பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்177

 

இயல்பையும் விரிப்பன. "உடையா னடியா ரடியடி யோங்கட் கரியதுண்டே" (3) என்ற திருபாட்டுச் சீவன் முத்தநிலையை விளக்கிப் பன்னிரண்டாஞ் சூத்திர உண்மையினைப் போதிக்கின்றவாறு கண்டுகொள்க. இவ்வுண்மைகள் கண்டுய்யும் பொருட்டே ஆசிரியர் ஈண்டு, அருணெறி விளங்கப் பாடுவார் - தண்டமிழ் மாலைகள் சாத்தினர் என்றருளினர். அருள்நெறி - சிவன் அருளிய ஆகமநெறி. அருளைக் கூட்டுவிக்கும் நெறி.

தலவிசேடம் :- திருப்பாதிரிப்புலியூர் - புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாத மாமுனிவர் பூசித்த தலம். அவர் தவஞ்செய்திருந்து திருநடங்கண்டு பேறு பெறும் ‘தில்லை'ப் புலியூரினின்றும் பிரித்துணரும் பொருட்டு இதன் தலமரமாகிய பாதிரி என்றதுடன் சேர்த்து இது பாதிரிப்புலியூர் எனப் பெயர் வழங்கப்பெறும். முடங்கிய காலுடைய முயல் வடிவாகச் சாபமிடப்பெற்ற மங்கணர் என்ற முனிவர் பூசித்துச் சாபம் நீங்கப்பெற்ற தலம் என்பது ஆளுடைய பிள்ளையாரது "முன்ன நின்ற முடக்கான் முயற்கருள் செய்து" என்ற இத்தலத் தேவாரம் முதற் பாசுரத்தால் விளங்கும். இது நடுநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இருபத்திரண்டனுள் பதினெட்டாவது தலம். பாதிரி என்பதைப் "பாடலம்" என்பது வடமொழி வழக்கு. பாடலிபுரம் என்ற பெயரொற்றுமை கருதி இதன் பக்கத்தில் அப்பெயரால் தங்கள் நகரத்தை சமணர் அமைத்தனர் போலும். சுவாமிபெயர் - தோன்றாத்துணைநாதர்; அம்மையார் - தோகை நாயகி. தலமரம் - பாதிரி. தீர்த்தம் - ஆறு - கெடிலம். சுவாமிபெயர் நாயனாரது தேவாரத்துட் காண்க. நாயனார் சரிதத்தினுள் அப்பெயர் காரணப் பெயராய் விளங்குதலும் கருதத்தக்கது. நாயனார் கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம் என்று வழங்கும். அத்திருநாள் விழாவும் கொண்டாடப் படுகின்றது. பதிகம் - 2.

இது திருப்பாதிரிப்புலியூர் என்ற இருப்புப்பாதை நிலயத்திலிருந்து கற்சாலை வழி அரைநாழிகை யளவில் அடையத் தக்கது. இருப்புப்பாதை நிலையிலிருந்தே திருக்கோபுரம் தரிசிக்கவுள்ளது. திருக்கோவலூர் ஞானியார் ஆதீனம் சுவாமிகள் வீற்றிருக்கும் மடாலயம் இத்தலத்திற் றேற்றமாய்ச் சிவக் கலைஞானம் நாடெங்கும் பரவவுதவும் கருவூலமாய் விளங்குகின்றது.

1400.

மற்று மினையன வண்டமிழ் மாலைகள் பாடிவைகி
வெறறி மழவிடை வீரட்டர் பாத மிகநினைவில்
உற்றதோர் காதலி னங்குநின் றேகியொன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி கைப்பதி சென்றடைவார்.

135

1401.

தேவர் பிரான்றிரு மாணி குழியுந் தினைநகரு
மேவினர் சென்று விரும்பிய சொன்மலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி புல்லப் பொருண்மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக் கடந்தணைந்தார்.

136

1400. (இ-ள்.) வெளிப்படை. இன்னும் இவைபோன்ற வளப்பமுடைய தமிழ் மாலைகளைப் பாடி அத்தலத்தில் தங்கிப், பின், வெற்றியையுடைய இளைய விடையினையுடைய திரு அதிகைவீரட்டானேசுவரருடைய திருப்பாதங்கள் மிகவும் தமது நினைவில் பொருந்தியதோர் காதல் மேல் எழுந்ததனால், அங்கு நின்றும் சென்று பகைவர்களது திரிபுரங்களையும் எரித்தவராகிய வீரட்டானேசுவரர் வாழும் திருவதிகைத் தலததைச் சென்றடைபவராய்,

135