னும் - ஐம்புலச் சேட்டை அடியாரை அணுகாமற் காத்தவன். "பொறிவாயி லைந்தவித்தான்" (குறள்) என்ற கருத்துமாம். மாத்து - பெருமை. "மால்பிரமன் னறியாத மாத்தானை" (நம்பிகள் - தக்கேசி - வலிவலம்). செருக்கு என்று கொண்டு செருக்கை அவித்து என்றலுமாம் -(8) துறவாதே யாக்கை துறந்தான் - இயல்பாகவே பாசங்களி னீங்கியவன். பிறவாதே யெவ்வுயிர்க்குந் தானேயாகி - "கருவினா லன்றியே கருவெலா மாயவன்" (பிள்ளையார் - கொல்லி - தென்குடித் திட்டை - 3). அனவரதம் - எப்போதும்.- (10) இகழ்ந்தானைப் புகழ்ந்தான் - முரண்அணி. புகழ்ந்தான் என்பது பாடல் கேட்டிரங்கி ஏற்று வரங்கொடுத்தான் என்ற பொருளில் வந்தது. மலைமகளையும் - மாலினையும் ஒரு பாகம் வைத்தவன். அர்த்தநாரீசர் - சங்கரன் நாராயணர் என்னும் மூர்த்தங்கள் காண்க. தலவிசேடம் .- திருமுதுகுன்றம். இது பழமலை, விருத்தாசலம், விருத்தகிரி முதலிய பல பெயர்களாலறியப்படும். "மூத்தா யுலகுக்கெல்லாம் முதுகுன்றம்" (நம்பிகள் தேவாரம்) என்றபடி உலகத்தில் மலைகள் படைக்கப்படுவதன் முன் சிவன் படைப்பிலே உண்டாக்கப்பட்ட மலையாதலின் இப்பெயர் பெறும். மூவர் தேவாரமும் பெற்ற பெருமையுடையது. ஆளுடைய பிள்ளையார் இதன் வழியில் அடையும்போதும், இதனை வலஞ்செய்தபோதும், தலத்கைதத் தரிசித்த போதும், தனித்தனி பதிகங்கள் பாடியருளிய பெருமை பெற்றது. பிரமன், அகத்தியர், சுவேதன் என்ற அரசன் முதலாயினார் பூசித்துப் பேறுபெற்ற தலம். தேவர் முனிவர் முதலியோர் சிவனைத் தியானித்துப் பொழிந்த ஆனந்தக் கண்ணீரே ஆறாகப் பெருகித் திருமணிமுத்தாறாக வந்தது என்பது தலபுராண வரலாறு. இத்தலத்தில் இறப்பவர்கட்கு இறைவன் மந்திர உபதேசம் செய்தும், இறைவியார் இளைப்பாற்றியும் பிறவி வெப்பம் தீர்க்க இவ்வாறு இங்கு இறந்தார்குக் முத்திதரும் தலமாதலின் இது விருத்தகாசி எனவும்படும். ஆளுடைய நம்பிகள் இங்குப் பெருமானைப் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன்பெற்று அவற்றைத் திருமணிமுத்தாற்றிலேயிட்டுத் திருவருளால் திருவாரூரிற்பாடிக் கமலாலயத் திருக்குளத்தில் வடகீழ்த் திசைப் படியில் வரக்கொண்டு எடுத்தனர். அவர் புராண வரலாறு ஏயர்கோன் புராணத்தில் 107 - 109, 127 - 139 பாட்டுக்களிற் காண்க. சுவாமி - பழமலைநாதர். அம்மை - பெரிய நாயகி. ஆறு - திருமணி - முத்தாறு - மரம் - வன்னி - பதிகம் - 11. இத்தலம்பற்றித் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்கள். இது விருத்தாசலம் என்ற தென்னிந்திய இருப்புப்பாதைச் சந்தி நிலயத்தினின்றும் நாழிகை யளவில் அடையத் தக்கது. 1421.(வி-ரை.) ஆனாத சீர் - என்றும் குறையாத சிறப்பு. மாபுராணங்களாலும் மற்றை உபபுராணங்களாலும் பேசப்படும் ஏனைத்தலங்கள் போலன்றி, இத்தலம், இறைவனது வாக்காகிய புண்டரீகம், மாண்டூக்கியம் என்ற உபநிடதங்களாகிய வேதங்களாலும், "அவனே தானே யாகிய வந்நெறி, யேகனாகி யிறை பணி" நின்ற ஆசாரியார்களது திருவாக்காகிய தேவார திருவாசக முதலிய தமிழ் வேதங்களாலும் பேசப்பட்ட நித்தியமாகிய சிறப்பு. "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும், சிறப்பர் வாழ்" எனவும், "செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்" எனவும், "அன்னம் பாலிக்கும்" எனவும் முக்காலத்துக்கும் பொதுவாக நிகழ்காலத்தாற் கூறிய தமிழ் வேதத்தின் பயனாக என்றைக்கும் குறையாத சிறப்புடன் விளங்குவது இத்தலம் என்க. இப் புராணத்தைத் தோற்றுவித்துத் தந்தருளியது இத்தலத்தின் சிறப்பேயாதலும் காண்க. இங்கு ஆடுகின்ற அந்தனது அருட்கூத்தின் சீர் என்றும் குன்றாத இயல்புடையதாதலும் கருத்து. |