பக்கம் எண் :


224திருத்தொண்டர் புராணம்

 

எதிர் வந்து அரகரவென்றே சிவமுன் பயின்மொழி பகர்கின்றன - முன் பலகாலும் அடியவரைக்கண்டு சொல்லிய பழக்கத்தால் அரகர என்று சிவமொழிகளைச் சொல்லின. அரகர என்று முன்னே தொடங்கிக்கொண்டு வேதங்களையும் திருப்பதிகங்களையும் சொல்வன என்றலுமாம். "பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசை கேட்டு, வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலை யாமே" என்ற ஆளுடையபிள்ளையார் திருவாக்கும், "வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந், தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங், கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்" (93) என்றதும், ஆண்டுரைத்தவையும் காண்க.

சிவமுன் பயின்மொழி - அரகர என்ற சிவநாமத்தை முன்சொல்லி முன் பயின்ற - பழகிய - மொழிகள் என்றலும் குறிப்பு. தில்லையைச் சாரும் எண்ணிறந்த அடியார்கள் சொல்லக்கேட்ட பழக்கத்தால் கிளிகளும் பூவைகளும் சிவமொழி முழக்கின என்பது. "சிறையாரு மடக்கிளியே" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரக் கருத்தும் இங்கு நினைவு கூர்தற்பாலது. வளர்சிறை என்றதனால் சிறைப்படுத்திச் சிறகரிந்தனவன்றி இயல்பாய் வளரும் சிறகுடையவை என்பதும் குறிப்பு.

சிறுமென் - சிலபூவை - என்பனவும் பாடங்கள்.

160

1426.

அஞ்சொற் றிருமறை யவர்முன் பகர்தலு
         மவருந் தொழுதுமு னருள்கூரு
நெஞ்சிற் பெருகிய மகிழ்வுங் காதலு
         நிறையன் பொடுமுறை தடுமாறச்
செஞ்சொற் றிருமறை மொழியந் தணர்பயி
         றில்லைத் திருநக ரெல்லைப்பான்
மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை
         மணிவா யிற்புறம் வந்து ற்றார்.

161

(இ-ள்.) அஞ்சொல்....தொழுது - அழகிய சொற்களையுடைய திருமறைகளை அவர்முன்பு அவ்வாறு அவை சொல்லுதலும் அவரும்தொழுது; முன் அருள் கூரும்.....தடுமாற - முன்னமே அருள் நிறைந்த தமது திருமனத்தில் மேலும் பெருகிய மகிழ்ச்சியும் காதலும் நிறைந்த அன்புமாகிய இவற்றினாலே சொற்கள்தடுமாற; செஞ்சொல்.....வந்துற்றார் - செவ்விய சொற்களையுடைய திருமறைகளை ஓதும் அந்தணர்கள் பயில்கின்ற திருநகரின் எல்லைப்புறத்தில் மேகங்களாற் பொலியும் நீண்ட மதிலாற் சூழப்பட்ட மேற்குத்திசை மணிவாயிலின் புறத்தே வந்து சேர்ந்தனர்.

(வி-ரை.) அஞ்சொற்றிருமறை - முன்பாட்டில் "அரகர வென்றே சிவமுன் பயின்மொழி" என்ற அவை. வேதங்களும் திருப்பதிகங்களுமாம். அவருந் தொழுது - சொல்பவை கிளிகளும் சிறு பூவைகளுமேயாயினும், அவை சிவமொழிகளைச் சொல்லியபடியால் சிவனடியாராந் தன்மை பெற்றன என்று தொழுதனர். சிவபூசைக்காகும் பொருள்தரும் தூய உயிர்கள் என்று கொண்டு, தாவரங்களே யாயினும் நந்தனவனத்தைப் பணிவொடு தொழுத நாயனார், சிவமொழிகளையே பயின்று இயங்கும் இவ் வுயிர்வருக்கங்களைப் பணிதல் வியப்பாமோ? இக்கிளியும் பூவைகளும் முன்கன்ம விசேடத்தாலே இத்தலத்திற் பிறந்தும் வாழ்ந்தும் தரிசித்தும் கேட்டும் சொல்லியும் சரிக்கும் பேறுபெற்ற உயர்ந்த பிறவிகள் என்று தொழுது என்க. அன்றியும் சிவமொழிகளைக் கேட்டலும் சிவம் வெளிப்படத் தொழுதல் இயல்பின் நிகழுமென்க.


இராஜராஜ சோழர் திருநாரையூரில் உள்ளது


சிதம்பரம்- மேலைக்கோபுர வாயில் - கற்பகப் பிள்ளையார் சந்நிதியுடன்