கின்ற இடங்களின் பக்கங்களில்; வனமென மிக்கு உயர் கழை அளவில் - நெருங்கிக் காடுபோல மிக உயர்ந்த மூங்கிலின் அளவாக; பெருகிட வளர்......சொரிவன - பெருக வளரும் கரும்புகள் பெருத்து முதிர்ந்த கணுக்களில் முத்துக்களைச் சொரிகின்றவை; பெரியோர்......பொழிவன என - பெரியாராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாரது திருவேடத்தினைக் கண்டு உள் உருகி அன்புமிகுதியினாலே கண்ணீர் பொழிவன போல; முன்புவள வயலெங்கும் உள - முன்பு வளமையுள்ள வயல்களிலெங்கும் உள்ளன. (வி-ரை.) படுகரில் தாமரைகள் பூத்துள்ளன; முதிய எருமைகள் அந்நீரினுள்ளே சென்று புதுமலர்களை மேய்கின்றன; அதன் பக்கத்தே கரும்புகள் மூங்கில் போலச் செறிந்தும் உயர்ந்தும் வளர்ந்து கிடக்க அவற்றின் பருத்த கணுக்கள் வெடித்து முத்துச் சொரிகின்றன; அந்தக் காட்டிசி நாயனாரது திருவேடங்கண்டு அன்பினாற் கண்ணீர் சொரிவது போன்றன என்க. முளரிப்படுகர்களும் அயலில் கழையென வளர் இக்கும் நீர்ச் செழிப்பையும், நாட்டு நிலவளம் முதலியவற்றையும் குறிக்கின்றன. முளரிப்படுகர் என்றது நீர் வளங் காட்டிக் கரும்பு பெருகுதற்குக் காணரங் கூறியவாறு. முதுமேனிகள் புதுமலர் மேயும் - "மருமேவு மலர்மேய" (1273) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. மந்த மதியினவாகிய மேதிகளும் மணமும் குணமும் அறிந்து புதுமலர்களை விரும்பி மேய்வன என்பதனால் அவற்றினும் மேம்பட்ட அறிவு நிலையுள்ள பிராணிகள் விசேடித்த அறிவுடன் விளங்குமென்ற சிறப்பும், மேதிகள் மேய்ந்து வயிறு நிறைத்துக் கொள்ளுமளவு புதுமலர்கள் நிரம்புவன என்று நாட்டுச் சிறப்பும் கூறியவாறு. முதுமேதிகள் - வயதின் அனுபவ முதிர்ச்சியினாற் கண்டு என்பது குறிப்பு. கழை அளவிற் பெருகிட வளர் இக்கு - "காடெல்லாங் கழைக் கரும்பு" (67) என்றவிடத்துரைத்தவை பார்க்க. இக்குப் பெருகிப் புடைமுதிர் தாளம் சொரிவன - புடை - இங்குப் பக்கங்களில் உள்ள கணுக்கள் குறித்தது- முத்துக்கள் பிறக்குமிடங்கள் இருபது என்ப. அவற்றுள் கரும்பும் ஒன்று. "வயன்மென் கரும்பிற் படுமுத்தும்" (492) என்ற விடத்துரைத்தவையும் பிறவும் பார்க்க. முதிர்புடை என்றும், சொரிவன - பொழிவன என - என்றும் கூட்டுக. முததுக்களைச் சொரிபவை, கண்டு உருக்கிக் கண்ணீர் பொழிபவை போன்றன என்பது மெய்யும் தொழிலும் பற்றி வந்த உவமையொடு கூடிய தற்குறிப்பேற்றம். பெரியயோரவர் திருவடிவைக் கண்டு உருகிக் கண்புனல் பொழிவது அன்புனிலக்கணம். "நேய மலிந்தவர் வேடமும்.....அரனெனத் தொழுமே" என்ற சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரத்திற் கண்டபடி அடியார் திருவேடத்தைக் கண்டபோது பரமேசுரனெனவே கண்டு அன்பு கூர்ந்து அகமுருகி வழிபடுதல் வேண்டு மென்பதுமுறை. "ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்தே, கூசிமொழிந் தருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே" என்ற சிவஞான சித்தியாருங் காண்க. சிவனை வழிபடு முறையெல்லாம் அடியார் திருவேடத்துக்கு மொக்கும். நாயனாரது திருவேடம் கண்டார்க்கு அன்பையுண்டாக்கும் தன்மையுடையதென்று திருவேடத்தினது சிறப்புக் குறிக்கப்பட்டது. தரளஞ் சொரிவன - பரிவுறு புனல்கண் பொழிவன என - என்பது ஆசிரியரது சிவக்கண்ணுக்குத் தாவரங்கள் முதலிய எல்லா விடத்தும் சிவமும் அடியார் நிலையுமாய்த் தோன்றும் அன்பியல்பு பற்றி எழுந்ததென்க. "மரங்களுமா குதிவேட்குந் தகையவென (திருஞான - புரா - 7), "பத்தியின் பால ராகிப் பரமனுக் காளா |