தேங்காவின் - பூஞ்சோலைகள். பூக்களின் தேன் நிறைந்திருத்தலும் தேன்கூடுகள் நிறைந்திருத்தலும் குறிக்கத் தேங்கா என்றார். முகிலுறங்கும் - சோலைகளின் செறிவினாலும் மரங்களின் உயர்ச்சியினாலும் எப்போதும் முகில்கள் தங்குதற் கிடமாவன என்பது. தங்குதலை உறங்குதல் என்றதுதற்குறிப்பேற்றம். சமாதியணியுமாம். "உரிய பொருளன்றி யொப்புடைப் பொருள் மேற், றரும்வினை புணர்ப்பது சமாதியாகும்", "அஃறிணை மருங்கினும் மறையப்படுமே" என்பதிலக்கணம். சுடர்க்கொழுந்தை - பூங்காவின் - என்பனவும் பாடங்கள். 154 1420.(வி-ரை.) வண் தமிழ் மென்மலர் மாலை - இந்த அடைமொழிகள் நாயனார் திருவரத்துறையிலும் திருமுதுகுன்றத்திலும் அருளிய திருப்பதிகங்களின் சிறப்புக் குறிப்பன. வளப்பம் - வண்மை - தமிழ்ச்சிறப்பு - மென்மை - மாலை யாந்தன்மை என்ற இவை பலவுங் கண்டுகொள்க. மென்மை - மலர்களினும் மென்மையுடையனவாய் யாவரானும் அறிவால் நுகரப்படும் இன்பமுடைமை. மருங்கு உள்ள...தானங்கள் கும்பிட்டு - பதிகள் - தலங்கள். தானங்கள் - அத்தலங்களின் கோயில்கள். பதிகளிலும் - முன் சொன்ன அரத்துறையும் திருமுதுகுன்றமு மென்றவற்றோடு இவையும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. தனி - ஒப்பற்ற. விடையார் - இடபக் கொடியினையும் இடப ஊர்தியினையும் உடையவர். "ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்ப" (புறம்). மேவி இடங் கொண்டருளும் தானங்கள் என்றது பொருந்திய வெளிப்பட்டுவீற்றிருக்கும் இடமாகிய திருக்கோயில்களை என்றபடி. "நேய மலிந்தவர் வேடமும், ஆலயந் தானு மரனெனத் தொழுமே" என்ற சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரத்தில் "அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்" என்று ஆசிரியர் ஏதுக்கூறினமை காண்க. மெய்யுணர் வுடையார்க்கப் பகுப்பின்றி எங்கணும் பரமேசுரனெனைக் காண்டலே பொருத்த முடைமையானும், நின்ற திருத்தாண்டக முதலியவற்றுள் அவ்வாறோதுதலானும், திருவுருத்திரத்துட் பகுப்பின்றி உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையுந் தனித்தனி யெடுத்தோதி வழிபாடு கூறுதலானும், ஈண்டிவற்றை மாத்திரையே விதந்து கொண்டோதிய தென்னையோ?" எனின், "அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரின் நெய்போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய் போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத்தரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் பரமேசுர னெனக்கண்டு வழிபடுகவென மேற்கொண்டது" எனவும், "விறகிற்றீ, கடைந்துழி வேறாய் விளங்கும்; அல்லுழி விளங்குவதன்று. அது போல, உயிர்கட்குப் புத்தி முத்தி யளித்தற் பொருட்டுக் காணப்பட்ட தாவரவுருவின்கட் கலப்பினால் அதுவேதானாய் அதுவன்றி வேறு பொருளுமா மியல்புடைய முதல்வன், அதுவே தானாய்க் காணாதார்க்கத் தம்மால் அறியப்பட்ட தொரு மந்திர சாந்நித்திய மில்வழி ஆண்டு விளங்காது நின்று அம்மந்திர சாந்நியத்தியத்தால் விளங்கித் தோன்றும் பொருளாம். அவ்வாறன்றி அதுவே தானாய்க் காணப்பெறும் உண்மைத் தவமுடையார்க்கு எப்போதும் அப்படியே விளங்கித் தோன்றான் கொல்லோ? என்க" எனவும் அங்கு உரை விரித்தனர் எமது மாதவச் சிவஞான முனிவர். தானங்கள் கும்பிட்டு - ஈண்டுப் பதிகளிலும் தனிவிடையாரைக் கும்பிட்டு என்னாது, தனிவிடையார் மேவியிடங்கொண்டருளும் தானங்கள் கும்பிட்டு என்ற கருத்துப்பற்றி மேலுரைத்தவற்றைக் கருதுக. விடையாரென்றே அவர் மேவும் தானங்களைக் கண்டு கும்பிட்டு என்க. ஆளுடைய பிள்ளையார் திருமுதுக்குன்றத் தலத்தை மலர்தூவி வணங்கிப் பதிகம்பாடியருளியதும், அவ்வாறு வருவன பிறவும் கருதுக. "சொல்லிருக்குக் குறட் டுணைமலர் மொழிந் தேத்தி" என்பது ஆளுடையபிள்ளையார் புராணம். |