தானங்கள் - இவை திருஎருக்கத்தம்புலியூர் திருக்கூடலையாற்றூர் முதலாயின். குணதிசை மேல் - நிவர்க்கரையே - கிழக்கு நோக்கி நிவாநதியின் கரைவழியாகவே. நிவா என்பது "குறியதன் கீழாக் குறுகலும்" என்ற விதிப்படி நிவா - நிவவு என்றும் வரும். தில்லைக்கு வடபால் புவனகிரி நகர்ப்பக்கம் ஓடும் வெள்ளாறு நிவா எனப்படும். சுவேத நதி என்பர் வடவர். 155 திருநெல்வாயில் அரத்துறை திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| கடவு ளைக்கட லுள்ளெழு நஞ்சுண்ட, வுடலு ளானையொப் பாரியி லாதவெம் அடலு ளானை யரத்துறை மேவிய, சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
1 | கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை, மலையொப் பானை மணிமுடியூன்றிய அலையொப்பானையரத்துறைமேவிய, நிலையொப்பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
திருச்சிற்றம்பலம் திருவரத்துறை - பதிக்குறிப்பு :- சிவபெருமான் ஒப்பற்றவர். கருத்துஞ் சொல்லுங் கடந்தவர். ஆயின் அவரை நாம் கருதும் பொருள்களிலும் காணும் பொருள்களிலும் ஒன்றாகவைத்துக் கண்டு தொழற்பாலதேயன்றி வேறுவழியில்லை என்பதாம். "விண்ணோரு மறிகிலார்" என இப்பதிகமுழுதும் வருவது காண்க. ஒப்பாரியிலாதார்க்கு ஒப்பனைபலவும் கொல்லிய ஒப்பற்ற கருத்துடைய பதிகம். பதிகப் பாட்டுக்குறிப்பு - கடவுள் - உணர்வையும் சொல்லையும் கடத்தவர். "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்." நஞ்சுண்ட உடலுளான்; நஞ்சினை உண்டும் சாவாததோடு அதனை அடையாளமுற வைத்துக்கொண்ட உடலுடையவர். ஒப்பாரி - ஒப்பு - "அவரன்ன ஒப்பாரி" (குறள்), "ஓர் உவமனில்லி" (தாண்டகம்), "தனக்குவமை யில்லாதான் (குறள்), என்றவை காண்க. அடல் - நினைத்தபோது வெளிபட்டு நினையாதபோது மறைந்திருக்கும் வல்லமை. சுடர் உளான் - ஞானச்சுடர். இங்குச் சுயஞ்சோதியாய் ஒளி வீசும் சிவலிங்கத் திருமேனியினுள்ளே நின்று ஒளி தருபவன். மூர்த்திமான் என்பது ஆகமம்.- (2) விரும்பு - விரும்பப்படும் பொருளுட்சிறந்தது. சுரும்பு - தேன் வண்டு. "வண்டாய்க் கிடந்து மணங்கொள்வ னீசனே" என்றபடி அன்புநுகரவருபவன்.- (3) ஊறு - அருள் ஊற்று. (4) பகல் - ஞாயிறு. இருள் - இரவு. நிலா - மதி. பரப்பு - இவற்றின் பரப்பு. இரப்பு - இரவலன். சுரப்பு - சுரக்குமிடம்; ஊற்று.- (5) ஐ - தலைவன். கை - கையும் ஊன்றுகோலும்.- (6) மீனல் - வாழ்வினை மின் போலக் கணத்தில் மறையும்படி செய்பவன். கனல் - கன்னல்; தீ என்றலுமாம்.- (7) அன் - அன்னை. தலவிசேடம் :- நெல்வாயில் அரத்துறைஎன்ற தலம் நடுநாட்டுத் தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் முதலில் வைத்தெண்ணப்படுவது. இது கொங்குநாட்டெல்லை தாண்டி மேற்கிருந்து நடுநாட்டுக்குள் வந்தபோது முதலில் காணவுள்ளதலம். திருஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் முதலியவற்றை இறைவர் அருளிய தலம். அவர் புராணம் 185 முதல் 229 வரை பாட்டுக்கள் பார்க்க. மூவர் பாடலும்பெற்ற பெருமையுடையது. நிவா நதியின் வடகரையிலுள்ளது. நிவாவின் கரையில் உள்ள பெருமைபற்றி ஆளுடையபிள்ளையாரும் நம்பிகளும் தமது தேவாரங்களிற் போற்றியமை காண்க. நம்பிகளது இத்தலத் தேவாரமும் மேற்காட்டிய அரசுகளது திருப்பதிகத்திற் போல, யாக்கை நிலையாமை முதலிய உலகநீதிகளும், இறைவனது எங்கு நிறைந்துங் காணொணாத தன்மை முதலிய ஞான உண்மைகள் பலவும் நிறைந்துள்ளது. திருப்புகழும் பெற்றதலம். திருப்புகழின்ஆளுடைய பிள்ளையார் சிவிகை முலியன பெற்ற செய்தி பாராட்டப்பட்டது காண்க. சுவாமி - அரத்துறை நாதர். அம்மை - ஆனந்த நாயகி. பதிகம் - 3. |