பக்கம் எண் :


172திருத்தொண்டர் புராணம்

 

தொண்டர் முன் - சடையானைக் கும்பிட்டு - தொண்டர்களுடன் கூடி இறைவனைக் கும்பிடுதல் ஒரு பேரின்பம் தருவது. திருவாரூரை ஒவ்வொருவரும் தரிசித்த காலை ஆளுடைய பிள்ளையார் - அரசுகள் - நம்பிகள் என்ற மூவர் முதலிகளும், திருப்பாச்சிலாச்சிராமத்தில் நம்பிகளும், திருக்கண்டியூரில் ஆளுடைய பிள்ளையாரும், தொண்டர்களின் முன்பு நின்று அவர்களுடன் கூடிய நிலையில் இறைவனைக் குமபிட்ட திருப்பதிகங்களின் இன்பம் ஈண்டு உணர்ந்து அனுபவிக்கத் தக்கது.

திங்கட் கொழுந்தணி சடையன் - அடிச்சார்ந்தாரை வாழ்விக்கும் தன்மை குறிப்பிடப்பட்டது. "இமையவர்க் கன்பன்" என்ற இப்பதிகக் கருத்துக் காண்க. "கங்கை வாழ் சடையான்" என மேல்வரும் பாட்டிற் பின்னும் கூறுவது காண்க.

அருள்நெறி விளங்க - இறைவன் அடியார்களுக்கு அருளும் நெறிகள் அளப்பில. நாயனார் போன்ற ஆசாரியர்கள் விளங்கவைத்தாலன்றி அவை அறிதற்கரியன. அருள்நெறி விளங்க வைத்தல் பதிகப்பாட்டுக் குறிப்பிற் காண்க.

133

1399. (வி-ரை.) ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் - இது நாயனார் அப்போது திருமுன்பு பாடியருளிய பதிகத்தின் முதற்பாட்டின் முதற்குறிப்பு. என எடுத்து என்றதனால் இது தேவாரத் திருவாக்கு என்பது விளங்கும்.

"தோன்றாத் துணையாய்.......அடியோங்கட்கு" என்று - இது அப்பதிக முதற் பாசுரத்தின் முடிவாகிய தொடர். என்று - என்பதனால் நாயனார் திருவாக்கினை அப்படியே தலைப்பெய்து கொண்டதென்பது உணர்த்தப்பட்டதுடன், அதுவே அத் திருப்பதிகத்தின் உள்ளுறையாகிய கருத்தாலும் உணர்த்தப்பட்டது.

வான்தாழ் புனல் - வானிடத்திலிருந்து நிலவுலகத்துக்கு இறங்கி வருதலின் தாழ் என்றார். "ஆயிரமாமுகத்தினொடு" "பரந்தெழுந்த புனற்கங்கை பனிபோலாகச் செறித்து"ச் சடையிற் றாங்கியதனால் தாழ் என்றார். தாழ் - விரும்பும் எனக்கொண்டு வானவரும் வந்து விரும்பியாடுகின்ற நீர் என்றலுமாம்.

கங்கை வாழ்சடையானை - "சகரர்களை மறிந்திட்டாட் கொண்டநாளோ" (திருவாரூர்த் திருத்தாண்டகம் - 10). உலகம் எப்போதும் நினைந்து உய்யும் பொருட்டுக் கங்கை எஞ்ஞான்றும் வாழ்வடைந்து நிற்கும் சடை என்பது. பகீரதன் வேண்டத் தந்த கங்கையினால் சகரர்கள் மீண்டு புத்துயிர் பெற்றொழுந்தது போலத், தம்மையும் தமக்கையார் வேண்டச் சூலையினால் ஈர்த்துப் புத்துயிரளித்தனர் என்பது குறிப்பு.

மற்று எவ்வுயிர்க்கும் சான்றாம் ஒருவன் "எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம், நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிராய் அங்கங்கே நிற்" கின்றானாதலால் இவ்வாறு கூறினார். "அவையே தானேயாய்........ஆணையின் நீக்கமின்றி நிற்கும்" என்றது ஞானநூல்.

"ஆற்றங்கரையில் மரமொன்றின் ஒரு கொம்பில் இரண்டு அன்னப்பறவைகள் இருக்கின்றன; அவற்றுள் ஒன்று அதன் பழங்களைத் தின்கின்றது; மற்றொன்று அதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது" என்ற உபநிடதக் கருத்தும் காண்க. இங்குக் கடலினுள் நாயனாரை இட ஏவிய அமணர்களுள்ளும், அரசனுள்ளும், அதனை நிறைவேற்றிய ஏவலாளருள்ளும், போகடப்பட்ட நாயனாருள்ளும் இருந்து அவ்வவரையும் இயக்கிவைத்து இந்நிகழ்ச்சிகளையெல்லாம் காட்டியும் கண்டும் நின்ற இறைவனது அருணிறைவினை நாயனார் போற்றினர் என்பது. பதிகப்பாட்டுக் குறிப்புக்கள் பார்க்க.

தண்டமிழ் மாலைகள் சாத்தினர் - மாலைகள் - பதிகத்து ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு தனிமாலையாம் என்பது. மாலைகள் என்றதற்கேற்பச் சாத்தினர் என்றார்.

இச்சரிதப் பகுதியை இத்திருப்பதிக பாட்டின் யாப்பினில் அமைத்த சிறப்பமைதி கண்டுகொள்க. இப்பதிகம் திருவிருத்தம் என்ற யாப்பமைதி யுடையது.