ஆனாத சீர் என்பதனை முதனிலைத் தீபமாகக் கொண்டு, தில்லை என்பதனோடும், அம்பலம் என்பதனோடும், சடையார் என்பதனோடும், அடி என்பதனோடும் தனித்தனி கூட்டி உரைக்க நின்றது. ஏனைச் சிறப்புக்கள் தலவிசேடத்துட் காண்க. தில்லை - தலப்பெயர். தில்லை என்ற தலமரத்தினாற் போந்தது. அம்பலம் - திருச்சிற்றம்பலம். இறைவன் அருட்கூத்தாடும் இடம். பொன் மன்றம். வான் ஆறு - கங்கை. புடைபரத்தல் என்றது வெளியே போந்து பெருகி உலகை அழிக்காமல் சிறு வடிவினதாய் ஒடுங்கி அச்சடைக்கற்றையின் புடையே பரவி நிற்பது என்றதாம். மலர் - கொன்றை மலர். ஏனை ஆத்தி - தும்பை முதலியனவுமாம் எனினும் அடைமொழியின்றி வந்த விடத்துச் சிறப்பாயுரிய கொன்றையினையே குறிக்கும் என்ப. அடிவணங்கி.....பயன் கொள நினைந்து - பொற்றாடொழ - "ஊனடந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாரும்" என்று இக்கருத்தைப் புராண முகப்பில் ஆசிரியர் தீட்டி வைத்தமை காண்க. ஊனின்றி உயிரும், உயிரின்றி உடலும் பயன் பெறாவாதலின் ஊனாலு முயிராலும் உள்ள பயன் என்றார். ஆல் உருபுகள் முறையே கருவி - கருத்தாப் பொருள்களில் வந்தன. "ஊனடைந்த உடம்பின் பிறவி" என்ற கருத்துமிது. ஆண்டுரைத்தவை பார்க்க. "உயிர் இயக்கியவாறே உடம்பு அதன் வழித்தாய் ஒற்றுமைப்பட நிற்பினும், யாத்திரை சேரல் கைத்தொண்டு செய்தல் முதலியன உடம்பையின்றி உயிருக்கு அமையாமை கருதியும், சிவபிரானைத் தரிசித்தலும் தரிசித்தமாத்திரத்துப் பேரானந்த மடைதலும் உயிரானேயன்றி உடம்பாலமையாமையின் ஊனாலு முயிராலும் என வேறுபிரித்துக் கூறினார்" என்பது ஆறுமுகத் தம்பிரானார் உரை. "உடம்பை வளர்த்தே னுயிர்வளர்த்தேனே" என்பர் திருமூலதேவ நாயனார். "எடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால், மனித்தப்பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே" என்று இத்திருத்தலத்தை யடைவதுபற்றி நாயனார் அருளியதும், திருவங்கமாலைக் கருத்துக்களும் காண்க. புலியூர் - புலிக்கால் முனிவர் பூசித்துப் பேறுபெற்றமையாற் போந்த பெயர். 156 வேறு 1422. | நாவுக் கரசரு மிருவர்க் கரியவர் நடமா டியதிரு வெல்லைப்பான் மேவித் தலமுற மெய்யிற் றொழுதபின், மேன்மே லெழுதரு விழைவோடுங் காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதி ராடக் கடிகமழ் கமலஞ்சூழ் வாவித்தடமலர் வதனம்பொலிவுறு மருதத்தண்பணை வழிவந்தார். |
(இ-ள்.) நாவுக்கரசரும் - திருநாவுக்கரசு நாயனாரும்; இருவர்க்கு....தொழுதபின் - பிரம விட்டுணுக்களுக்கு எட்டாத சிவபெருமான் அருட்கூத்தாடுகின்ற திருவெல்லையினைச் சென்று சேர்ந்து நிலம் பொருந்த மெய்யிற் றொழுதபின்னர்; மேன்மேல்....விழைவோடு - மேலும் மேலும் பொங்கி எழுகின்ற ஆசையுடனே; காவில்...தண்பனை - சோலைகளில் களித்த மயில்கள் மகிழ்வுற்று எதிரெதிராக ஆட, மணங்கமழும் தாமரைகள் நிரம்பிய தடாகங்களின் மலர்களாகிய முகங்கள் விளங்குகின்ற மருதத்தைச் சார்ந்த குளிர்ச்சியுடைய வயல்களின் பக்கமுள்ள; வழிவந்தார் - வழியே வந்தனர். (வி-ரை.) திரு எல்லைப்பால் மேவி - திருஎல்லை என்பது தில்லை நகரத்துக்கு ஒரு காத தூரத்தில் நாற்புறமும் உள்ள அமைப்பு. "தில்லை மல்லலம் பதியினெல்லை வணங்கி" (238) என்றதுவும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |