பக்கம் எண் :


182திருத்தொண்டர் புராணம்

 

நகரின் புறஞ்சூழ்ந்து எதிர்கொண்டனர் - பெரியோர்களை நகர வாயிலின் புறத்திருந்து எதிர்கொண்டழைத்து வருதல் மரபு. "திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியைமுன், பொங்கெயினீ டிருவாயிற் புறமுறவந் தெதிர்கொண்டார்" (268) என்றதும், பிறவும் காண்க.

தொண்டரையே - பெருந்தொண்டராதலின் அவரை என்பது குறிப்பு. ஏகாரம்
தேற்றம்.

மன்னியவன்பர் - என்பதும் பாடம்.

139

1405.

தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியுந், தாழ்வடமு,
நாயகன் சேவடி தைவரு சிந்தையு, நைந்துருகிப்
பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும், பதிகச் செஞ்சொன்
மேயசெவ் வாயு, முடையார் புகுந்தனர் வீதியுள்ளே.

140

(இ-ள்.) வெளிப்படை. தூய்மைசெய்யும் வெள்ளிய திருநீறு நிறைய அணியப் பெற்ற பொன்போன்ற திருமேனியினையும், உருத்திராக்க வடங்கள் அணிந்த கோலத்திணையும், ஆன்மநாயகனாகிய சிவபெருமானுடைய சேவடிகளைத் தைவரும் சிந்தையினையும், மனம்நைந்து உருகுகின்றதனாலே மேல்வந்து பாய்வதுபோல அன்பு நீரை இடைவிடாது பொழிகின்ற கண்களையும், தேவாரத் திருப்பதிகமாகிய செவ்விய சொற்கள் இடையறாது பொருந்திய செவ்வாயினையும் உடையாராகிய நாயனார் திருவீதியினுள்ளே புகுந்தனர்.

(வி-ரை.) இத்திருப்பாட்டுத் திருவதிகைத் திருவீதியினுள் புகுந்தபோது நாயனாரது திருவுருவத்தையும், அந்தக்கரண புறக்கரண நிலையினையும் ஓவியம் வல்ல ஒரு புலவன் தீட்டினும் தீட்டமாட்டாத பண்பில் நமது முன் கொணர்ந்து கொடுக்கின்றது. இஃது இவ்வாசிரியர்க்குச் சிறப்பாயுரிய இயல்புகளுள் ஒன்று.

தூய ... மேனி - தூய்மை செய்யும் நீறு என்க. "சுத்தமாவது நீறு". தூயன வல்லாத இடங்களில் வைக்கப்படாமலும் தூய்மையற்ற பொருள்கள் கலவாமலும் உள்ள நீறு என்றலுமாம். வெண்ணீறு - சுத்த வெண்மையாகிய நீறே அணியத் தகுந்தது. துதைதல் - செறிந்து மிக்கிருத்தல். "நீற்றினை நிறையப் பூசி" என்றது காண்க. தூய வெண்ணீறும் அன்பும் கண்ணீறும் பெருகி விரவுதலால் நாயனார் தந்திருமேனியில் "கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாட" உள்ளது என்பதும் காண்க. பொன்மேனி என்பது நிறமும் அழகுமேயன்றி அருமைப்பாடும்குறித்தது. "மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட், கணியான்", "பொன்னார் திருவடிக்கு" என்பன முதலிய திருவாக்குக்கள் இக்கருத்துப் பற்றியன.

தாழ்வடம் - உருத்திராக்கவடம். பொன்மேனி, கண், செவ்வாய் என்று குறித்த ஆசிரியர், மேனியில் வடம்பூணும் இடங்குறித்திலர், தலை - கழுத்து - தோள் - மார்பு - கை முதலியனவாக உருத்திராக்கவடம் அணியும்படி விதித்த இடங்கள் எல்லாம் கொள்ளக் கிடத்தலின். "கண்டமாலை கரமாலை சிரமாலையுங் கவின் விளங்கவே" என்ற திருத்தொண்டர் புராண வரலாறு காண்க. தாழ்வடமும் - தாழ்வடம் பூண்ட கழுத்தும் பிறவும் என்க. "கண்டியிற் பட்ட கழுத்துடையீர்" என்ற தேவாரமும் காண்க. தாழ்தல் விரும்புதல் என்ற குறிப்பும் தருவது.

நாயகன் ..... சிந்தை - தைவருதல் - மெல்ல வருடுதல் - தடவுதல், "தைவருதண்டென்றல்" (1363). நாயகன் என்ற குறிப்பினால் நாயகி தனது நாயகனது அடிகளை மெல்ல வருடுதல்போன்ற மனநிலையினுடன் சிவபெருமானது திருவடிகளை