித்தன் என்று வினைமுடிபு செய்க. வருணனே - கருங்கலே - ஏந்தியே என்ற ஏகாரங்கள் மூன்றும் தேற்றப்பொருளில் வந்தன. தன்னுட் போகட்ட பொருள்களை ஆழ்த்தி அகத்துக்கொள்ளு மியல்புடைய வருணன் அதற்கு மாறாக ஏந்தியே எழுந்தருளுவித்தனன் என்பதும், தன்னொடு கூடிய பொருளைத் தன்னுடனே அமிழ்த்தத் தக்க கல்லே அதற்கு மாறாகச் சிவிகையாய் மிதக்க என்பதும் ஏகாரங்களாற் குறிக்கப்பட்டன.

எழுந்தருளுவித்தல் - சைவமரபு வழக்கு; கொண்டு சேர்த்தனன் என்பது.

பூந்திருப்பாதிரிப்புலியூர் - பாதிரிமரம் பூக்களாற் சிறப்புடையது. பூ - அழகிய என்றலுமாம். புலிக்கால் முனிவரர் பூசித்த காரணத்தால் இப்பெயரெய்தியது. தலவரலாறு பார்க்க.

பாங்கரில் - நாயனார் கரையேறிய இடம் கரையேற விட்டகுப்பம் என வழங்குகின்றது. தலத்துக்கு அணிமையில் தெற்கில் உள்ளது. இப்போது கடல் அங்கு நின்றும் நெடுந்தூரம் கிழக்கு நோக்கிப் பின் சென்றுள்ளது. பாங்கரில் - எழுந்தருளுவித்தனன் - என்க. விரைவுபற்றி வினைமுற்று முன் வந்தது.

131

1397.

அத்திருப் பதியினி லணைந்த வன்பரை
மெய்த்தவக் குழாமெலா மேவி யார்த்தெழ
வெத்திசை யினுமர வென்னு மோசைபோற்
றத்துநீர்ப் பெருங்கட றானு மார்த்ததே.

132

(இ-ள்.) வெளிப்படை. அந்தத் திருப்பதியில் அவ்வாறு வந்து அணைந்த அன்பராகிய திருநாவுக்கரசரை மெய்த்தவக் கூட்டமாகிய அடியார் குழாங்கள் எல்லாம் கூடி மகிழ்ச்சியினால் ஆரவாரித்து எழுதலால் எல்லாத் திசைகளிலும் "அர கர" என்று ஒலிக்கின்ற பேரோசையினைப்போல அலைநீரையுடைய பெருங்கடலும் சத்தித்தது.

(வி-ரை.) புலியூரின் பாங்கரில் அலைக்கரத்தால் வருணன் ஏந்தி எழுந்தருளுவித்த நாயனார் அங்கு நின்றும் புலியூரை அணைந்தனர்; மெய்த்தவர் கூட்டமாக மேவி ஆர்த்தெழுந்து "அர" வொலி முழக்கினர்; அவ்வோசை கடலொலி போல மிக்கது.

அரவென்னும் ஓசைபோல் கடல்தானும் ஆர்த்தது - கடல்போல அரவென்னு மோசை எழுந்தது என்பது கருத்து. (உவமேயம்) பொருளாய் வருவதனை உவமையாக்கி உரைப்பது அணிவகையுள் ஒன்று. இதனை விபரீத உவமை எனவும், இயம்புதல் வேட்கை யுவமை எனவும் வகைப்படுத்தி யுரைப்பர் தண்டியலங்கார முடையார். வினைபற்றி எழுந்த உவமம். "கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்" என்ற திருமுருகாற்றுப்படையும், "பூங்கழற் கிணைதுணை மலர் ொகண்டு", "நின்மலர்த் திருமுகத்தின், கருணையின் சூரியனெழ" எனவரும் திருவாசகமும், "ஈங்கிவ டீங்கனி வாய்கமழு மாம்பலம் போதுள வோவளி காணு மகன்பணையே" என்ற திருக்கோவையாரும் முதலியவை காண்க.

கடல் தானும் - உம்மை அறிவில்லாத கடலும் என இழிவு சிறப்பும்மை. ஏகாரம் - தேற்றம். தத்துநீர் என்றது ஆர்த்தலுக்குக் காரணங் குறித்தது.

தானும் என்றது அடியார்களோடு கடலும் என இறந்தது தழுவிய எச்சவும்மை என்றலுமாம். அன்பர் தம்பால் வந்து அணைந்தமை கண்டு அடியார் ஆர்க்க, அவ்வாறு அணைவிக்க அவரை ஏந்திவந்த தன் செயல் முற்றுப்பெறக் கண்ட மகிழ்ச்சியாற் கடலும் ஆர்த்தது என்று தற்குறிப்பேற்றக் குறிப்பும் காண்க.