பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்211

 

என்ற திருவாசகக் கருத்தைக் கருதுக. கூற்று - சமண்தொடக் குண்டவன் என்ற சொல் என்பது சதாசிவ செட்டியார் குறிப்புரை. இச்சையுண்டேல் - எனது விண்ணப்பம் திருவுளத்துக் கிசையுமாகில். "வேண்டி நீயா தருள் செய்தா யானு மதுவே வேண்டி னல்லால்" என்ற திருவாசகக்கருத்து ஈண்டுச் சிந்திக்கற்பாலது. "If your Honour pleases" முதலியனவாகக் கூறும் நவீனர் வழக்கும் காண்க. பொறி - பொறித்து வைத்தருள்க. பொறித்தல் - அடையாளம் மாறாதபடி அழுத்தல். "வயனங்கண் மாயா வடுச்செய்தான்" (திருவாசகம்), "அடையாளம் படவொருவ னடித்தகொடுஞ் சிலைத்தழும்பு" (திருவிளை - புரா - மண்சு - பட - 79) முதலியவை பார்க்க. கடந்தை - பெண்ணாகடம் என்ற தலப்பெயர்; மருவி வந்தது; குடந்தை என்பது போல. தூங்கானை மாடம் - கோயிலின் பெயர்; சாந்தை யயவந்தி என்பதுபோல. சுடர்கொழுந்து - சுவாமிபெயர். -(2) சிறுத்தொண்டன் - தொண்டர்களுட் சிறுவன் - கடையவன். என் நினைந்தான் என்று - இவனது தகுதிக்கு மேற்பட்ட எவ்வெவையோ நினைந்தனனே என்று கருதி. பிணிநோய் - பிணிப்பாகிய உடலும் அதனுள் தொழுநோய் போன்று கலந்த சமணத் தொடக்கும் குறித்தன. உன்மேற் பழி கலக்கும் - தகுதியற்றவனாயினும் வந்தடைந்த தொண்டனைக் காவல் புரிந்து வாழவைக்காமல் நீத்துவிட்டபழி உன்மேற்சாரும்; காதல் செய்வார் தேவனாதலின் என்க. திருவடி நீறு எனைப் பூசு - அருணிறைவின் அடையாளமாகிய திருநீற்றை என்னைப் பூசும்படிசெய். -(10) படவும் - படும்படி. பனிமால்வரைபோல் இடபம் - "அங்கண் வெள்ளிமால் வரையிண் டாமென வணைந்தோர், சிந்தை செய்திடச் செங்கண்மால் விடை" (திருநா - புரா - 378) என்பது இக்கரத்தை விளக்குவதாம். வெள்ளைநிறமாகிய உருவம்பற்றி யெழுந்த உவமம். இடபத்துக்குரிய அடைமொழி; இலச்சினையைப் பற்றியதன்று. என்னை ஏன்று கொள்ளாய் - இடபம் பொறித்தலாற் றூய உடம்பினனாக ஆக்கி எனது பணிவிடையை இந்த உடம்பின்கண்ணே ஏற்றுக்கொள்க. ஏன்று கொள்ளுதல் - ஏற்றல். இத்திருப்பாட்டுக்கள் மூன்றியையும் யாவரும் பயின்று விண்ணப்பித்துப் பயனடையத்தக்கார்.

தலவிசேடம் :- இது திருப்பெண்ணாகடம் எனப்படும். பெண் - தேவ கன்னியார்; ஆ - காமதேனு; கடம் - வெள்ளையானை; இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது; புள்ளிருக்குவேளூர் என்பது போல.

தூங்கானைமாடம் என்ற கோயிலின்பெயர் - அதன் அமைப்பினால் போந்த பெயர். ஒரு யானை படுத்திருப்பது போலும் வடிவாக இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது காணலாம். கோயிலின் முன்புறம் யானையின் முகம் போலுயர்ந்தும், பின்புறம் யானையின் பின்பாகம்போலப் பருத்து வட்ட வடிவமாயும் அமைந்துள்ளது. இதனைக் "கடந்தைத் தடங்கோயில்" என்பது பிள்ளையார் தேவாரம். கருப்பக் கிருகத்தினைச் சுற்றி மூன்று சாளரங்கள் உள்ளன. இஃது இக்கோயிலின் சிறப்பமைதி. அறுபான்மும்மை நாயன்மார்களுள் "கைதடிந்த வரிசிலையான்" என்று புகழப்பட்ட கலிக்கம்ப நாயனார் தொண்டு செய்து பேறுபெற்ற தலம். திருநாவுக்கரசு நாயனார் விண்ணப்பித்தபடி அவர் தோள்களில் சூலமு மிடபமும் பொறிக்கப் பெற்ற வரலாறு புராணத்துட் கூறப்பட்டது. சைவ சித்தாந்த சந்தான பரமாசாரியராகிய மெய்கண்ட தேவநாயனாரின் தந்தையார் அச்சுதகளப்பாளர் வாழ்ந்த திருத்தலம். சைவ சந்தானாசாரியருள் ஒருவரானமறைஞானசம்பந்தர் அவதரித்த தலமுமாம். சுவாமி - சுடர்க்கொழுந்து நாதர். அம்மை - கடந்தை நாயகி. பதிகம் 2.

இது - விழுப்புரம் திருச்சிராப்பள்ளி வழி இருப்புப் பாதையில் பெண்ணா(க)டம் என்னும் நிலையத்திலிருந்து மேற்கே மட்சாலைவழி ஒருநாழிகை யளவில் அடையத்தக்கது. திருவெருக்கத்தம்புலியூரிலிருந்து வடக்கே விருத்தாசலம் கற்சாலையில் 3 நாழிகை யளவில் உள்ள நேமத்திலிருந்து மேற்கே மட்சாலையில் மூன்று நாழிகை யளவில் சென்றடைவது முன்னாள் வழி. (விருத்தாசலத்துக்குத் தென்மேற்கில் 11 நாழிகை வழி. கற்சாலை).