பக்கம் எண் :


188திருத்தொண்டர் புராணம்

 

வரம்பெற்ற வரலாறு குறிப்பதெனினுமாம். - (5) இப்பாட்டுச் சமணர்கள் சிவனையறியும் நெறியில் நில்லாது பாழாய்க் கழிந்து போகின்றமைக்கு இரங்கியும், அவர் சொற்கேட்டுத் தாம் முன்பு பெருமானை இகழ்ந்தமைக்குப் பரிவுகூர்ந்தும் அருளியது. இருபிறப்பும் - அரிதிற் கிடைத்த இந்த மானிடப் பிறவியும், இனி வரும் பிறவிகளும். சிவனை இகழ்வோர் பலகாலம் பிறந்து பிறந்து வருந்தி நரகத்திற் கிடப்பர் என்ற துணிபுபற்றி வெறுவியராய் என்றார். வெறுவியராதல் - வீணராதல் - வீணே கழிதல். - (6) நின்மலன் - "மாயை கன்மங்களையுங் கடந்து நிற்றலால் அவற்றுள்ளும் ஓரியல்புபற்றி யறியப்படாதவன்" உயிர்களுக்கு மலத்தை நீக்குபவன் என்றலுமாம். நிமலன் - இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்; (7) குண்டரக்கன் - குண்டர்களுள் அரக்கன் போல்பவன். குண்டுத் தன்மையின் மிகுந்தவன். வீரராக்கதன் - கவிராக்கதன் என்பன போல. குண்டரக்கன் என்பதும் பாடம்; குண்டில் ஆக்கம் - மிகுதி - உடையவன் என்க. குண்டர் - குண்டு ஆழமாய் - ஆழம் பள்ளமாய் - பள்ளம் கீழாய் - குண்டர் என்பது கீழோரைக் குறித்தது என்பர் திவ்யப் பிரபந்த வியாக்கியானகாரர். அமணர்கள் வழங்கும் சில இழிந்த மரபுகள் குறித்து இரங்கி, அவர் சொற்கேட்டுத் தாம் பலநாள் உழன்றமைக்கு வருந்துகின்றார். உணர்வொன்றின்றி - உடனாகி உழிதந்தேன் எனவும், உணர்வின்றிப் பண்டிகழ்ந்தேன் எனவும் உரைக்க இடையில் வைத்தோதினார். 8-11 பாசுரங்களிலும் இவ்வாறே கொள்க. -(10) தொல்லை ... ஆறறியேன் - பழவினைகள் சூழ்ந்ததனால் இப்பிறவியிற் போந்தேன்; அவ்வினையின் வலியால் இப்பிறவியிலும் தூறும் ஆறும் அறிந்து நன்னெறி செல்லமாட்டா தவனானேன். தூறு - முள்ளும் கல்லும் முதலியவற்றால் நிறைந்து நேர் செல்ல மாட்டாமையை விளைக்கும். ஆறு - நேர்வழி. "குழிவழி யாகி வழிகுழி யாகி" என்ற 11-ம் திருமுறை காண்க. சுடராய் நின்று - அவ்வழி வீழாது நல்வழி காட்டும் விளக்காக. இது நாயனார் தமது முற்பிறவியின் விளைவை நினைவு கூர்ந்தருளியது. இடர்தீர்த்து - பிறவிக் கேதுவாகிய அம்மைத் தொல்லை வினையையும், அதன் பயனாக விளைந்த அமண் டொடக்காகிய இம்மை வல்வினையையும் அடக்கி இடர் என்றார். இங்கு அடிமை கொண்ட - சரிதக் குறிப்பின் அகச்சான்று. -(11) இப்பாட்டானும் சமணர்களுள் வழங்கும் சில இழிமரபு குறிக்கப்பட்டது. தவமே என்று அவஞ்செய்து தக்கது ஓரார் - தவமல்லாதவற்றைத் தவம் என்று பிறழ உணர்ந்தும், அவத்தினைச் - தீமையினைச் - செய்தும், தவமாகிய தகுதியுள்ளவற்றை எண்ணாமலும் இம்மூன்று வகையாற் குற்றப்பட்டார் என்க. மதன் - செருக்கின் வலிமை. அறியாமையுமாம். இலைமறித்த கொன்றை - கொன்றை பூக்குங் காலத்து இலைகளே தோன்றாமல் முழுதும் பூவாய் நிறைந்து காணும் தன்மை குறித்தது.

தலவிசேடம் - முன்னர் உரைக்கப்பட்டது. பாட்டு 234, பக்கம் 271, பார்க்க.

வேறு

1409.

அரியயனுக் கரியானை யடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தகைமைத் திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள்,

144

1410.

புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய பழவினைப்பா சம்பறிய,
வல்லலொழிந், தங்கெய்தி, யாண்டவர சினைப்பணிந்து,
வல்லமணர் தமைநீத்து, மழவிடையோன் றாளடைந்தான்.

145