1280. | தலத்தின்கண் விளங்கியவத் தனிப்பதியி லனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடிநாப்பண் விலக்கின்மனை யொழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர்தங் குடிவிளங்கும். |
(இ-ள்.) வெளிப்படை. உலகத்தில் விளங்கிய அந்த ஒப்பற்ற பதியில், எவ்வித நன்மைகளிலும் வழுவதா ஒழுக்கத்தில் நிற்கும் குடிகளுள்ளே, குற்றமற்ற இல்லறத்தினுடைய மேம்பட்ட நிலையில் உள்ள, வேளாளர் குலத்தினுள் வரும் பெருமையுடைய குறுக்கையர் குடி விளங்குவதாகும். (வி-ரை.) தலம் - உலகம் என்ற பொருளில் வந்தது. நாடு என்றலுமாம். அனைத்துவித நலம் - அமைய வேண்டுவனவாய் உலக வழக்கானும் நூல்வழக்கானும் கருதப்பட்ட எல்லாவகை நலங்களும். முற்றும்மை தொக்கது. வழுவாத - தவிர்தலில்லாத. குலம் - பெரும் பிரிவையும், குடி - அதனுட்பட்ட சிறு பிரிவையும் குறிக்கும். நடைமரபிற் குடி நாப்பண் - அந்நாட்டில் எல்லாக் குலக்குடிகளும் நல்லொழுக்கத்திற் றவிர்தலில்லாது நடப்பன; அவற்றுள் - என்க. "துகளில்லா நன்மைநிலை யொழுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கி" (1267), "ஒழுகுவன வழுவிலறம்" (1278) என முன்னர்க் கூறியவை காண்க. மனை ஒழுக்கத்தின் மேதக்கநிலையாவது இல்லறத்துக் குரியனவாய் விதிக்கப்பட்ட எல்லாவற்றினும் நின்று அவற்றுள் மேம்பட்ட சிவதருமங்களிலும் சிறந்து விளங்குதல். ஏனைக் குலத்தவர்களும் இல்லறத்தில் ஒழுகுவோர்களாயினும் வேளாண் குலத்தவர் ஒழுகும் இல்லறம் சிறப்புடைய தென்பது, அவர்களது குலத்துக்குரிய வேளாண்மையின் றிறத்தினாலே தம் முயற்சியின்றியே பல உயிர்களும் உண்டு வாழப்பெறும் தன்மையாலும், பிறவாற்றாலும் அறியப்படும். பெருமைக் குறுக்கையார்தம் குடி - குறுக்கையர்குடி வேளாளர் குலத்தில் உள்ள உட்குடிகள் பலவற்றுள் ஒன்று. குடியைக் கோத்திரம் எனவும், உட்குடியைப் பிரவரம் எனவும் வழங்குவது வடவர் வழக்கு. "மறையோர் தம்முட் பெருமனைவாழ், தரும நிலவு காசிபகோத் திரத்து" (1215) என்றது காண்க. இங்கு வேளாளர் மரபு பற்றிக் கூறவந்த இடமாதலின் அவர் வழங்கும் குடி என்ற சொல்லாற் கூறிய இயைபு காண்க. விளங்கும் - எக்காலத்தும் விளங்குவது. நடைமருங்கு குடி - என்பது பாடம். 15 1281. | அக்குடியின் மேற்றோன்ற லாயபெருந் தன்மையினார், மிக்கமனை யறம்புரிந்து விருந்தளிக்கு மேன்மையினார், ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பி னுளரானா ருளரானார், திக்குநில வும்பெருமை திகழவரும் புகழனார். |
16 (இ-ள்.) வெளிப்படை. எல்லாத் திசைகளிலும் நின்று நிலவும் பெருமை விளங்கவரும் புகழனார் என்ற பெரியவர்., அந்தக் குடியின் பெருந்தலைவராகிய பெருந்தன்மையினையுடையவர், மேம்பட்ட இல்லறத்தைப் புரிந்து விருந்தளிக்கும் மேன்மையையுடையவர், சுற்றத்தார் வளரும் பெருஞ் சிறப்பில் உள்ளவராயினார்; ஆதலின் அவரே உள்ளவராயினார். |