பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்21

 

பெண்கள் குழும் வீதிகள்; ஆட்டும்...பலகாட்டும் அவர்கள் ஏறி உகைக்கும் மணிகளிழைத்த பல ஊசல்களைக் காட்டாநிற்கும்; புலர்...பொழுது - குமரி இருள் புலர்தற் குரிய நீலநீறம் காட்டும் வைகறைப்பொழுதானது; உழவர் ஒலி காட்டும் - உழவு தொழிலிற் செல்வோரது கம்பலையைக்காட்டும்; கலநீடு...வளங்கள் - பல பண்டங்களும் நிறைந்த மனைகள் அளவுபடாத வளங்களைக் காட்டும்.

(வி-ரை.) காட்டும் என்பன பலவும் சொற்பின் வருநிலை.

வயல் நீலமலர் காட்டும் - என்க. நீலமலர்கள் வயல்களிற் பூக்கின்றன
என்பது.

மைஞ்ஞீலம் - மைதீட்டிய நீலமலர்போன்ற கண்கள். "பாலிற் கிடந்த நீலம் போன்று" (திருவிடை .- மும் - கோ - 1). நீலம் என்பது ஞீலம் எனவந்தது. எழுத்துப் போலி.

நீலம் மதிகாட்டும் அலர் - நீலத்தையும் மதியையும் காட்டுகின்ற தாமரை மலர். அலர் - தாமரை மலர். தாமரை மலர்போன்ற முகத்தையுடைய பெண்கள். நீலம் - மதி - அலர் - ஆகுபெயர்கள். "தேமல ரளகஞ் சூழும்சிலமதி தெருவுகுழும்" (553) என்றது
காண்க.

நீடும் மறுகு-நீண்ட வீதிகள். தெருக்கள் வளைவின்றி நீண்டிருத்தல் நகரத்துக்குச் சிறப்பு.

ஆட்டும் மணி ஊசல் - பிறர் ஆட்டாமல் தாமே முன்னும் பின்னும் உகைத்தலால் ஆடுவது ஊசலாட்டின் இயல்பு.

இவ்வாறு தொடர்பு படுத்தாது, மை நீலம் மதிகாட்டும் - மையுடைய நீல மலர்களைப் (மலர் போன்ற கண்களை) பெண்களின் மதிபோன்ற முகம் காட்டும் எனவும், அலர் - அகலமாகிய என்று கொண்டு அகன்ற நீண்ட வீதிகள் பல ஊசலைக்காட்டும் எனவும் கூட்டி உரைத்தலுமாம். உருவகப் பொருளின்றி, மதி - சந்திரன், மைஞீலம் காட்டும் - நீலம்போன்ற கறையினைப் புலப்படுத்தும் என்று கூறுவாருமுண்டு.

இருள் புலர் நீலம் காட்டும் பொழுது என்க. செறிந்த கரிய இருள் மெலிந்து நீலநிறமாகக் காட்டுகின்ற நேரம். பொழுது - வைகறைப் பொழுது உழவர் ஒலி காட்டும் என்க. அதிகாலையில் எழுந்து உழவர் தமது தொழில் செய்கின்றனர் என்பதாம். உழவர்கள் மிக்க நாடும் ஊரும் உடைய சரிதமாகலானும் சரிதமுடைய நாயனார் வேளாளராதலானும் இதனைத் தேற்றம்பெறக் கூறினார். உழுவரின் கடமைப் பாட்டினையும் உணர்த்தியபடி. "வினைச், செயல்புரிவை கறையாமக் குறியளக்க வழைக்குஞ்செங் குடுமிவாரணம்" (1049) என்ற கருத்தும் காண்க.

வளங்கள் - மனைகாட்டும் என்க. கலநீடுதல் - பல பண்டங்களும்
மலிந்திருத்தல்.

நீலம் வயல் காட்டும் - என்பது பகற்போதினையும், மறுகாட்டு மணியூசல் - என்பது இரவின் முன் நேரத்தையும், இருள் - நள்ளிரவினையும், - புலர் நீலம் - பின் இரவினையும், பொழுது - வைகறையினையும் குறிப்பால் உணர்த்தி நின்று, அந்நாட்டு நிகழ்ச்சிகளையும், மகளிர் விளையாட்டு - ஆடவர் தொழில் - போது போக்கு முதலிய பலவற்றையும் கூறிப்போந்த அமைதியினையும் கண்டுகொள்க. பெண்கள் இரவில் ஊசலாடிப் போதுபோக்குவது மரபு என்பது திருக்கோவையார் முதலிய அகப்பொரு ணூல்களுட் காணப்படும். பைந்தோகை துயில்பயிலம், சினைவளர் வேங்கைகள் யாங்கணின் றாடுஞ் செழும்பொழிலே" (154) (திருக்கோவையார்). இவ்வாறன்றிப் பெண்கள் பகலில் உரிய வேறு தொழிலன்றி ஊசல் முதலியன ஆடுவதும், இரவில் பலவகைக் களியாட்டயர்தலும் இந்நாண் மரபுகளாயின.

14