தாமங்கள் நாற்றி - "பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையுற வறுத்துத் தூங்க நாற்றி" (திருமுருகு) என்றது காண்க. தோரணங்களி னிடையிடையேயும் தனியாகவும் மலர்மாலை மணிமாலைகளை அளவுபட அமைத்துத் தொங்க விடுதல் வழக்கு. செஞ்சாந்து நீவுதல் - நிலத்தினிலும். திண்ணை முதலியவற்றிலும் செஞ்சாந்து பூசி அமைத்தல் அணி வகைகளுள் ஒன்று. நீவுதல் - பூசுதல். அணிநகர் - எப்போதும் இயல்பில் அழகுடன் விளங்கும் நகரம். அணிமேல் - இயல்பின் உள்ள அழகுக்குமேல். "அழகுக் கழகுசெய்வார்" என்றது முதுமொழி. அலங்கரித்தார் - நகரம் அலங்கரித்தல் பெரியாரை வரவெதிர் கொள்ளும் பொருட்டு. "எதிர் கொண்டனர்" 1404 - என்றது காண்க. தஞ்செயல் பொங்க ஒலி மங்கலஞ் சாற்றியதன் பயனாக நகரமெங்கும் மக்கள் பலருங்கூடி இவ்வகையால் அலங்கரித்தனர். சாந்த நீவி -என்பதும் பாடம். 138 1404. | மன்னிய வன்பின் வளநகர் மாந்தர் வயங்கிழையார் இன்னிய நாதமு மேழிசை யோசையு மெங்கும்விம்மப் பொன்னியல் சுண்ணமும் பூவும் பொரிகளுந் தூவியெங்குந் தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர் கொண்டனர் தொண்டரையே. |
(இ-ள்.) வெளிப்படை. நிலைபெற்ற அன்பினையுடைய அந்த வளப்பமுடைய திருநகரத்திலுள்ள மாந்தர்களும், விளங்கும் அணிகளை அணிந்த பெண்களும், இனிய ஓசை முழுங்கும் இயங்களின் ஓசையும் எழிசை பொருந்தும் மிடற்றுப் பாடலோசையும் எங்கும் பெருக்கெடுக்கச் செய்து பொன்னிறமுடைய சுண்ணப் பொடியையும் மலர்களையும் பொரிகளையும் கலந்து எங்கும் தூவி, பழமையாகிய அந்நகரின் புறத்தே வந்து சூழ்ந்து, திருத்தொண்டராகிய நாயனாரை எதிர்கொண்டனர். (வி-ரை.) வளநகர் மன்னிய அன்பின் மாந்தர் - என்க. அன்புடைய மாந்தர் - இங்கு அந்நகர மக்களுள் ஆண்மக்களைக் குறித்தது, பின்னர் வயங்கிழையார் என வேறு பிரித்துக் கூறுதலான். அன்பின் என்றதனை வயங்கிழையார் என்றதனுடனும் கூட்டுக. அன்பின் மாந்தர் - வயங்கிழையார் என்று கூட்டி அன்புடைய என்றும், அன்பின் எதிர்கொண்டனர் என்று கூட்டி அன்புடைமையால் என்றும் உரைக்க நின்றது. இன்னியநாதம் விம்ம என்றது பலவகையான இனிய குழல், முழவு முதலிய இயங்களிலிருந்து முழக்கப்படும் நாதத்தை. ஏழிசை ஓசை என்றது பெண்களது மிடற்றின் பாடலோசையினை. மாந்தர் இன்னிய நாதம் விம்ம - என்றும், வயங்கிழையார் ஏழிசை ஓசை விம்ம என்றும் நிரனிரையாக்கி உரைக்க. "கெண்டை கொண்டலர்ந்த கண்ணா னார்கள் கீத வோசைபோய் அண்ட ரண்ட மூடறுக்கு மந்த ணாரூ ரென்பதே" (நட்டராகம் - திருவிராகம் - 2) "காந்தார மிசைபரப்பிக் காரிகையார் பண்பாட" (மேகரா - ஐயாறு) என்ற ஆளுடைய பிள்ளையாரது திருவாக்குக்கள் காண்க. விம்ம - முழங்கச் செய்து - பெருக்கி, பிறவினைப் பொருளில் வந்தது. சுண்ணம் - மஞ்சள் கலந்த வாசனைத்தூள். பொரி - நெற்பொரி. சுண்ணமும் மலர்களும் பொரிகளும் கலந்து தூவுதல் மங்கலஞ் செய்யும் மரபுகளில் ஒன்று. |