பக்கம் எண் :


222திருத்தொண்டர் புராணம்

 

"பிறவி.....அணையுமின்!" என்று - இது அங்கு நந்தனவனங்களின் மரக்கிளைகளிலிருந்து குயில் கூவும் பொருள். விடுவீர்! - பிறவிப் பாவநெறிகளை விடும் எண்ண முடையீர்களே!. எண்ண முடையவர்களாயின் என்றும், விடுங்கள் என்றும் உரைத்தலுமாம். விடுவீர் - அணையுமின் என்க. இருவினை....பறிவுற்றிட பிறவியில் இருவினையும் பெருகுகின்றன; அதனால் உம்மைக் கட்டிய பாசம் மேலும் பெருகி வலுக்கின்றது; அது பறியுண்டு போகும்படி. பிறவிப் பவநெறி என்பது படாமாயின் பாவம் என்பது பவம் எனக் குறுக்கல் விகாரம் என்றாதல், பிறவிப்பவம் - பவம் - பிறப்பு என ஒரு பொருளின் மேல்வந்த இருமொழிச் சொற்கள் என்றாதல் கொள்க. பிறவி - "ஊனடைந்த உடம்பின் பிறவி" என்றபடி உடலைக் குறித்தலால் மாயா மலமும், இருவினை - கன்ம மலமும், பாசம் - ஆணவ மலமும் குறித்தன. இருவினை - நல்வினை தீவினை என்ற இரண்டும் பிறவிக்கேதுவாவன. ஆதலின் சிவநெறி யணைதலொன்றே பாசம் பறிவுறுதற்கு வழி எனப்பட்டது. பிறவியும் வினையும் ஆணவத்தைச் சார்ந்தே உயிரைப் பந்தித்தலால் பிறவிப் பவநெறி - இருவினை பெருகித் தொடர் பாசம் என்று பாசத்தொடு தொடர்புபடுத்தி வைத்தார். பிணி - பிணிப்பு. முதனிலைத் தொழிற்பெயர். நோய் என்றுகொண்டு பிறவிநோய் குறித்த தென்றலுமாம்.

பெரியவர் - அணைகின்றார்; இது நல்ல சமயமாதலின் நீவிரும் அணைவீராயின் அவரைத் தரிசித்து, அந்த நற்பயனால் அருட்கூத்தனையும் கண்டு, பிறவி யறுதற்கு வழிசெய்து கொள்வீர் என்று தொடர்புபடுத்தி உரைக்கவும் நின்றது. இப்பொருளில் கண்டார் என்ற வினைக்கு அணைகின்ற அவர் என்ற எழுவாய் வருவிக்க.

சூழ் சினைமிசைப் பயில் குயில் என்க. பயிலுதல் - அவ்விடத்தில் சேர்ந்து பழகுதலும் இவ்வாறு கூவுதலும் பயின்ற என்க. மணிவாசகப் பெருமானார் அருளிய குயிற்பத்து என்ற உபதேசத்தைக் கேட்டு அந்தப் பரம்பரையில் வந்து அவ்வாறே கூவிப் பயின்ற என்றலுமாம். "எழில் பொழில் குயில் பயில்" என்ற ஆளுடைய பிள்ளையாரது திருத்தருமபுரத் தேவாரமுங் காண்க.

தருப்பல நிலையிற் பொலிவுறு திருநந்தனவனம் - தருப்பல - என்பன நந்தவனங்களில் கோட்டுப்பூக்களுக்காக வைக்கப்படும் பூமரங்கள். இவை "வன்னிகொன்றை" (240) என்ற திருப்பாட்டில் முன்னர் வகுத்துக் கூறியுள்ளாராதலின் இங்குப் பலதரு எனத் தொகுத்துக் கூறினார். நந்தனவனங்களிற் கோட்டுப் பூக்கள் பெறும் மரங்களை வைத்தல் பெறும்பயனும் நீடித்தபயனும் தருமாதலின் அவற்றை ஆசிரியர் பெரிதும் விதந்து கூறியருளுவது காண்க. "பித்தர்க்குப் பத்தராகி யரும்புநன் மலர்கள் கொண்டு" "பூமாலை புனைந் தேத்தி" என்றபடி கைத்தொண்டு விடாது செய்யும் நாயனார் அத்திருத்தொண்டுபற்றிய திருநந்தன வனங்களை விரும்பிக்கண்டனர் என்பது. ஆளுடைய நம்பிகளும் இவற்றை விரும்பிக் கண்டு பணிந்து சென்றதும் அவர் முன்னை நிலையில் "வள்ளல் சாத்து மதுமலர் மாலை" தொடுத்து எடுத்து அணைந்தும், அதன் பொருட்டுப் பல நாளும் திருநந்தனவனத்திற் சென்று மலர் கொய்தும்வந்த முன்பழக்கம் பற்றியதாமென்க. கோட்டுப் பூக்களைக் கூறியதனால் இனம்பற்றி ஏனையவகையும் இருத்தல் உடன்கொள்ளப்படும். இவைகளை முன்னர் (240) விரித்தமை நினைவு கூர்க.

திருநந்தனவனம் எதிர்கண்டார் - நெற்பணையவை பிற்படும் வகை அணைகின்ற அவர்க்கு நந்தனவனங்கள் எதிரிற் காணப்பட்டன என்பதனால் செல்லும் வழியில் பலப்பல பொருளிகளிருப்பினும் சிவமும் சிவச்சார்பு பற்றிய பொருள்களுமே பெரியோர் கண்ணுக்குப் புலனாவன என்ற உண்மையை விளக்குவதாம். ஞாயிற்றின்