பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்209

 

சிவனதுடமையாகத் தூய்மை யாக்கப்படுகின்றது என்பதாம். கலப்புள்ள பொன்னைத் தீயிற்புடமிட்டபோது அது தூயபொன்னாதல் போலவும், குற்றமுடையவன் தந்த காணிக்கை, சிவன், பொருளாயினவழிக் குற்ற நீங்கிவிடுதல் போலவும் காண்க.

"நின் இலச்சினை இட்டருள்" - இது அத்திருப்பதிகக் குறிப்பும் கருத்துமாம்.

முன் நின்று - தூங்கானைமாடத்தினுள் இறைவர் திருமுன்பு நின்றுகொண்டு.

பாடுவார் - பாடுவாராகி - முற்றெச்சம். பாடுவார் - பாடுதலும் என மேல் வரும் பாட்டின் வினையெச்சத்துடன் முடிந்தது.

செழுந்தமிழ் மாலை - செழிப்பாவது நினைத்த பயனை நினைத்தவாறே நிறையத் தருதல்.

150

1416.(வி-ரை.) "பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம்" என்று - இது நாயனார் அப்போது அருளிய பதிகத்தின் தொடக்கக் குறிப்பு.

பொன்னார்ந்த - திருவடி - திருப்பதிகத்தில் "பொன்னார் திருவடி" என்ற மூன்று காலத்துக்குமுரிய வினைத்தொகைத் தொடரை ஆசிரியர் விரித்தருளினர். பொன் - அழகு - காட்சியாலும் பயனாலும் நலந்தரும் தன்மை. ஆர்ந்த என்றதனால் இத்தன்மை அத்திருவடிக்கு இன்றுள்ளதன்று; இனி வருவதுமன்று; க்ஷபண்டேயுள்ளது என்று நாயனார் கூறிய வினைத்தொகைப் பொருளை விரித்தவாறு.

திருவடிக்கு என் விண்ணப்பம் - "திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்" என்பது பதிகம். அதனுள் "ஒன்றுண்டு" என்பதனைத் தொகுத்தும், "என்" என்பதனை விரித்தும் கூறினார். இது "என்மேற்பொறி", "எனைப்பூசு" "என்னை என்றுகொள்" என்ற பதிகப்பகுதிகளிற் கண்டது. இவ்விண்ணப்பம் வகையால் ஒன்றுயுள்ளதனை "நின் இலச்சினை யிட்டருள் என்று" என மேற்பாட்டில் தொகுத்க் கூறினாராதலின் பதிகத்துட் கண்ட "ஒன்றுண்டு" என்பதனை இங்குக் கூறிற்றிலர். பதிகத்துள் இப்போது கிடைத்த மூன்றுபாட்டினுள்ளும் மூன்று வெவ்வேறான விண்ணப்பங்களாகக் காணப்படினும், அவையாவும் புறச்சமயத் தொடக்குண்டு அசுத்தமாயின உடலைத் தூய்மையாக்க இலச்சினையை வேண்டுகின்ற ஒன்றன்பாலே படுதல் காண்க.

எடுத்து - தொடங்கி முன்வைத்துக் காட்டி என்றலுமாம். விண்ணப்பங்கள் செய்யும் முறையும் காட்டியது காண்க. Headed : To the......An application என்ற நவீன வழக்கும் காணப்படும்.

எப்பொருட்கும் முன்னாகி முடிவாகி நின்றானை என்க. எல்லாப் பொருள்களுக்கு முன்னேயும் இருந்தவன் - பின்னேயும் இருப்பவன் - அவற்றினுள்ளே நிறைந்தும் நிற்கின்றவன் என்பது கருத்து. முன்னாகி என்றதனால் படைக்குந் தலைமையும், நின்றவன் என்றதனாற் காக்குந் தலைமையும், முடிவாகி என்றதனால் அழிக்குந் தலைமையும் ஆக முத்தொழிலும் பெறப்பட்டமை காண்க.

மூவிலையும் ஒரு தாளும் கொண்ட சூலம் கைக்கொள்ளுதல் முத்தொழிற்கும் முதல்வனாகிய சிவபெருமானைக் குறிக்கும். "அயில்கொண் முக்குடு மிப்படையார்" (1040), "கூரிலைய முக்குடுமிப் படையண்ணல்" (1053) என்றவிடங்களில் உரைத்தவை பார்க்க. "மூன்று மூர்த்தியு நின்றியலுந் தொழில், மூன்று மாகிய மூவிலைச் சூலத்தன்" (குறுந்தொகை). சூலம் பொறித்தல் - மூவர்க்கு முதல்வனது உடைமையாகத் தூய்மை செய்யப்பட்டது இவ்வுடல் என்பது குறிப்பதற்கு.

தன் ஆகத்து உமைபாகம் கொண்டானை - அருளே திருமேனியாக உடையவன் என்பது. அருள் அம்மையாரின் வடிவம். திருநீறும் பரையின் படிவமாம். "நீற்றுப் பதிக நிகழ்ந்துங் காலை, மாற்றுப் பரையின் வரலா றாகும்" என்றதும், "பராவண மாவது நீறு" என்ற தேவாரமும் காண்க. திருவடி நீற்றினைப் பூசும் படி வேண்டுதல் அருட் சத்தியைப் பெறவேண்டுதலைக் குறிப்பதாம்.

சங்கரன் - சுகத்தைச் செய்பவன். விடை யிலச்சினையைப் பொறிக்கும்படி வேண்டுதல் சுகங்கொடுக்க வேண்டும் குறிப்புடையது.