ஆளுடைய பிள்ளையார் "தில்லைசூழ் நெடுமதிற் றென்றிரு வாயினே ரணித்தாக" வந்தனர் (திருஞான - புரா - 153) என்பதும் காண்க. அணிகூறும் - மகிழ்வுறு - பொலிதரு - என்பனவும் பாடங்கள். 161 1427. | அல்லற் பவமற வருளுந் தவமுத லடியா ரெதிர்கொள வவரோடும் மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின் வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார், கல்வித் துறைபல வருமா மறைமுதல் கரைகண் டுடையவர் கழல்பேணுஞ் செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர் சிவமே நிலவிய திருவீதி. |
162 (இ-ள்.) அல்லற் பவமற...எதிர்கொள - துன்பந் தருகின்ற பிறவியறும்படி உதவுகின்ற தவத்தையே தமக்கு முதலாகக் கொண்ட அடியவர்கள் தம்மை எதிர்கொள்ள; அவரோடும்.....வழிபுக்கு - அவர்களுடன் கூடிச்சென்று (அவர்) செழுமையாகிய நீர்மணம் வீசும் பக்கத்தில் உள்ள திருவாயிலின் வழியே புகுந்து; கல்வித் துறை.....கரைகண்டு - பெரிய வேதங்கள் முதலாகிய பல கல்வித் துறைகளையும் கரை கண்டவர்களாய்; உடையவர்...திருவீதி - யாவரையும் அடிமையாக உடையவராகிய கூத்தப் பெருமானது திருவடிகளைப் பேணுகின்ற செல்வக் குடிகளாகிய தில்லைவா ழந்தணர்கள் நிறைந்த நல்ல மாளிகைகள் இடையே வளர்கின்ற சிவத்தன்மையே நிலவிய திருவீதியினை; எதிர்தொழுது அணைவுற்றார் - எதிரிற்கண்டு தொழுது சேர்ந்தனர். (வி-ரை.) முன்பாட்டிற் கூறியபடி வந்துற்றாராகிய அவர் என்ற எழுவாய் வருவிக்க. (அவர்) அடியார் எதிர்கொள - வழிபுக்கு - திருவீதி - எதிர்தொழுது - அணைவுற்றார் என்று கூட்டி முடிக்க. அல்லல் பவம் அற அருளும் தவம் - சிவபூசை. பவம் - பிறவி. அல்லற்பவம் - இன்பம் போலக் காட்டித் துன்பமே தருவது இப்பிறவி என்பது அறிஞர் துணிபு. ஆனால் அதனைப்போக்கி இன்பம் தருவதாகச் செய்வது சிவபூசை என்பதாம். "தவமே புரிந்திலன் றண்மல ரிட்டுமுட் டாதிறைஞ்சேன்.....திருவடிக்காம், பவமேயருளு கண்டாய்" - திருவாசகம். தவம் முதல் அடியார் - தவத்தையே தமக்கு முதலாகக் கொண்டவர்கள். முதல் - மூலதனம். தபோதனர் என்பது காண்க. "கழல் ஏத்தும் செல்வம்" முதல் - முதன்மையாக என்று கொள்ளலுமாம். அருளும் முதல் என்று கூட்டித் தம்மை அடைந்தார்களது பிறவியறும்படி அருள்செய்யும் அடியாராகிய திருநாவுக்கரசு நாயனார் என்றுரைத்து, அணைவுற்றார் என்பதற்கு எழுவாயாக்கி உரைப்பாருமுண்டு. இப்பொருளில் முதல் என்றது முதன்மையானவர் என்ற பொருள் தரும் என்பர். தவமுதல் - தவத்தினால் முதன்மை பெற்றவர். "தவமுதல்வர் சம்பந்தர்" என்புழிப்போல என்பர். மாமறை முதல் பல கல்வித்துறை வரு கரை கண்டு என்க. பல கல்வித் துறையும் - என முற்றும்மை தொக்கது. வரு - பெறப்படும். துறை - என்றதற் கேற்பக் கரைகண்டு என்றார். குறிப்புருவகம். கரை கண்டு என்பது "கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்" (திருவாசகம்) என்றபடி கலைஞானங்கள் முற்றும் கைவரப் பெற்று அவற்றின் முடிபும் தேறி, அவையே பொருள்என்று அவற்றுள்ளே |