1409.(இ-ள்.) வெளிப்படை. அறிதற்கரிய பெருந்தகைமை யாளராகிய திருநாவுக்கரசு நாயனார், அரிக்கும் அயனுக்கும் அரியவரை, (ஆயினும்) அடியவர்களுக்கு எளியவரை, விரிபுனலாற் சூழப்பட்ட திருவீரட்டானத்தினுள் எழுந்தருளி யிருக்கும் அமுதமானவரை, மனத்தினுள் மிக்க அன்பு பொருந்தும் செந்தமிழ்ப்பாட்டுக்கள் பலவற்றையும்பாடித் திருப்பணி செய்கின்றநாளிலே. 144 1410.(இ-ள்.) வெளிப்படை. புல்லறிவுடைய சமணர்களுக்காகப் பொல்லாங்குகளையே இடைவிடாது செய்து ஒழுகும் பல்லவவரசனும், தனது பழவினைப்பாசம் நீங்கவே, அந்த அல்லலினின்றும் நீங்கி, திருவதிகையினை அடைந்து ஆண்ட அரசுகளைப் பணிந்து வலிய அமணர்களைவிட்டு, இளைய இடபத்தையுடைய சிவபெருமானது திருவடிகளைச் சார்ந்தான். 145 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1409.(வி-ரை.) அரியானை - எளியானை - முரண் அணி. பெருந்தேவர்க்கும் அரியவனாயினும் அடியவர்க்கு எளியவன். ஆவணத்தோ டெழுந்தவர்க்குக் காண்டற்கு அருமையும், அடிபணிந்தார்க்கு எளிமையும் குறித்தபடி. "வேண்டுவார்க்கே அண்ணியார் பெரிதுஞ் சேயார் அதிகை வீரட்ட னாரே" (நேரிசை), "காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய்" (திருமறைக்காடு - தாண்டகம் - 1), "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை - மற்றவ ரறியா மாணிக்க மலையை" (திருவிசைப்பா) முதலியவை காண்க. இத்தலத் திருநேரிசைக் கருத்தை எடுத்துக் காட்டியபடி. விரிபுனல் - இங்குத் திருக்கெடில ஆறு குறித்தது. இத்தலத்தே அது விரிந்து பரவிச் சென்று அணிமையிற் கடலொடு கூடுவதால் இங்கு விரிபுனல் என்றார். கங்கையே போலச் சிவத்தன்மையை விரிவு செய்யும் புனல் என்றலுமாம். அழுது - அமுதம் போல்பவரை அமுது என்ற துபசாரம். அமுது - மரணத்தைப் போக்குவது. தெரிவரிய பெருந்தகைமை - திருநாவுக்கரசு நாயனாரது பெருந்தகைமை, உண்மை ஞானிகளேயன்றிப் பிறர் தெரிதற்கரியதாகும். பொய்ம்மை செய்து அவர்பால் அளவற்ற தீமைகளையும் செய்த அமணரையும் வெகுளாமையானும், அப்பூதி யடிகளது வரலாற்றானும், பிறவாற்றானும் அஃது ஒருவாறு அறியப் படும். திருவதிகைக்கு மீண்டு வந்த பின்னர், முன்பு தமக்குப் பெருந் தீமைகள் செய்த அமணரையும் அவர்கள் வயப்பட்டு மதியிழந்து கொடுங்கோன்மை செய்த அரசனையும் சிறிதும் நாயனார் எண்ணினாரல்லர். ஆதலின் இங்கு இவ்வாறு அருமைப்பாடுபெறத் திருப்பெயர் முழுமையும் போற்றிக் கூறினார். மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பல பாடி - மனத்துள் அன்பு மிகுந்து கூர்தலால் அந்தப்பாட்டுக்கள் பலவும் எழுந்தன. பரிவு - இங்கு அன்பு, ஆசை, இரக்கம் முதலிய பல பொருள்களையுங் குறித்து நின்றது. அவர் திருமனத்தினுள், அவை அற்றை ஞான்று பரிவுபொருந்திய தமிழாதலேயன்றி, இற்றைக்கும், இனி எஞ்ஞான்றும் அவற்றைக் கற்பாரது உள்ளங்களில் பரிவு உறுவிக்கும் தமிழாதலும் கருதுக. செந்தமிழ்ப் பாட்டு - செம்மை நலத்தை - சிவத்தை - விளைவிக்கும் தமிழே செந்தமிழ் என்றற்குரியது என்பது ஆசிரியர் கருத்தாம். அதுவே நாயனாரது கருத்துமாம். "வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, வாயிரஞ் சமண்" (பழையாறை வடதளி) என்றதும், பிறவும் காண்க. |