பக்கம் எண் :


208திருத்தொண்டர் புராணம்

 

ஆதலின் நூல்களுள் உடற்றூய்மை வற்புறுத்தி விதிக்கப்படுவதாம். சமண சமயத்தினைவிட்டு வந்த பின் அந்த முன்றொடக்கு என்னசெய்யும்? எனின், அற்றன்று; ஒரு கால் தீயசார்பினால் அசுத்தமாயின உடலும் அதனை உட்கொண்ட இரத்தம் முதலாகிய எழுவகைத்தாதுக்களும் ஒக்க அசுத்தப்பட்டு விடத்தன்மை அடைந்துவிடும். நோய்க்குமருந்து கொடுப்பது போலவும், அசுத்தமாகிய சேற்றில் வீழ்ந்தபாண்டத்தை அனலிலிட்டுத் தூய்மை செய்வது போலவும் அந்த உடலையும் விதித்தவாறு தூய்மையாக்குதல் வேண்டும் என்க. இதனைத் தீர்வு - கழுவாய் - மாற்று - என்று கூறுவர். பிராயச்சித்த மென்பர் வடவர்.

முன்னர்த் திலகவதியம்மையார் திருவீரட்டம் புகுவதற்காக அஞ்செழுத்தோதிக் கொடுத்த திருநீற்றினை உருவார வணிந்து திருவீரட்டம் புகுந்ததுவும் (1332 - 1333), தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமு மாகி(1405) மீண்டும் திருவதிகை புகுந்ததுவும், அவ்வாறே பிற பதிகளும் சென்று வணங்கியதும் அசுத்தமாகிய உடல் கொண்டேயோ?; திருவெண்ணீற்றினால் உடல் முன்னரே புனிதமாக்கப்படவில்லை போலும்? எனில், அற்றன்று. உடல் முன்பே புனிதமாக்கப்பட்டது உண்மையே. ஆயின் சமணத் தொடக்கினுட்பட்டு உடல் வளர்ந்த வளர்ச்சியும், அது பற்றிய இழிபும் பலகாலம் நாயனார் கருதிக் கருதி வருந்தியே நின்றனர் என்பது ஏழைத் திருத்தாண்டகத்தாலும், மற்றும் பல திருவாக்குக்களாலும் அறியப்படும். திருநீற்றுப் பூச்சு அவ்வப்போதும் உடல் நெருப்பிற்குளித்தில் (ஆக்னேய ஸ்நானம்) என்ற சடங்கினால் தூய்மையாக்கி வருவதொன்று. இவ்வாறுள்ள பகுதிகளாகிய சூக்கும தேகசுத்தி, தூல தேகசுத்தி, சரீரதனம், அமிர்தாப்பிலவனம் என்ற இவை நாடோறும் சிவபூசைக் கிராமத்தில் செய்ப்படுதல் அவ்வந்நாளும் அந்நாட் சரீரத்தைச் சுட்டுத்தூல சூக்கும சரீரங்களைத் தூய்மைப்படுத்தும் நிலை குறித்தன. அவற்றை நாயனார் நாடோறும் இயற்றிப் பூசையும் செய்து வந்தனர். அவை சிவனை வழிபடும் அனைவரும் தம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்ளச் செய்யத் தகுவன. அவை வேறு; இங்கு நாயனார் விண்ணப்பித்த செயல் வேறு. அது தமது உடல் சமணத் தொடக்குண்டு வளர்ந்த வளர்ச்சி யிழிபினின்றுங் கழுவப் பெற்றுத் தரிக்கத் தக்கதாக ஆக்கப்படவேண்டும் என்பது. இஃது சிவனை இகழ்ந்து புறச்சமயம் புக்கு நின்று திரும்பினார் செய்யத்தக்க சிறப்புக் கழுவாய். இஃது சூலம் இடபம் ஆகிய இறைவனிலச்சினை பொறிக்கப் பெறுதலானே ஆவதாம். "சைவமுத்ரா தீட்சை" என்பது சிவாகமங்களில் விதித்த தீட்சை வகைகளில் ஒன்று. பொறித்தலாவது அவ்வடிக் குறிகள் எப்போதும் தோள்களிற் காணும்படி சுவடுண்டாமாறு அழுத்தி முத்திரீகரிக்கப்படுதல். இவ்வாறு வைணவர்களுள் முத்திராதாரணம் என வழங்கும் சடங்கு போனற் தொன முன்காலத்தில் சைவ சமய மரபிலும் வழங்கியது போலும். வைணவர் அதனை எடுத்துக்கையாண்டபின் சைவ சமயத்தவர் அதனைக் கைவிட நேர்ந்ததோ என்பதும் ஐயம் இவ்வாறுள்ளதொரு மரபு வழக்கிலிராவிடின் நாயனார் இவ்விண்ணப்பம் செய்யக் காரணமில்லை என்பதும் கருதப்படும். புறச்சமயம் புக்கு உழன்றவர்கள் மீளத் தம் சமயம் புகுந்தால் இவ்வாறுள்ள உடல் வருத்தும் கழுவா யொன்றும் வேண்டுவதென்பது இதனாலும் துணியப் படுவதாம். முன் 1332-1333 கீழ் உரைத்தவையும் பார்க்க.

தரிப்பதனுக்கு - உடலிற்றரிக்க - என்றும், உயிர் வாழத் தரியாத உடலையும் தரித்திருத்தற்கு என்றும் உரைக்க நின்றது.

நின் இலச்சினை - இலச்சினை - குறி - முத்திரை. இவை சூலமும் இடபமுமாம். விடையிலச்சினை யிட்ட திருவிளையாடலும் காண்க. இவ் விலச்சினைகள் பொறிக்கப்படுதலால் உடலானது முன்னைச் சமணத் தொடக்கினால் நேர்ந்த இழிபு நீங்கிச்