எண்ணுதல் வேண்டுமென்பது. "செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால், வருடச் சிவப்பன", "மன்னு மலைமகள் கையால் வருடின" என்ற நாயனாரது திருவாக்குக்கள் காண்க. எப்போதும் உபசரித்து நினைந்துகொண்டிருக்கும் என்க. "நெஞ்சே நீநினையாய்" என்றபடி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் சிந்தை என்பது. தத்துவ தாத்விகமாகிய உலகங் கடந்து சிவந்துவமடைந்த பெரியோர்களது அறிவில் சிவன் விளங்கும் நிலை வேறு. அவர்களது கரணங்கள் உப்பளத்தில்இட்ட புல்லுப்போல உயிரறிவு போய் சிவனறிவாகவே விளங்கும். அவ்வாறு மாறிய அவர்களது அறிவு "தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான் கொடுத்துத், தன்னுணரத் தன்னுள்ளிருத்தலால்" என்னும் சிவஞானபோதம் 12-ம் சூத்திரத்தினுள் "அவ்வன்பர் தன்னைச் சிவோகம் பாவனையினால் அறியச் செய்தலானும்" என்று உரைக்கப்பட்டபடி, ஏகனாகி யிறைபணி நின்று முதல்வனது உபகாரத்தையே நோக்கி அழுந்தி நிற்கும் என்றது கருத்து. சிந்தை - அறிவு; "ஞானக்கண்ணினிற் சிந்தை நாடி" என்பது காண்க. "கரணங்க ளெல்லாங் கடந்துநின்ற கரைமிடற்றன், சரணங்க ளேசென்று சார்தலுமே", "காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப், பேணு மடியார்" என்ற திருவாசகங்களின் கருத்துங் காண்க. நைந்துருகி ... கண் - அன்பு மீதூர்தலினால் உள்ள முருகி அதுவே வெளியில் கண்களின்வழிப் பொழிவதுபோல. உள்ளிருந்து அன்புநீர் ஊற்றெடுத்துக் கண்வழி இடைவிடாது வெளிப்படுதல்போல நீர் வழியும் கண். "மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாரும் திருவடியும" என்பது காண்க. அன்பு நீர்பொழி - அன்பினால் நீரினைப் பொழியும். கண்களினின்று துன்பம் கவலை முதலிய பல காரணங்களாலும் நீர்பெருகுமாதலின் அவற்றினின்றும் பிரித்துணர, அன்பு நீர் பொழி என்றார். "விழிநீர் பெருக்கி நெஞ்சு நெக்குருகி" என்றார் பிற்கால ஆசிரியரும். "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தாழ்" (குறள்). பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய் - "ஈறின்றி யெழுந் திருவாசகமும்" (1342) என்ற விடத்துரைத்தவை பார்க்க. வாக்கினின்றும் தேவாரப் பதிகத்தொடைகள் இடையீடின்றிப் புறப்பட்டுக்கொண்டே யிருந்தன என்பது. செஞ்சொல் - செம்மை பயக்கும் சொல். செஞ்சொல் பிறக்கும் இடமாதலாற் செவ்வாய் எனப்பட்டது. "வாயே வாழ்த்து கண்டாய்", "வாழ்த்த வாயும் .. தந்த தலைவன்" முதலியவற்றிற் கூறியபடி நாயனார் தாமே வழிபட்டவராதலில் எப்போதும் வாழ்த்துரைக்கும் வாய் செவ்வாய் எனப்பட்டது. அவ்வாறு வாழ்த்தாத வாய் செவ்வாயெனப்படா. மேனியும் - தாழ்வடமும் - சிந்தையும் - கண்ணும் செவ்வாயும் உடையவராய்த் திருவீதியில் புகுந்தனர். உடையார் - எம்மை ஆளுடைய தலைவர் என்பதும் குறிப்பு. "நேய மலிந்தவர் வேடமும்" என்ற சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரத்தின் மூன்றாமதி கரணத்துள், சிவஞானிகளோ டிணங்கினார்க்கு அதன் பின் செய்யக்கடவ துணர்த்து முகத்தால், "இனிப், பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழிபடுக" என்றதற்கு உரை வகுத்தருளிய எமது மாதவச் சிவஞானயோகிகள் மாபாடியத்தினுள், திருவேடம் என்றதற்கு நாயனாரது வேடமே சிறந்த இலக்கியமாய் விளங்குவதென்று கூறினர்; திருவேடத்தி னியல் பாவதிது என்று, இத்திருப் பாட்டினையும், "சிந்தை யிடையறா வன்புந் திரு மேனி தன்னி வசைவுங், கந்தை மிகையாங் கருத்துங் கையுழ வாரப் படையும், வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலி திருநீறும், அந்தமிலாத் திருவேடத் தரசு மெதிர்வந் தணைய "(திருஞான - புரா - 270) என்ற திருப்பாட்டினையும் |