பக்கம் எண் :


186திருத்தொண்டர் புராணம்

 

வது. "அகரம் முதலி னெழுத்தாகி நின்றாய்" (இந்தளம் - நெல்வாயிலரத்துறை - 7) என்பது நம்பிகள் தேவாரம். அவ்வண்ணம் நண்ணிய - சிவத்தன்மை நிரம்பிய. சீவன்முத்த நிலைபெற்றுச் சிவமாகிய என்ற பொருளையுங் குறித்து நிற்பது காண்க.

அம்பவளச் செவ்வண்ணர் - "செம்பவள எரிபோன் மேனிப் பிரான்" என்ற தேவாரம் காண்க.

கோயில் திருவீரட்டானம் - வீரட்டானம் என்பது கோயிலின் பெயர்.

142

1408.

 உம்பர்தங் கோனை யுடைய பிரானையுள் புக்கிறைஞ்சி,
 நம்புறு மன்பி னயப்புறு காதலி னாற்றிளைத்தே,
"யெம்பெரு மான்றனை யேழையே னான்பண் டிகழ்ந்த"தென்று
 தம்பரி வாற்றிருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.

143

(இ-ள்.) வெளிப்படை. தேவதேவனைத், தம்மையாளுடைய பெருமானைத் திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி, நம்புதற்குரிய அன்பின் விருப்பமிக்க காதலினால் எழுகின்ற சிவானந்தத்தினுள் இடையறாது மூழ்கிநின்று, "எம்பெருமானை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே" என்ற கருத்துடன் தமது பரிவினால் திருத்தாண்டகச் செந்தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வடைந்தனர்.

(வி-ரை.) உம்பர் தங்கோன் - திரிபுரங்களை யெரித்துத் தேவரைக் காத்தவர். புரமெரி செய்தபோது தேவர்களே தேராகவும் அம்பு முதலிய படைகளாகவும் நிற்க, அவர்களது நாயகனாக நின்று, அவர்கள் ஏதுஞ்செய்யாமலே தாம், சிரித்துப் புரமெரித்தனராதலின் தாமே உம்பர்க்குத் தலைவராம் என்பதனை விளக்கினர்.

உடையபிரான் - குலை நோய் தந்து ஈர்த்துத் தம்மை ஆளாகக் கொண்ட பெருமான். நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்து - அவர் தலைவராய்க் காத்தளிப்பர் என்று நம்பி அன்பு செய்தலின் நம்புறும் அன்பு எனப்பட்டது. அதனால் இறைவர் நம்பர் எனப்படுவர். நம்புறும் - விரும்பிப் பெறத்தக்க என்றலுமாம். "இறவாத வின்ப அன்பு" என்றது காண்க. நயப்பு - விருப்பு. அன்பு மேலிட அது விருப்பமாகி முதிர, அது மேன்மேல் கூர்ந்திடக் காதலாய் விளையும். அது முதிரவே, சிவானந்தத்தினுள் மூழ்கினர்.

எம்பெருமான்றனை .... என்று - இது நாயனார் திருவதிகையை இரண்டாம் முறையாக இதுபோழ்து வந்தடைந்தபோது முதலிற் பாடியருளிய திருத்தாண்டகத் திருப்பதிகத்தின் கருத்து. இப்பதிகப் பாட்டுக்கள் "ஏழையே னான்பண் டிகழ்ந்தவாறே" என்று முடியும் ஈற்றடிகளையுடையன. ஏழை - அறிவினால் ஏழைத் தன்மை. பண்டு - சூலைநோய் தந் தாட்கொள்ளப்படு முன்புள்ள பல காலம். அக்காலமெல்லாம் சமணத்திற் சார்ந்து அமணர் சொற்கேட்டு இறைவனை இகழ்ந்தமைபற்றி இரங்கி இப்பதிகம் பாடியருளினர் என்பது தம்பரிவால் என்றதனால் அறியப்படும்.

"இருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட்டு", "அமணே நின்றார் சொற்கேட்டு" என்றபதிகப்பாட்டுக்கள் காண்க. முன்முறை இறைவர் திருமுன்பு எய்தியபோது சூலைநோயுடன் றொடர வந்ததனால் மருளும் பிணிமாயை யறுத்திடுவான், "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்ற திருப்பதிகம் பாடிச் சூலைநோய் நீங்கப்பெற்றனர். இப்போது இரண்டாம்முறை மீட்டும் அவர் திருமுன்பு வந்துநின்ற போது நாயனார் திருவுள்ளத்தே பல எண்ணங்கள் தோன்றின. தாம் மறந்து பிற துறையில் நின்று இகழ்ந்தபோதும் அருள்பெருகு சூலையினைத் தந்து சமணை நீக்கித் தம் திருமுன்புக்கு ஈர்த்து ஆட்கொண்டருளியும், அதன் பின்பு, அவர்கள் நீற்றறையினுள் வைத்தும், நஞ்சுகலந்த பாற்சோறு ஊட்டியும், கொல்யானையை